சர்வைவர் தொடர்: மகளை முனைவர் பட்டம் பெற வைத்த கழிப்பறைத் தொழிலாளி!
இந்த வார சர்வைவர் தொடரில், கோயம்புத்தூரைச் சேர்ந்த கழிவறை துப்புரவுத் தொழிலாளியான பசுபதம், தனது வேலையில் ஏற்பட்ட களங்களையும், அதை எப்படி பாசிட்டிவாக எதிர்கொண்டார் என்பதை பற்றியும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.
இந்த வார சர்வைவர் தொடரில், கோயம்புத்தூரைச் சேர்ந்த கழிவறை துப்புரவுத் தொழிலாளியான பசுபதம், தனது வேலையில் ஏற்பட்ட களங்களையும், அதை எப்படி பாசிட்டிவாக எதிர்கொண்டார் என்பதை பற்றியும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.
எனது பெயர் பசுபதம், நான் கோவை முத்து மாரியம்மன் தெருவில் கழிப்பறையை சுத்தம் செய்யும் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்கிறேன். என் கணவர் துரை டைலராக பணியாற்றி வருகிறார்.
எங்களுக்கு மொத்தம் 4 குழந்தைகள் உள்ளனர். எல்லா பெற்றோரைப் போலவும் அவர்கள் நன்றாகப் படித்து நல்ல நிலைக்கு வர வேண்டும் என நாங்கள் விரும்பினோம். ஆனால் அதற்கு எங்களுடைய நிதி நிலை ஒத்துழைக்கவில்லை. ஆரம்பத்தில் நான்கைந்து வீடுகளில் பணிப்பெண்ணாகப் வேலை பார்த்தேன், மிகவும் கடினமாக உழைத்தேன். ஆனால் நான் வெகுதூரம் பயணிக்க வேண்டியிருந்தது, அதற்கு என் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை.
இந்த நிலையில் தான் எனது பகுதியில் உள்ள சமுதாயக் கழிப்பறையை பராமரிக்க இந்திய மனித குடியிருப்புகளுக்கான இந்திய நிறுவனம் (IIHS) மூலம் எனது பகுதி குழு உறுப்பினர்களால் எனக்கு வேலை வழங்கப்பட்டது. நான் உடனடியாக வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டேன்.
அன்றிலிருந்து முத்து மாரியம்மன் தெருவில் உள்ள பொதுக்கழிவறை பராமரிப்பாளராகவும், கழிவறை துப்புரவு பணியாளராகவும் பணிபுரிந்து வருகிறேன். அப்பகுதியில் வசிப்பவர்கள் நான் கழிவறையை நன்றாக பராமரிப்பதற்காக என்னை பாராட்டுகிறார்கள். அது எனக்குக் கூடுதல் நம்பிக்கையை அளிக்கிறது.
தேசிய மலம் கசடு மற்றும் கழிவுநீர் மேலாண்மை (NFSSM) அமைப்பின் ஒரு பகுதியாக இருக்கும் IIHS (Indian Institute for Human Settlements) ஆல் எனது பணிக்கு ஆதரவளிக்கப்பட்டது. இந்த கூட்டு நிறுவனம் சுகாதாரச் சங்கிலில் உள்ளடக்கத்தை உறுதி செய்கிறது.
நான் கழிப்பறையை சுத்தம் செய்யும் போது என் உறவினர்கள் என்னைப் பார்த்து சிரித்தனர். ஆனால் என்னைப் பொறுத்தவரை, நான் என்ன வேலை செய்தேன் என்பது முக்கியமில்லை, அதில் கடினமாக உழைத்து, என் வேலையில் நேர்மையாக இருந்தேன் என்பதை பெருமையாகக் கருதுகிறேன். இந்த வேலையில் எனது குழந்தைகளின் படிப்பிற்கு உதவ முடிந்தது.
இன்று எனது மூத்த மகள் திண்டுக்கல்லில் உள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி பட்டம் முடித்துள்ளார். எனது மற்ற எல்லா குழந்தைகளும் நல்ல நிலையில் உள்ளனர்.
ஒரு காலத்தில் எங்களைப் பார்த்து சிரித்த என் உறவினர்கள், இப்போது என் குழந்தைகளையும், அவர்கள் எட்டிய உயரத்தைப் பார்த்து ஆச்சர்யப்படுகிறார்கள். இப்போது நான் செய்யும் வேலையைப் பற்றி பெருமைப்படுகிறேன்.
தமிழில் - கனிமொழி