1 ரூபாயில் தையல் பயிற்சி: 1 கோடி பெண் டெய்லர்களை உருவாக்கும் முயற்சியில் Tailor Bro செல்வகுமார்!
விருதுநகரில் Tailor Bro என்ற பெயரில் தையலகம் நடத்தி வரும் செல்வக்குமார், கொரோனா தொற்று காலத்தில் தனது Youtube சேனல் மூலம் ஏராளமானவர்களுக்கு ஆன்லைனில் இலவசமாக தையல் கலையை கற்று கொடுத்துள்ளார். தற்போது 1 ரூபாய் மட்டும் பெற்றுக் கொண்டு, ஏழை எளிய மகளிரைத் தேடிச் சென்று தையல் கற்றுக் கொடுக்கிறார்.
'கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள், கவலை உனக்கில்லை ஓத்துக்கொள்' என்ற முதுமொழிக்கேற்ப பெண்கள் காலங்காலமாக வீட்டில் இருந்தே செய்யும் ஓர் சிறந்த கைத்தொழில் தையல் தொழிலாகும். இது பெரும்பாலான தமிழக இல்லதரசிகளின் சிறுதொழில் மட்டுமின்றி, இதுதான் அவர்களின் வாழ்வாதாரமேயாகும்.
சிலர் தொழில் முறையாகவோ அல்லது தங்களின் துணிகளையோ தைத்துக் கொள்ளக் கூட தையல் கற்பதுண்டு. பெண்கள் பலர் யாரையும் நம்பி வாழாமல் இருக்க டெய்லரிங் கற்றுக்கொண்டு தொழில் புரிவதும் உண்டும்.
பெண்கள் சுய தொழிலாக தையற்கலையை கற்றுக் கொண்டு தன் கையை மட்டுமே நம்பி, தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற நோக்கோடு, மகளிருக்கு மட்டும் 1 ரூபாய் கட்டணத்தில் தையல் பயிற்சி அளித்து வருகிறார் விருதுநகரைச் சேர்ந்த செல்வக்குமார்.
விருதுநகரில் ‘Tailor Bro’ (டெய்லர் ப்ரோ) என்ற பெயரில் தையலகம் நடத்தி வந்த செல்வக்குமார், கொரோனா பெருந்தொற்று காலத்தில் தனது Youtube சேனல் மூலம் ஏராளமானவர்களுக்கு ஆன்லைனில் இலவசமாக தையல் கலையை கற்று கொடுத்துள்ளார்.
மேலும், தற்போது வெறும் 1 ரூபாய் மட்டும் பெற்றுக் கொண்டு, ஏழை எளிய மகளிரைத் தேடிச் சென்று தையல் கலை பயிற்சி அளித்து வருகிறார்.
சமீபத்தில் DIGITALL AWARD 2022 விருது பெற்ற செல்வகுமார், தனது வாழ்க்கைப் பயணத்தை யுவர் ஸ்டோரி தமிழுடன் பகிர்ந்த கொண்டதார்.
டெய்லர் ப்ரோ ஆக உருவான செல்வகுமார்
செல்வகுமாரின் தந்தை அவரது தாயாரை கைவிட்டு விட்ட நிலையில், தையல் தொழில் மூலம் அவரையும், அவரது அக்காவையும் வளர்த்தார். இதனால் செல்வகுமாரும் சிறுவயதிலேயே தையல் கலையை கற்றுக் கொண்டுள்ளார்.
“எனது தாயார்தான் எனது தையல் கலை குரு. அன்று தொடங்கிய எனது தையல் கலைப் பயணம் இன்று வரை சுமார் 30 ஆண்டுகளாகத் தொடர்கிறது,” என்கிறார்.
டிக்-டாக் மூலம் தையல் கலையின் நுணுக்கங்களை வெளியிட்டு வந்த செல்வக்குமார், அதற்கு கிடைத்த ஆதரவைத் தொடர்ந்து, தனது யூடியூப் சேனல் மூலம் தையல் கலையை அனைவருக்கும் கற்றுக் கொடுக்கத் தொடங்கியுள்ளார். அதிலும், குறிப்பாக கொரோனா பெருந்தொற்று காலத்தில் அவர் போட்ட வீடியோக்கள் அவருக்கு பெரும் ஆதரவைப் பெற்றுத் தந்துள்ளது.
இவரது சேனலை தற்போது வரை சுமார் 9 லட்சத்து 23 பேர் வரை தொடர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்கள் முன்னேற 1 ரூபாயில் தையல் பயிற்சி
”ஏழை, எளிய மகளிருக்கு இலவசமாக தையல் பயிற்சி அளித்து அவர்களை வாழ்க்கையில் முன்னேற்ற வேண்டும் என்பதே என் குறிக்கோளாகும். இதற்காக என்னிடம் பயிற்சி பெறுபவர்களிடம் வெறும் 1 ரூபாய் மட்டும் பெற்றுக் கொண்டு, தையல் கலை பயிற்சி அளித்து வருகிறேன். 1 நபருக்கு 1 ரூபாய் என்ற கட்டணத்தில் இதுவரை நூற்றுக்கணக்கான பயிற்சி வகுப்புகளை தமிழகம் முழுவதும் சொந்த செலவில் நடத்தியுள்ளேன்,” என்கிறார் செல்வக்குமார்.
இவ்வாறு தமிழகம் முழுவதும் சென்று வகுப்புகளை நடத்தும்போது, சில நேரங்களில் அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மண்டபம், உணவு போன்றவற்றை ஏற்பாடு செய்து கொடுத்து விடுவார்களாம். அவ்வாறு இல்லாத பட்சத்தில் செல்வக்குமாரே தனது சொந்தப் பணத்தில் மண்டபத்தை வாடகைக்கு எடுத்து, பயிற்சி வகுப்புகளை எடுத்துவருவாராம்.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு எனது சகோதரி நாகஜோதி, அடிக்கடி என்னிடம் தையல் கற்றுத் தருமாறு கேட்பார். ஆனால், நான் அதனை விளையாட்டுத்தனமாக கருதி அவருக்கு கற்றுத் தரவில்லை. ஆனால், சில குடும்ப பிரச்னைகளால் அவர் தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவர்,
“நான் தையல் கலையை கற்றுத் தராததால், வாழ வழியின்றி, வாழ்வாதாரப் பிரச்னையால் உயிரிழப்பதாக குறிப்பிட்டு எழுதி வைத்துவிட்டு, இறந்திருந்தார். இது எனது மனதை மிகவும் பாதித்து விட்டது. இனி தமிழகத்தில் ஓர் பெண்கூட, இதுபோல கைத்தொழில் தெரியாமல், வாழ வழியின்றி தற்கொலை எனும் தவறான முடிவெடுத்து விடக்கூடாது என்ற எண்ணத்திலேயே யூடியூப் மூலம் அனைவருக்கும் இலவசமாக தையல் கலையை கற்றுத் தர தொடங்கினேன்,” என்கிறார் இந்த டெய்லர் ப்ரோ.
நேரில் கற்க விரும்புபவர்களுக்கு பீஸ் கட்ட வழியில்லை என பணம் ஓர் இடையூறாக இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் 1 ரூபாய் மட்டும் வாங்கிக் கொண்டு மகளிருக்கு தையல் கலையை கற்றுத் தருகிறேன் என்கிறார்.
தையல் பயிற்சியுடன் தையல் மெஷின்களும் ஏற்பாடு
செல்வகுமார் தன்னிடம் வறுமையில் தையல் கற்க வரும் பெண்களுக்கு தனது சொந்த பணத்தில் தையல் மிஷின்களையும் வாங்கிக் கொடுத்துள்ளார். இதுவரை இவர் 53 பேருக்கு தையல் மிஷின்களை வழங்கியுள்ளார்.
மேலும், தையல் கலை கற்பவர்கள் சந்தேகங்களைத் தீர்ப்பதற்கென்றே ஓர் செல்போனை வாங்கி, வாட்ஸ் அப் மூலம் தன்னிடம் சந்தேகங்களை கேட்பவர்களுக்கு 24 மணி நேரமும் விளக்கமளித்து வருகிறார். இது தவிர அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, லண்டன், சுவிட்சர்லாந்து போன்ற வெளிநாடுகளில் இருந்து ஆர்வமுடன் தையல் கலை கற்பவர்களுக்கு, அவர்களிடம் இருந்து ஓர் சிறு தொகையை பீஸாக பெற்றுக் கொண்டு கற்றுத் தருகிறார்.
”இவ்வாறு நான் வெளிநாடுகளில் இருந்து பீஸாக பெறும் பணம் மற்றும் எனது யூடியூப் சேனல் மூலம் கிடைக்கும் வருமானம் முழுவதையும் நான் தையல் கற்றுக் கொடுக்கவும், தையல் மெஷின் வாங்கிக் கொடுக்கவும் என சமூக சேவைகளுக்கே செலவு செய்து விடுவேன். நான் தைத்து சம்பாதிக்கும் பணம் மட்டும்தான் எனக்கும், எனது குடும்பச் செலவுகளுக்கும்,” என்கிறார்.
சமூக சேவையில் செல்வகுமார்
பூர்வீக வீட்டை விற்று, கொரோனா காலத்தில் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உணவளிப்பது, மாஸ்க் தைத்து இலவசமாக விநியோகம் செய்வது, இலவச தையல் மிஷின்களை வாங்கித் தருவது என சமூக சேவையில் ஈடுபட்டு வந்த செல்வக்குமார், கடந்த வருடம் மிகுந்த உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கையாக இருந்துள்ளார்.
அப்போது கடை, தையல் மெஷின்கள் என அனைத்தையும் விற்றுத்தான் வைத்தியம் பார்த்துள்ளார். அப்போது யூடியூப்பில் இவரிடம் தையல் கலை கற்ற ஆயிரக்கணக்கானோர் செய்த தீவிர பிரார்த்தனைதான் தன்னை மீண்டும் எழுந்து நடமாட செய்துள்ளது, என்கிறார் செல்வக்குமார்.
தற்போது உடல்நலம் தேறியுள்ள செல்வக்குமார் மீண்டும் தனது பயிற்சி மையத்தை கடந்த ஜூலை மாதம் திறந்துள்ளார். வங்கிகளில் லோன் கேட்டு விண்ணப்பித்துள்ளாராம். வங்கி லோன் கிடைத்ததும் மீண்டும் தையல் மிஷின்களை வாங்கிப் போட்டு, தொழிலை அபிவிருத்தி செய்யத் திட்டமிட்டுள்ளாராம்.
ஆனால், தற்போதும் 1 ரூபாயில் தனது இலவச பயிற்சியைத் தொடர்ந்துதான் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
1 கோடி இலவச தையல் பயிற்சி இலக்கு
பல்வேறு அமைப்புகளுக்காக இலவச தையல் கலை வகுப்புகளை எடுத்துள்ளேன். இதுவரை சுமார் 10 லட்சம் பேருக்காவது தையல் கற்றுக் கொடுத்திருப்பேன்.
“தமிழகத்தில் சுமார் 1 கோடி டெயலர்களை கண்டிப்பாக உருவாக்க வேண்டும் என்பதே எனது இலக்கு. அதனால்தான் இலவசமாகவும், 1 ரூபாய் கட்டணத்திலும் தையல் கற்றுக் கொடுக்கிறேன்,” என்கிறார்.
இப்பணிகளுக்காக நான் இதுவரை யாரிடமும் 1 பைசா கூட நன்கொடையாக பெற்றது கிடையாது. என்னிடம் தையல் பயின்ற ஆயிரக்கணக்கானவர்கள் இன்று டெய்லரிங் கடை வைத்து நல்ல நிலையில் இருப்பதை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, என்கிறார் செல்வக்குமார்.
தனது 1 கோடி டெய்லர்களை உருவாக்கும் லட்சியத் திட்டம் நிறைவேறும் வரை பிறந்தநாள், திருமண நாள், தீபாவளி, பொங்கல் எவ்வித பண்டிகைகளையும் கொண்டாடக்கூடாது என்ற வைராக்கியதுடன் செல்வக்குமார் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. பணத்தையும் மதிக்க மாட்டேன். உண்மையான அன்போடு மனிதர்களை மதிக்கவேண்டும் என்பதால், உண்மையான அன்பும், உயர்வான நட்போடும் உங்களை வாழ்த்துகிறேன் என்று தான் நான் அனைவரையும் வாழ்த்துவேன்.
”உலகில் எந்தவொரு பெண்ணும் வாழ்வாதாரப் பிரச்னையால், தன்னம்பிக்கையின்றி உயிரிழந்து விடக் கூடாது என்ற ஓரே குறிக்கோளுடன்தான் இந்த 1 கோடி டெய்லர்களை உருவாக்கும் லட்சியத் திட்டத்தை நடத்தி வருகிறேன். மகளிர் என்றும் தன்னம்பிக்கையுடன், தன் கையை நம்பி வாழ்ந்து வெல்ல வேண்டும்,” என்கிறார்.
செல்வக்குமாரிடம் தையல் கலை தொடர்பாக ஏதேனும் சந்தேகம் கேட்க விரும்புபவர்கள் அவரது வாட்ஸ் ஆப் எண்ணில் (90036 45841) தொடர்பு கொள்ளலாம். மேலும், அவரது யூடியூப் சேனலான Tailor Bro பார்த்து தையல் கலையை கற்றுக் கொள்ளலாம். 1 ரூபாய் கட்டணத்தில் அவரிடம் நேரடியாகவும் தையல் கலையை கற்றுக் கொள்ளலாம்.