ஏழைக் குழந்தைகளுக்கு இலவச கராத்தே பயிற்சி அளிக்கும் சிவகங்கை விவசாயி!
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்ற விவசாயி ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக கராத்தே பயிற்சி கற்றுக் கொடுத்து வருகிறார்.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்ற விவசாயி ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாக கராத்தே பயிற்சி கற்றுக் கொடுத்து வருகிறார்.
குழந்தைகளுக்கு குறிப்பிட்ட வயது வந்ததும் நீச்சல், சைக்கிள் ஓட்டுவது, நடனம், பாட்டு போன்றவற்றை கற்றுக்கொடுப்போம். ஆனால், இதில் ஒருசிலர் மட்டுமே தங்களது குழந்தைகளுக்கு தற்காப்பு பயிற்சிகளை கற்றுத் தருவது இல்லை.
ஆனால், சிவகங்கையைச் சேர்ந்த விவசாயி ஒருவர் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு கராத்தே பயிற்சி அளிப்பதோடு, ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாக கராத்தே கற்றுக்கொடுத்து வருகிறார்.
கராத்தே மாஸ்டரான விவசாயி:
சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி வட்டாரத்தில் அமைந்துள்ள குமாரகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவர் தனக்குச் சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் நெல், பருத்தி, மிளகாய் போன்ற பயிர்களை விளைவித்து வருகிறார். ஆடு, மாடு போன்ற கால்நடைகளையும் பராமரித்து வருகிறார்.
விவசாயி முத்து கிருஷ்ணன், விவசாயத்திற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் அளிக்கிறாரோ, அதே அளவிற்கு கராத்தே பயிற்சி கொடுப்பதிலும் ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறார்.
கராத்தேவில் சிட்டோரியா, சோட்டாகான், கெஜிரியோ, வாடோரியோ போன்ற 4 வகையான முறைகள் உள்ள நிலையில், சிட்டோரியா வகை பயிற்சியை மாணவர்களுக்கு பயிற்றுவித்து வருகிறார்.
ஏழை பிள்ளைகளுக்கு இலவச பயிற்சி:
35 வருட கராத்தே அனுபவம் வாய்ந்த முத்துக்கிருஷ்ணன், 1999ம் ஆண்டு முதல் குழந்தைகளுக்கு கராத்தே பயிற்சி அளித்து வருகிறார். கராத்தே ஆர்கனைசேஷன் ஆஃப் இந்தியா, தமிழ்நாடு விளையாட்டு கராத்தே டூ-அசோசியேஷன் ஆகியவற்றில் முறையாக பதிவு செய்துள்ளார்.
பரமக்குடி, இளையான்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சுற்றியுள்ள பள்ளிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்து வருகிறார். முத்துகிருஷ்ணன் சொந்தமாக நடத்தும் கராத்தே பயிற்சி பள்ளியில் தினந்தோறும் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். இதில் சுமார் 30 ஏழை, எளிய மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி கொடுத்து வருகிறார்.
“கராத்தே என்பது பணக்காரர்களுடையது என்பது போல் மாறி வருகிறது. தனியார் பள்ளிகளுக்கு பயிற்சிக்கு செல்லும் போது நிறைய குழந்தைகள் ஆர்வத்துடன் கற்றுக்கொள்வார்கள். ஆனால், அவர்களுக்கு தனியாக மாத, மாதம் பணம் செலுத்தி கராத்தே பயிற்சி எடுக்க வசதி இருக்காது. அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கிறேன். ஆர்வத்துடன் கற்றுக்கொள்ளும் அவர்கள் எதிர்காலத்தில் பலருக்கும் இந்தக்கலையை கற்றுக்கொடுப்பார்கள் என நம்புகிறேன்,” என்கிறார்.
ஏழைக் குழந்தைகளுக்கு பயிற்சி அளிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் அதில் திறமையான பிள்ளைகளை தேசிய அளவிலான கராத்தே போட்டிகளில் பங்கேற்க வைத்து, அவர்கள் வெற்றிகளைக் குவிக்கவும் உதவி வருகிறார்.
தற்போது பேப்பர், டி.வி. என எதைப் பார்த்தாலும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பிரச்சனைகள் குறித்த செய்திகள் வெளியாகி பெற்றோர்களை அச்சுறுத்தி வருகின்றன. இதற்கு தீர்வு கொடுக்கும் வகையில் தன்னிடம் பயிற்சி பெறும் பெண் குழந்தைகளுக்கு ஆபத்தான சூழ்நிலைகளில் இருந்து தப்பிப்பது எப்படி என்றும் பயிற்சி அளித்து வருகிறார்.
“தற்போதைய சூழ்நிலையில் பெண் குழந்தைகள் மீது பாலியல் ரீதியான வன்கொடுமைகள் அதிக அளவில் அரங்கேற்றப்படுகிறது. இப்போதெல்லாம் பெண்கள் இரவு பணிக்குச் செல்ல வேண்டியுள்ளது. பள்ளி, கல்லூரி, வேலை போன்ற விஷயத்திற்காக தனியாக வசிக்கின்றனர். எனவே, பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு சின்ன வயதிலேயே பெண் பிள்ளைகளுக்கு தற்காப்பு கலைகளை பயிற்றுவிக்க வேண்டும்.”
முத்துகிருஷ்ணனிடம் பயிற்சி பெற்ற ஏராளமான மாணவ, மாணவிகள் தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களை குவித்துள்ளனர். இதன் மூலம் கிடைத்த சான்றிதழ்கள் பலரது வேலைவாய்ப்பிற்கு உதவிகரமாக இருந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.