டெக்னாலஜியில் பணியாளர்கள் அடுத்தகட்ட வளர்ச்சி பெற பயிற்சி அளிக்கும் TalentSprint
தற்போது வளர்ந்து வரும் துறை எது என்றால் கேட்டால் பொதுவாக டெக்னாலஜி என கூறுவோம். ஆனால் டெக்னாலஜியில் பைனான்சியல் டெக்னாலஜி, எஜுகேஷன் டெக்னாலஜி உள்ளிட்ட பல பிரிவுகளில் கடந்த சில ஆண்டுகளில் பெரிய மாற்றம் நடந்திருக்கிறது.
தற்போது, எஜுகேஷன் டெக்னாலஜியில் பெரிய மாற்றங்கள் நடந்து வருகிறது. இந்தப் பிரிவில் செயல்படும் நிறுவனங்கள் சில யூனிகார்ன் பட்டியலில் இணைந்துள்ளன.
அதனால், டெக்னாலஜியை அதிகம் டொண்டு செல்ல, டீப் டெக்னால்ஜியை மாணவர்களுக்கு சொல்லிக்கொடுக்கிறது ஹைதராபாத்தை சேர்ந்த ’டேலன்ட் ஸ்பிரின்ட்’ (TalentSprint) எனும் நிறுவனம். இந்த நிறுவனத்தில் சில முதலீட்டாளர்கள் மற்றும் நெக்ஸஸ் வென்ச்சர்ஸ் பார்ட்னர்ஸ் உள்ளிட்ட முதலீட்டாளர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை என்.எஸ்.இ. அகாடமி (nse academy) வாங்கி இருக்கிறது. கடந்த நவம்பரில் இந்த பங்கு பரிவர்த்தனை நடந்தது. இன்னும் சில ஆண்டுகளில் 100 சதவீத பங்குகளை கையகப்படுத்த முடிவெடுத்திருக்கிறது. இது குறித்தும், TalentSprint பற்றியும் அதன் தலைமை பிஸினஸ் அலுவலர் கே.ஸ்ரீதர் யுவர்ஸ்டோரி தமிழிடம் பகிர்ந்து கொண்டார்.
தொடக்கக் காலம்
சென்னையில் பிறந்தவர் ஸ்ரீதர். பிஎஸ்இ கணிதம் படித்தவர். எஸ்.ஆர்.எஸ். பைனான்ஸ் நிறுவனத்தில் நிதிதுறையில் வேலை கிடைத்தது. அதனைத் தொடர்ந்து கேபிடல் மார்கெட்டில் வேலை பார்த்தார். இடையே ஏசிஎஸ் முடித்தார்.
ஹைதராபாத்தில் கார்வி நிறுவனத்தில் இணைந்தார். கார்வி நிறுவனத்தில் பல முக்கிய பொறுப்பு (வெல்த் மேனேஜ்மெண்ட், இன்வெஸ்மெண்ட் அட்வைசரி) கையாண்டார் ஸ்ரீதர். கார்வி நிறுவனத்தில் இருந்து வெளியேறும்போது வெல்த் மேனேஜ்மெண்ட் மற்றும் டிஸ்ரிபியூஷன் பிரிவில் இந்திய பிரிவுத் தலைவராக இருந்தார்.
1997- 2010-ம் ஆண்டு வரை கார்வி நிறுவனத்தில் இருந்தார். அதனை தொடர்ந்து சொந்தமான ஆலோசனை நிறுவனம் முன்நின்று நடத்தினார். அந்த சமயத்தில் ’TalentSprint ’ நிறுவனத்தின் மற்ற நிறுவனர்களைச் சந்திதிருக்கிறார்.
அந்த சமயத்தில் நிறுவனத்துக்குத் தேவையான நிதியை திரட்டுவதற்கான ஆலோசகராக மட்டுமே இருந்தார் ஸ்ரீதர். அதனைத் தொடர்ந்து நிறுவனத்தின் இணை நிறுவனராக உயர்ந்தார்.
”ஆரம்ப காலத்தில் கல்லூரியில் இருந்து வருபவர்களுக்கு பயிற்சி வழங்குவதில் இருந்து தொடங்கினோம். எங்களுடைய நெட்வொர்கில் பல டெக்னாலஜி நிறுவனங்கள் இருந்தன. அவர்களுக்கு நல்ல பணியாளர்கள் தேவை. கல்லூரி முடித்தவர்களை வேலைக்கு ஏற்ப பயிற்சி வழங்குவதுதான் திட்டம். மூன்று மாதங்கள் பயிற்சி வழங்கினோம். இதனைத் தொடர்ந்து வங்கித் தேர்வு மற்றும் அர்சு தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் பணியை செய்தோம். இந்த இரண்டும் சேர்ந்தே செய்துவந்தோம்,” என்றார்.
2016-ம் ஆண்டு அடுத்தகட்டத்துக்கு தயாரானோம். இதனை தொடர்ந்து நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட ஒரு டெக்னாலஜியில் அதிக பணியாளர்கள் தேவைப்பட்டது. உதாரணத்துக்கு அடுத்த ஆறு மாதங்களுக்கு பிறகு 1000 பணியாளர்கள் ஒரு குறிப்பிட்ட டெக்னாலஜியில் தேவை என்றால், நேரடியாக இந்தியா முழுவதும் உள்ள கல்லூரிகளுக்கு சென்று மாணவரளுக்கு பயிற்சி அளித்து நிறுவனங்களுக்கு வழங்கினோம்.
முன்பு செய்தது படிப்பு முடித்தவர்களுக்கு பயிற்சி வழங்கினோம். அதனை தொடர்ந்து கல்லூரியில் படிக்கும்போதே பயிற்சி வழங்குவதற்கான பணியை செய்தோம்.
அடுத்தக்கட்டம்
இதுவரை புதியவர்களுக்கு பயிற்சி அளித்தோம். அதனைத் தொடர்ந்து எந்த டெக்னாலஜிக்கு ஊழியர்கள் தேவையோ அந்த டெக்னாலஜிக்கு பணியாளர்களை தயார்செய்தோம். அடுத்த கட்டமாக ஏற்கெனவே ஐடியில் பணிபுரிந்து வருபவர்களுக்கு சிக்கல் இருந்தது. கிட்டத்தட்ட மிட்லைப் கிரைசஸ் என்று சொல்லலாம். டெக்னாலஜியில் இருந்து புராஜக்ட் மேம்பாட்டுக்கு சென்றுவிட்டார்கள்.
ஆனால், புராஜக்ட் மேனேஜ்மெண்ட் ஆட்டோமெஷன் ஆகிவிட்டது. அதனால் வேறு வழியில்லாமல் அடுத்த கட்ட டெக்னாலஜியை கற்றுக்கொள்ளும் சூழலுக்கு பணியாளர்கள் தள்ளப்பட்டார்கள்.
இதனால் வேலை செய்யும் பணியாளர்களுக்கு அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கான டெக்னாலஜியை சொல்லிக்கொடுக்கத் தொடங்கினோம். இதனை தொடர்ந்து நடுத்தர பணியாளர்களின் திறன் மேம்பாட்டுக்கு தேவையானவற்றை சொல்லிக்கொடுத்தோம்.
பின்னர், பிரத்யேக கோர்ஸ்களை உருவாக்கத் தொடங்கினோம். ஐஐடி, ஐஐஎம். இந்தியன் இன்ஸிடியூட் ஆப் சயின்ஸ் ஆகிய கல்வி நிறுவனங்களுடன் இணைந்து டீப் டெக்னாலஜி பிரிவில் புதிய கோர்ஸ்கள் வடிவமைத்து வேலை செய்யும் ஊழியர்களுக்கு வழங்கினோம். இவையெல்லாம் ஆறு மாதம் அளவுக்கு வார விடுமுறை நாட்களில் நடக்கும் பயிற்சி.
”பெரும்பாலும் மாணவர்கள், கல்லூரி முடித்தவர்கள் அல்லது ஏற்கெனவே வேலையில் இருப்பவர்கள்தான் எங்களுடைய இலக்கு. இதுவரை சுமார் 2 லட்சம் நபர்களுக்கு நாங்கள் பயிற்சி வழங்கி இருக்கிறோம், என்றார்.
ஏன் என்.எஸ்.சி அகாடமி
இந்தியாவை பொறுத்தவரை முதல் பெரிய Fin Tech நிறுவனம் என்றால் என்.எஸ்.இ. தான். பங்குச்சந்தையை மாற்றியதில் அவர்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது. அவர்களின் பயிற்சி நிறுவனம் என்.எஸ்.இ அகாடமி. அந்த நிறுவனம் ஃபின் டெக் துறைக்கு பெரும் திட்டங்களை வைத்திருந்தது.
அப்போது நாங்களும் இந்தத் துறையில் இருந்ததால் 70 சதவீத பங்குகளை என்.எஸ்.இ அகாடமி வாங்கியது. அடுத்த மூன்று ஆண்டுகளில் 100 சதவீத பங்குகளையும் என்.எஸ்.இ அகாடமி வாங்கும், நாங்கள் நிர்வாகக் குழுவில் தொடர்வோம் என்றார்.
ஐஐடி வழங்கும் கோர்ஸ் என்றால், நேரடியாக ஐஐடியில் சேர்ந்து படிக்கலாமே, ஏன் டேலண்ட் ஸ்பிரிட்க்கு வர வேண்டும் என்று கேட்டதற்கு விரிவாக பதில் அளித்தார் ஸ்ரீதர். வேலை செய்யும் பணியாளர்களுக்கு என்ன தேவை என்பதை கண்டறிவது நாங்கள்தான். தவிர எங்களுடைய டெக்னாலஜி மற்றும் மார்கெட்டிங் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதை விட இண்டஸ்ட்ரியுடன் நாங்கள் நேரடியாக தொடர்பு வைத்திருக்கிறோம்.
அதேபோல், ஐஐடி வசம் பேராசிரியர்கள், சிலபஸ் போன்றவை வாங்கிக்கொள்ள முடியும். இரண்டும் சேர்ந்தால்தான் அது வடிவமைக்கபப்ட்ட சர்டிபிகேட் வழங்கும் கோர்ஸ். கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் இலவசமாக பல திட்டங்கள் உள்ளன. இதுபோல பல சாதகங்கள் இருப்பதால்தான் கல்வி நிறுவனமும் நாங்களும் இணைந்திருக்கிறோம்.
பணியாளர்களுக்கு டெக்னாலஜி சார்ந்த கோர்ஸாக இருந்தால் ரூ.2 லட்ச ரூபாய் அளவுக்கு இருக்கும். நிர்வாகம் சார்ந்த படிப்பாக இருந்தால் 4 லட்ச ரூபாய் வரை கோர்ஸ் கட்டணம் இருக்கும். மாணவர்களுக்கு ரூ.50000 முதல் ரூ.1 லட்சம் வரை இருக்கும். இது சம்பந்தப்பட்ட கோர்ஸ்களை பொறுத்தது.
கோவிட் வந்த பிறகு பெரும்பாலான கற்றல்கள் இணைய வழிக்கு மாறின. ஆனால் கோவிட்டுக்கு முன்பு கூட எங்களுடைய வகுப்புகளில் 85 சதவீதம் அளவுக்கு இணையத்தில்தான் நடந்தன. மீதமுள்ளவைதான் நேரடியாக நடந்தன. உதாரணத்துக்கு ஐஐஎம்-ல் புரோகிராம் என வைத்துக்கொள்வோம். ஆறு மாதம் பகுதி நேர வகுப்பு அது. அப்போது முதல் சில வாரங்கள் நேரடியாக நடக்கும், கடைசி சில வாரங்கள் ஆன்லைனில் நடக்கும். தற்போது அனைத்தும் இணைய வழியில் நடக்கிறது, அவ்வளவுதான், என்றார்.
நிதி சார்ந்த தகவல் குறித்த கேட்டதற்கு பெரும்பான்மையான பங்குகள் என்.எஸ்.இ வசம் உள்ளது. மேலும், விரைவில் 100 சதவீத பங்குகளை வாங்க இருக்கிறது என்பதால் நிறுவனம் குறித்து தகவல்களை வெளியிட முடியாது என ஸ்ரீதர் குறிப்பிட்டார்.
திறன் மேம்பாடு அவசியமான ஒன்றுதான்!