கோவிட் தடுப்பூசி Covaxin ஆராய்ச்சி பின்னால் இருக்கும் தமிழக விவசாயி மகன்!
இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்துள்ள நிறுவனமான ‘பாரத் பயோடெக்’ நிறுவிய Dr.கிருஷ்ணா எல்லா.
இந்தியாவில் கோவிட்-19 முதல் தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தேசிய வைராலஜி நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆகியவற்றுடன் இணைந்து ஹைதராபாத்தில் உள்ள ‘பாரத் பயோடெக் நிறுவனம்’ இந்தத் தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்தின் பெயர் கோவாக்சின் (COVAXIN). இதை மனிதர்கள் மீது சோதனை செய்வதற்கு மருந்தகக் கட்டுப்பாடுத் துறை அனுமதி அளித்துள்ளது.
ஜிகா வைரஸுக்கு (Zika Virus) முதன் முதலில் தடுப்பூசி மருந்து கண்டுபிடித்தது பாரத் பயோடெக் நிறுவனம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணா எல்லா. இவரது பூர்வீக தமிழகம், சொந்த ஊர் திருத்தணி. நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த இவரது அப்பா ஒரு விவசாயி.
விவசாயப் படிப்பு முடித்துவிட்டு விவசாயத்தில் ஈடுபடுவதே இவரது திட்டமாக இருந்தது. ஆனால் குடும்பத்தின் பொருளாதார நிலை காரணமாக ‘பேயர்’ (Bayer) என்கிற நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். இந்நிறுவனம் மருந்து மற்றும் வேதிமப் பொருட்கள் தயாரிக்கிறது. இதில் விவசாயத் துறையில் பணியில் சேர்ந்தார் கிருஷ்ண எல்லா.
அந்த சமயத்தில் ரோட்டரியின் Freedom From Hunger என்கிற திட்டத்தின்கீழ் அமெரிக்கா சென்று மேற்படிப்பு படிக்க உதவித்தொகை கிடைத்தது. எனவே அமெரிக்கா சென்றார் கிருஷ்ணா. ஹவாய் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பை முடித்தார். 1995-ம் ஆண்டு இந்தியா திரும்பினார்.
“எனக்கு இந்தியா திரும்பும் எண்ணம் இல்லை. என் அம்மாதான் என்னை இந்தியாவிற்கு திரும்பவர அழைத்தார். அந்த சமயத்தில் இந்தியாவில் ஹெப்படைடிஸ் தடுப்பூசிக்கான தேவை இருந்தது. எனவே குறைந்த விலையில் ஹெப்படைடிஸ் தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கும் திட்டத்துடன் இந்தியா திரும்பினேன்,” என்று Rediff நேர்காணலில் அவர் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணா தன்னிடம் இருந்த மருத்துவ உபகரணங்களைக் கொண்டு ஹைதராபாத்தில் ஒரு சிறிய ஆய்வகத்தைத் தொடங்கினார். இதுவே ‘பாரத் பயோடெக்’ தொடக்கப் புள்ளியாக அமைந்தது.
இவரது நிறுவனம் 12.5 கோடி ரூபாய் திட்டத்தை முன்மொழிந்தது. இதன்படி ஹெபட்டைடிஸ் தடுப்பு மருந்தின் விலை ஒரு டாலராக நிர்ணயிக்கப்பட்டது. மற்ற நிறுவனங்களின் மருந்துகளின் விலை 35 முதல் 40 டாலர் வரை இருந்தது.
இவர்களது திட்டத்திற்குத் தேவையான நிதி கிடைக்கவில்லை. ஐடிபிஐ வங்கியில் 2 கோடி ரூபாய் கடன் பெற்று மருந்து தயாரித்தனர். நான்காண்டுகளில், அதாவது 1999-ம் ஆண்டு அப்போதைய குடியரசுத் தலைவர் மறைந்த அப்துல் கலாம் இந்த மருந்தை அறிமுகப்படுத்தினார்.
இந்நிறுவனம் நோய் தடுப்புத் திட்டத்திற்காக ஒரு மருந்து டோஸ் 10 ரூபாய் என்கிற விலையில் 35 மில்லியன் டோஸ் விநியோகித்தது. பின்னர் 65-க்கும் அதிகமான நாடுகளுக்கு 350-400 மில்லியன் டோஸ்களை விநியோகித்தது.
1996-ம் ஆண்டு மாசுப்படுத்தும் தொழிற்சாலைகள் இல்லாத பயோடெக் எஜுகேஷனல் பூங்கா அமைக்கும் திட்டத்தை அப்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் முன்வைத்தார் கிருஷ்ண எல்லா. விரைவில் அவருக்கு அனுமதியும் பூங்கா அமைப்பதற்கான இடமும் ஆந்திர அரசால் வழங்கப்பட்டது.
அவர் அமைத்த பூங்காவின் பெயர் ஜீனோம் வேலி (Genome Valley). இங்கு முதலில் பாரத் பயோடெக்கின் ஹெபட்டைடிஸ் தடுப்பு மருந்து தொழிற்சாலை அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள் அங்கே தற்போது செயல்பட்டு வருகின்றன.
டாக்டர் கிருஷ்ணா எல்லா நூற்றுக்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச விருதுகள் வென்றுள்ளார். ஜிகா வைரஸுக்கு உலகளவில் முதன் முதலாக தடுப்பூசி மருந்து கண்டுபிடித்த பெருமை கொண்டது இவரது பாரத் பயோடெக் நிறுவனம்.
“சாமானிய மக்களைச் சென்றடையும் விதத்தில் தடுப்பூசி மருந்து தயாரித்தால் தரம் குறைவாக இருக்கும் என்கிற குற்றம்சாட்டு எழும். ஆனால் தொழில்நுட்பம் சாமானிய மனிதர்களையும் சென்றடையவேண்டும் என்பதே எங்கள் நோக்கம். எந்த ஒரு மனிதருக்கும் சுகாதாரம் தொடர்புடைய தீர்வு கிடைக்காமல் போகும் நிலை ஏற்படக்கூடாது. இதற்காகத்தான் எங்கள் நிறுவனம் குறைந்த விலையில் நோய் தடுப்பூசி மருந்துகளை தயாரிக்கிறது,” என்கிறார் கிருஷ்ணா எல்லா.
ICMR மற்றும் NIV-ன் வழிகாட்டுதல்களுடன் பாரத் பயோடெக் நிறுவனம், கோவிட்-19 தடுப்பூசி மருந்தான ‘Covaxin' தயாரிப்பின் முதல் கட்டத்தை வெற்றிகரமாக அடைந்து, இரண்டாம் கட்டமான மனிதப் பரிசோதனைக்கு தயார் நிலையில் இருப்பதாக மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. அதன்படி, தேசிய மருந்தக ஆணையம் அனுமதி அளித்துள்ள நிலையில் இரண்டாம் கட்டம் அதாவது மருத்துவ பரிசோதனைகள், நாடு முழுவதும் இம்மாதம் துவங்கி அடுத்த சில மாதங்களுக்கு தொடரும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தகவல் உதவி: பெட்டர் இந்தியா, ரெட்டிப்