Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

ரூ.15 கோடி நிதி திரட்டிய ‘KiVi’ - தமிழக விவசாயிகளுக்கு துணைபுரியும் ‘அக்ரி-ஃபின்டெக்’

“எங்களிடம் இதுவரை 4,400 விவசாயிகள் இணைந்து உள்ளனர். ரூ.7 கோடிக்கு மேல் கடன் கொடுத்து இருக்கிறோம்” என்கிறார் கிவி நிறுவனர்களில் ஒருவரான ஜோபி.

ரூ.15 கோடி நிதி திரட்டிய ‘KiVi’ - தமிழக விவசாயிகளுக்கு துணைபுரியும் ‘அக்ரி-ஃபின்டெக்’

Saturday December 30, 2023 , 3 min Read

இந்தியாவில் விவசாயம் என்பது பெரும்பாலான மக்களுக்கு வாழ்வாதாரம் கொடுக்க கூடிய தொழில். ஆனால், வேளாண் தொழிலில் போதுமான அளவுக்கு டெக்னாலஜி, நிதி உள்ளிட்டவை சென்றடையவில்லை. தற்போது ‘அக்ரி-ஃபின்டெக்’ (Agri-Fintech) என்னும் பிரிவு வளர்ந்து வந்தாலும் இன்னும் பெரிய தேவை இருக்கிறது.

அக்ரி டெக், அக்ரி-ஃபின்டெக் பிரிவில் கணிசமான பங்களிப்பை பல நிறுவனங்களும் கொடுக்கின்றன. இதில் கிவி நிறுவனமும் ஒன்று. ‘கிஸான் விகாஸ்’ என்பதன் சுருக்கமே ‘கிவி’ (KiVi) என்று நம்மிடம் தெரிவித்தார் தமிழகத்தை பின்புலமாகக் கொண்ட இந்த நிறுவனத்தின் நிறுவனர்களுள் ஒருவரான ஜோபி.

இந்த நிறுவனம் சமீபத்தில் ரூ.15 கோடி அளவுக்கு நிதி திரட்டியது. ஐஐடி இன்குமேட்டர் நிறுவனத்தில் உருவான இந்த ஸ்டார்ட் அப்-பில் கேஸ்பியன் லீப், பைபர் செரிகா, ஒய்.ஏ.என். ஏஞ்சல் பண்ட் உள்ளிட்ட சில பண்ட்கள் முதலீடு செய்திருக்கின்றன.

kivi founders

என்ன செய்கிறது கிவி?

கிவி என்ன செய்கிறது என்பது குறித்து சில நாட்களுக்கு முன்பு நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஜோபி உடன் பேசினோம். பல விரிவான தகவல்களை பகிர்ந்துகொண்டார்.  

நாங்கள் அனைவரும் (நிறுவனர்கள்) கிராமப்புற மற்றும் நிதி சார்ந்த பிரிவில்தான் பல ஆண்டுகள் பணியாற்றினோம். முன்பை விட விவசாயத் துறைக்கு கடன் கிடைக்கிறது. ஆனால், அதுமட்டுமே போதாது. தவிர விவசாயிகளின் தேவையை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மட்டுமே பூர்த்தி செய்ய முடியாது.

"நாங்கள் நான்கு விஷயங்களை ஒருங்கிணைக்கிறோம். மூலப்பொருட்கள் (விதைகள், உரம்), விவசாய சாதனங்கள், விற்பனையை ஒருங்கிணைத்தல் மற்றும் நிதி; இவைதான் தேவை,” என்றார்.

நிதியை பொறுத்தவரை கிடைப்பதாக தோன்றினாலும், நடைமுறையில் பல சிக்கல்கள் உள்ளன. கிராமப்புறங்களில் நிலம் பிரிக்கப்பட்டாலும் சம்பந்தப்பட்ட நபருக்கு சொத்தின் சட்டப்பூர்வ உரிமை வழங்கப்படாமல் இருக்கும்.

உதாரணத்துக்குச் சொல்வதென்றால், இரு சகோதர்கள் விவசாயம் செய்வார்கள். ஆனால் இருவரின் சொத்தும் அப்பா பெயரில் இருக்கும். இந்தச் சூழலில் யாருக்கும் கடன் கிடைக்காது. தவிர, வருமானமும் சீராக இருக்காது, வருமான சான்றிதழும் இருக்காது.

ஒரு பயிர் காலம் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை என்றால், ஆறு மாதத்துக்குப் பிறகுதான் விவசாயிக்கு பணம் கிடைக்கும். ஆனால், வழக்கமான முறையில் கடன் வாங்கும்போது ஒவ்வொரு மாதமும் கடன் தவணை செலுத்த வேண்டி இருக்கும். இதற்கு டைனமிக்கான புராடக்ட் இல்லை. இதனை நாங்கள் வழங்குகிறோம்.

kivi joby

எங்கெல்லாம் செயல்பாடு?

தற்போதைக்கு தமிழ்நாடு மற்றும் பிஹாரில் செயல்பட்டு வருகிறோம். அங்கு பார்ட்னர்களுடன் இணைந்து விவசாயிகளை இணைக்கிறோம்.

”எங்களிடம் மூலப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள், டிராக்டர் உள்ளிட்ட சாதனைகளை வாடகைக்கு விடுபவர்கள், விவசாயப் பொருட்களை வாங்குபவர்கள் என அனைவரும் உள்ளனர். விவசாயிகள் விவசாயத்தில் மட்டுமே கவனம் செலுத்தினால் போதும், மற்ற சிக்கல்களை முடிந்தவரை தீர்க்கிறோம்.”

உதாரணத்துக்கு, சுகுணா நிறுவனத்துக்கு பெரிய அளவில் மக்காச்சோளம் தேவைப்பட்டது. எங்களிடம் உள்ள விவசாயிகளிடம் கொள்முதல் செய்து கொடுத்தோம். இதனால் இடைத்தரர்கள் இல்லாமல் விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும் நாங்கள் வழங்கும் கடனும் பயிர்களுக்கு ஏற்ப இருக்கும்” என ஜோபி தெரிவித்தார்.

kivi founders

சலில் நாயர், ராரேந்திர குமார், ஜோபி, பத்மகுமார் மற்றும் மனோஜ் ராமசாமி - இணை நிறுவனர்கள் Kivi

 

விரைவில் என்.பிஎப்சி

“தற்போது விவசாயிகளுக்கு கடன் கொடுப்பதற்காக சில நிதி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். என்.பிஎப்சி உரிமம் கிடைப்பதற்கான வேலைகளை செய்துவருகிறோம்.

இதுவரை 4400 விவசாயிகள் எங்களிடம் இணைந்திருக்கிறார்கள். 7 கோடி ரூபாய்க்கு மேல் கடன் கொடுத்திருக்கிறோம்.

இப்போதைக்கு 3 மாவட்டங்களில் மட்டுமே செயல்படுகிறோம். விரைவில் தமிழ்நாடு மற்றும் பிஹாரில் பெரும்பாலான மாவட்டங்களில் உள்ள விவசாயிகளை இணைக்க திட்டமிட்டிருக்கிறோம். இதனைத் தொடர்ந்து தென் இந்தியா மாநிலங்களில் விரிவுப்படுத்த இருக்கிறோம், என்றார்.

விவசாயிகளை ஒருங்கிணைப்பது எப்படி?

விவசாயிகளை எப்படி ஒருங்கிணைக்கிறீர்கள் என்னும் கேள்விக்கு,

“முழுமையாக ஆன்லைன் மூலம் மட்டுமே செயல்பட்டால் அதற்கான வாய்ப்பு குறைவு. விவசாயிகள் எங்கு இருக்கிறார்களோ அங்கு எங்களுடைய  பணியாளர்கள் அல்லது பார்ட்னர் இருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான சேவையை வழங்கும்போது நம்மிடம் இணைகிறார்கள். கடன் மட்டுமல்லாமல் காப்பீடு என அனைத்தையும் வழங்குகிறோம்,” என ஜோபி குறிப்பிட்டார்.

தற்போது கிடைத்திருக்கும் நிதி, விரிவாக்கப் பணிகள், புராட்க்ட், என்.பி.எப்.சி. உரிமம் ஆகியவற்றுக்கு பயன்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

விவசாயத்தையும் விவசாயிகளையும் லாப பாதைக்கு கொண்டு செல்லும் எந்த புதுமையும் வரவேற்ககூடியதே.


Edited by Induja Raghunathan