நீர் மேலாண்மையில் தமிழகம் முதலிடம்; சிறந்த தண்ணீர் போராளி விருது வென்ற கோவை இளைஞர்!
கோவை சமூக ஆர்வலர் மணிகண்டனுக்கு மத்திய அரசு சார்பில் தென்னிந்தியாவின் சிறந்த தண்ணீர் போராளிக்கான விருது வழங்கப்பட்டது.
2019-2020 ஆண்டுகளில் நீர் மேலாண்மை திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக முதல் மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான தேசிய நீர் விருதுகள் வழங்கும் விழா காணொலி வாயிலாக நடைபெற்றது. இந்த விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பங்கேற்றார். அவர் முதல் பரிசு பெற்ற தமிழகத்தைப் பாராட்டினார்.
“தண்ணீர் ஒரு வரையறுக்கப்பட்ட வளம், அளவற்ற வளம் அல்ல. இதனை மக்களிடம் எடுத்துரைக்கவேண்டும். நீர் பாதுகாப்பு, நீர் வீணாவதை குறைத்தல் ஆகியவை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படாவிட்டால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்,” என்றார்.
மேலும்,
“பூமி 3% அளவு தண்ணீரை மட்டுமே நன்னீராகக் கொண்டிருக்கிறது. இதில் 0.5% மட்டுமே குடித்தண்ணீராகக் கிடைக்கிறது. எனவே ஒவ்வொரு குடிமகனும் இந்த குறைந்த அளவு தண்ணீரை நியாயமாகப் பயன்படுத்த வேண்டும். தண்ணீர் பாதுகாப்பை நமது வாழ்க்கை முறையில் ஒன்றாக ஆக்கும் வகையில் நமது வாழ்க்கை முறையை மாற்றி அமைக்க வேண்டும்,” என்றும் கேட்டுக்கொண்டார்.
தேசிய நீர் விருதில் முதல் 3 இடங்களைப் பிடித்த தமிழகம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார்.
இந்த விழாவில் கோவை சமூக ஆர்வலர் மணிகண்டனுக்கு மத்திய அரசு சார்பில் தென்னிந்தியாவின் சிறந்த தண்ணீர் போராளிக்கான விருது வழங்கப்பட்டது.
100 ஏக்கர் பரப்பளவு கொண்ட கோவை வெள்ளலூர் குளம் நிரம்பினால் விவசாய நிலங்கள் பாசனம் பெற்று வந்தன. நிலத்தடி நீரும் எளிதாகக் கிடைத்து வந்தது. ஆனால் ஆக்கிரமிப்புகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் காரணமாக இந்தக் குளத்துக்கு தண்ணீர் வராமல் போனது.
2017ம் ஆண்டு இளைஞர்கள் சிலர் ஒன்றிணைந்து கோவையில் உள்ள நீர்நிலைகளை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்தக் குழு மெல்ல விரிவடைந்தது. ஐடி, வங்கி ஊழியர்கள், சுயதொழில் செய்வோர் என பலர் இணைந்தனர். இதுவே கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பாக மாறியது.
இவர்கள் வெள்ளலூர் குளத்தை சீரமைக்கும் பணியைத் தொடங்கினார்கள். இவர்களது ஈடுபாட்டைக் கண்டு அரசும் இவர்களுக்கு உதவிக் கரம் நீட்டியது. ஆக்கிரமிப்புகளும் குப்பைகளும் அகற்றப்பட்டு தூர்வாரப்பட்டன. குளத்துக்கு தண்ணீரும் வந்தது.
இதுபோன்று கோவையில் பல்வேறு நீர்நிலைகளை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு புதுப்பித்து வருகிறது. இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டனின் முயற்சிகளை அங்கீகரித்து நீர் மேலாண்மையை ஊக்குவிக்கும் வகையில் 2019ம் ஆண்டு இவருக்கு ‘பெஸ்ட் வாட்டர் வாரியர்’ விருதுக்கான முதல் பரிசை மத்திய ஜல்சக்தி அமைச்சகம் வழங்கியது.
மணிகண்டன் தனது முயற்சி குறித்து கூறும்போது,
“பள்ளிப் பருவத்தில் இருந்தே சமூக நலப் பணிகளில் ஆர்வம் காட்டி வருகிறேன். மரம் நடுதல், மழை நீர் சேகரிப்பு, ரத்த தானம் போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளேன். 2017ம் ஆண்டிற்குப் பிறகு கடும் வறட்சி காரணமாக நீர்நிலைகள் வறண்டு போயின. ஜல்லிக்கட்டுப் போராட்டம் முடிந்த பிறகு சமூக நலனில் பங்களிப்பதில் இளைஞர்கள் பலருக்கு ஆர்வம் இருந்ததை கவனிக்க முடிந்தது. இத்தகைய இளைஞர்களை ஒருங்கிணைத்தோம். தொடர்ந்து நீர்நிலைகள், நீர்வழித்தடங்கள், குளங்கள், கிணறுகள் போன்றவற்றை சீரமைத்து வருகிறோம்,” என்றார்.
அடுத்தகட்டமாக நொய்யல் நதியை புதுப்பிக்க ஆர்வமாக உள்ளார் மணிகண்டன்.
தகவல் உதவி: பிஐபி மற்றும் ஆனந்த விகடன்