தண்ணீர் பிரச்சனையை போக்க மலையை வெட்டி பாதை அமைத்துள்ள சாதனை பெண்கள்!
மத்தியப் பிரதேசத்தின் அங்கிரோதா கிராமத்தைச் சேர்ந்த 250 பெண்கள் தங்கள் கிராமத்தின் தண்ணீர் பிரச்சனையைப் போக்க அங்குள்ள குளத்திற்கு தண்ணீர் வரும் வகையில் 18 மாதங்கள் செலவிட்டு அரை கி.மீட்டர் தொலைவிற்கு மலையை வெட்டி பாதை அமைத்துள்ளனர்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் கடுமையான நீர் பற்றாக்குறை காணப்படுகிறது. நீர்நிலைகளைப் புதுப்பிப்பதற்காக அரசாங்கம் கோடிக்கணக்கில் செலவிட்டு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வந்தாலும் தண்ணீர் பிரச்சனை தொடர்ந்து நிலவி வருகிறது.
இந்த மாநிலத்தில் உள்ள அங்கிரோதா கிராமத்தில் வசிப்பவர்கள் பல காலமாகவே தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சனையால் தவித்து வருகின்றனர். எனவே இங்குள்ள மக்கள் தங்கள் பிரச்சனைக்கு தீர்வுகாண தாங்களே களமிறங்கியுள்ளனர். இந்த கிராமத்தைச் சேர்ந்த 250 பெண்கள் அங்குள்ள குளத்திற்கு மலையிலிருந்து தண்ணீர் வருவதற்கான வழித்தடத்தை அமைக்கும் பணியில் 18 மாதங்களாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த முயற்சியில் ஈடுபட்டவர்களில் ஒருவரான பபிதா ராஜ்புட் ஏஎன்ஐ இடம் கூறும்போது,
“நாங்கள் கிராமத்திற்குள் தண்ணீர் வருவதற்கான பாதை அமைக்க 18 மாதங்களாக பணியாற்றி வருகிறோம். தண்ணீர் காட்டிற்கு பாய்ந்து செல்கிறது. எங்களால் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
கிராமத்தில் உள்ள பெண்கள் ஒரு குழுவை உருவாக்கினார்கள். கிராமத்தில் உள்ள குளத்திற்கு தண்ணீர் வருவதற்காக அரை கி.மீட்டர் தூரத்திற்கு மலையை வெட்டி பாதை அமைக்க திட்டமிட்டதாக பபிதா தெரிவித்துள்ளார்.
“எங்கள் கிராமத்திற்கு தண்ணீர் வருவதற்காக கிட்டத்தட்ட 250 பெண்கள் பாதை அமைத்தோம். இந்தப் பணியை நிறைவு செய்ய எங்களுக்கு 18 மாதங்கள் ஆனது,” என்றார் தண்ணீர் வருவதற்கான மாற்று பாதை அமைத்தவர்களில் ஒருவரான விவிதாபாய் ஆதிவாசி.
கிராம மக்களின் தண்ணீர் பற்றாக்குறைக்கு தீர்வுகாணவேண்டும் என்பதே இந்த முயற்சியின் நோக்கம். அதுமட்டுமின்றி தண்ணீர் தட்டுப்பாட்டால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. கால்நடைகளும் பாதிக்கப்பட்டுகின்றன.
“கடந்த 18 மாதங்களாக கிராமத்தில் உள்ள பெண்கள் அங்கிரோதா பகுதிக்கு தண்ணீர் வரவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். மலையை வெட்டி தண்ணீர் வருவதற்கான வழித்தடத்தை அமைத்துள்ளனர். நீர் வரும் பாதையில் இருந்த பல்வேறு கற்களை இந்தப் பெண்கள் அகற்றி வருகின்றனர்,” என்று மற்றொரு கிராமவாசியான ராம் ரத்தன் சிங் ராஜ்புட் தெரிவித்ததாக, 'பிசினஸ் வேர்ல்ட்’ குறிப்பிட்டுள்ளது.
இதேபோன்று கயா பகுதியில் லாயுங்கி புய்யான் என்கிற 70 வயது முதியவர் 30 ஆண்டுகள் செலவிட்டு மூன்று கிலோ மீட்டர் தொலைவிற்கு கால்வாய் வெட்டினார். இவரது சேவையைப் பாராட்டி மஹிந்திரா குழுமத்தின் சிஇஓ ஆனந்த் மஹிந்திரா சமீபத்தில் இவருக்கு டிராக்டர் ஒன்றை பரிசளித்துள்ளார்.
கட்டுரை: THINK CHANGE INDIA