Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

தமிழகத்தின் முதல் பெண் ஓதுவார் சுஹாஞ்சனா பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

தமிழக முதல்வர் துவக்கி வைத்த அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு மாவட்டம் மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் ஓதுவாராக நியமிக்கப்பட்டுள்ளார் சுஹாஞ்சனா. இதன் மூலம் தமிழகத்தின் முதல் பெண் ஓதுவார் என்ற பெருமை அவருக்குக் கிடைத்துள்ளது.

தமிழகத்தின் முதல் பெண் ஓதுவார் சுஹாஞ்சனா பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

Tuesday August 17, 2021 , 3 min Read

திமுக அரசு தமிழகத்தில் ஆட்சி அமைத்து நூறு நாட்கள் ஆன நிலையில், சில வரலாற்றுத் திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. அதன் ஒரு பகுதியாக கோயில்களில் அன்னை தமிழில் அர்ச்சனைத் திட்டம் தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தையும் முதல்வர் ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன் தொடங்கி வைத்தார். அதில், ஆகம விதிகளில் பயிற்சிபெற்ற தலித் மாணவர்கள் இருவர் உள்பட 58 பேரை அர்ச்சகர்களாக நியமித்து அவர் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.


அந்த 58 பேரில் 24 பேர் அரசு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியிகளிலும், 34 பேர் தனியார் அர்ச்சகர் பயிற்சி நிறுவனங்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள் ஆவர். பணியானை பெற்றவர்களில் பட்டியல் பிரிவில் 5 பேர், எம்பிசியில் 6 பேர், பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 12 பேர் மற்றும் பொதுப்பிரிவை சேர்ந்தவர் ஒருவர் மற்றும் பெண் ஓதுவார் ஒருவரும் அடங்குவர்.

Suganjana

தமிழக வரலாற்றிலேயே முதன்முறையாக பெண் ஓதுவராக பணியானை பெற்றுள்ள சுஹாஞ்சனா

இதன் மூலம் கோயிலில் குறிப்பிட்ட சாதியியைச் சார்ந்தவர் மட்டுமே அர்ச்சகராக இருந்து வந்த நடைமுறை மாற்றம் கண்டுள்ளது. அதோடு, கருவறைக்குள் பெண் செல்லக் கூடாது என்ற தடையும் தகர்த்தெறியப்பட்டுவிட்டது.


தமிழக வரலாற்றிலேயே முதன்முறையாக பெண் ஓதுவராக பணியானை பெற்றுள்ள பெண்ணின் பெயர் சுஹாஞ்சனா ஆகும். 28 வயதான இவர் சொந்த ஊர் கரூர் அருகே உள்ள வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்தவர். தற்போது கணவர் கோபிநாத், மகள் வன்ஷிகா சக்தி மற்றும் மாமனார், மாமியருடன் தாம்பரத்தை அடுத்த சேலையூர் ஐ.ஏ.எப். சாலையில் வசித்து வருகிறார்.

“சிறு வயதில் இருந்தே பக்தி நெறியிலேயே என்னை அப்பாவும் அம்மாவும் வளர்த்தனர். நவராத்திரி விழாவுக்கு செல்லும்போது அங்கு சிலர் பாடுவதைக் கேட்டு நாமும் பாட வேண்டும் என்ற ஆசை வந்தது. நான் 10-ம் வகுப்பு முடித்த பின்னர் தேவாரம் பாடுவதில் ஆர்வம் கொண்டேன். கோயில் விழாக்கள், உறவினர்கள் முன்னிலையில் பாடுவது என செயல்பட்டேன். காலப்போக்கில் அது ஒரு வழக்கமாகவே மாறிவிட்டது. எனவே, இசைப்பள்ளியில் படித்து தேவாரம், திருவாசகம் பாடல்களைப் படித்தேன். எதிர்காலத்தில் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதற்காகவே அவற்றை ஆர்வமாக கற்றுக் கொண்டேன். இறைவன் முன்பு பாட வேண்டும் என்ற ஆசை நிறைவேறியுள்ளது,” என்கிறார் சுஹாஞ்சனா.

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே உள்ள மாடம்பாக்கத்தில் உள்ள இந்துசமய அறநிலையத்துறையின் ஆயிரம் வருடங்கள் பழமையான தேனுபுரீஸ்வரர் கோயிலில்  சுஹாஞ்சனா ஓதுவாராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்காக முதலமைச்சரிடம் இருந்து பணி நியமன ஆணையை பெற்ற அவர், நேற்று மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் தனது ஓதுவார் பணியை தொடங்கினார்.

tambaram
“ஓதுவார் பணி ஆணை கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பெண்கள் பல துறையில் பயணித்தாலும், ஓதுவராகவும் பணியாற்ற முடியும் என்பதால் இதில் ஆர்வமாக விண்ணப்பித்து சேர்ந்து உள்ளேன். பெண்கள் விருப்பப்பட்டு ஓதுவார் பயிற்சி பெறவேண்டும். இது குழந்தைகள் பக்தி நெறியுடன் வளர தூண்டுதலாக இருக்கும். கோவிலில் இறைவனுக்காக பாடுவது மனதுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்தப் பணியை வழங்கிய முதலமைச்சருக்கும், தமிழக அரசுக்கும், இந்து சமய அறநிலையத்துறைக்கும் நன்றி,” என மகிழ்ச்சியுடன் கூறுகிறார் சுஹாஞ்சனா.

இந்தப் பணியில் சேர்வதற்கு முன்பு, வீட்டிலேயே இசை வகுப்புகளை நடத்தி வந்துள்ளார் சுஹாஞ்சனா. ஐந்து வருடங்கள் தனியார் பள்ளி ஒன்றில் அறநெறி ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு சென்னைக்கு வந்துள்ளார்.


“திருமணத்துக்கு முன் உனக்கு பிடித்தை, தெரிந்ததை சிறப்பாகச் செய் என அப்பாவும் அம்மாவும் ஊக்கம் கொடுத்தனர். திருமணத்துக்குப் பிறகு கணவர் வீட்டிலும் இதற்குத் தடை சொல்லவில்லை. இறைவனுக்கு தொண்டு செய்வது யாருக்கும் கிடைக்காத பணி எனக் கூறி உற்சாகப்படுத்தினர். ஓதுவார் பணிக்கு ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிந்து கொண்டு விண்ணப்பித்தேன். நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்று முதலமைச்சர் கையால் பணி நியமனம் கிடைத்தது. இப்படியொரு வேலை கிடைக்கும் என நினைத்துப் பார்க்கவில்லை," என்கிறார் சுஹாஞ்சனா.

video

தமிழில் சுஹாஞ்சனா ‘சைவ திருமுறைகள்' பாடும் வீடியோ ஒன்றும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பகிர்ந்து, சுஹாஞ்சனாவிற்கு பாராட்டிகளைத் தெரிவித்து வருகிறார்கள். இதுவரை தமிழகத்தில் ஆண்கள் மட்டுமே ஓதுவார்களாக இருந்துள்ளனர். தற்போது ஓதுவார் ஆகியுள்ளதன் மூலம் தமிழகத்தின் முதல் பெண் ஓதுவார் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் சுஹாஞ்சனா.


51 ஆண்டு கனவு


தமிழ்நாட்டில், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தைக் கடந்த 1970-ம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி சட்டப்பேரவையில் தீர்மானமாக நிறைவேற்றினார். எனினும் பல்வேறு சட்டச் சிக்கல்கள் காரணமாக இந்த சட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. தற்போது 51 ஆண்டுகளுக்குப் பிறகு, கருணாநிதியின் மகனும், தற்போதைய முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை நிறைவேற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.