தமிழகத்தின் இரண்டாவது திருநங்கை எஸ்.ஐ : அவமானங்களைத் தாண்டி சாதித்த சிவன்யா!
விடாமுயற்சி வெற்றிபெற்ற கதை!
சில ஆண்டுகளுக்கு இந்தியாவின் முதல் திருநங்கை போலீஸ் எஸ்.ஐயாக தமிழகத்தைச் சேர்ந்த பிரித்திகா யாஷினி என்பவர் தேர்வானார். தற்போது இவர் சென்னையில் பணிபுரிந்து வருகின்றார். இந்தநிலையில், இவரை போல் இரண்டாவது திருநங்கை போலீஸ் எஸ்.ஐ இதே தமிழ்நாட்டில் உருவாகி இருக்கிறார்.
கிண்டல்களைப் புறக்கணித்து, திருவண்ணாமலையைச் சேர்ந்த திருநங்கை ஒருவர் போலீஸ் எஸ்ஐ ஆக வேண்டும் என்ற நீண்ட நாள் கனவை நிறைவேற்றி இருக்கிறார். அவர் பெயர் சிவன்யா.
திருவண்ணாமலை மாவட்டம், பாவுப்பட்டு கிராமத்தில் இருந்து தனது கனவுகளை நோக்கி பயணித்தவர். தந்தை செல்வவேல், தாய் வளர் இருவரும் விவசாயப் பணிகளைச் செய்பவர்கள். பி.காம் வணிகவியல் படித்த சிவன்யா சில ஆண்டுகள் முன்பு, திருவண்ணாமலை நீதிமன்றத்தில் தன்னார்வலராக பணியாற்றி வந்தார்.
இதற்கிடையே, தான் தமிழக அரசின் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகத் தொடங்கினார். இதற்குக் காரணம், அவரின் குடும்பத்தினர் தான். இவருக்கு இருக்கும் இரண்டு சகோதரர்களும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள். அதிலும் இளைய சகோதரர் தற்போது போலீஸ் காவலராக தேர்ச்சி பெற்று பணியாற்றி வருகிறார்.
இவர்கள் கொடுத்த ஊக்கம் காரணமாக போட்டித் தேர்வுகளுக்கு தயாராகினர். மேலும், பிரித்திகா யாஷினி காவல்துறையில் பணிக்குச் சேர்ந்த தகவலும் ஊக்கப்படுத்த, தீவிரமாக படிக்கத் தொடங்கியிருக்கிறார் சிவன்யா.
தனியார் கோச்சிங் சென்டரில் சேர்ந்து படித்தவர், எஸ்.ஐ தேர்வுக்கான அனைத்து படிநிலைகளையும் கடந்து தேர்ச்சி பெற்றிருக்கிறார். கொரோனா லாக்டவுன் தேர்வு முடிவுகளை தாமதப்படுத்தியிருக்கிறது. என்றாலும் சில நாட்கள் முன்பு முதல்வர் ஸ்டாலினிடம் போலீஸ் எஸ்.ஐக்கான ஆர்டரை வாங்கினார். எஸ்.ஐ ஆன மகிழ்ச்சியில் இருக்கும் திருநங்கை சிவன்யா,
“என் மகிழ்ச்சியை எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை. நான் போட்டித் தேர்வில் தேர்ச்சி பெறுவதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தேன். என் விடாமுயற்சி நன்றாக பலனளித்தது. கொரோனா லாக்டவுன் தேர்வுக்கான நடைமுறைகளை தாமதப்படுத்தியது.
கடந்த வருடத்திற்குள் நடைமுறைகள் முடிந்திருக்க வேண்டும். ஆனால் லாக்டவுன் காரணமாக நான் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால், நான் என் பொறுமையை இழக்கவில்லை. எனது இந்த வேலையில் மகிழ்ச்சி தான் என்றாலும், டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று டிஎஸ்பியாக வேண்டும் என்பதே எனது லட்சியம். எனது வெற்றிக்கு என் பெற்றோர் மற்றும் சகோதரர்கள் என்னை நன்றாக ஆதரித்தனர். அவர்கள் என்னை ஊக்கப்படுத்திக்கொண்டே இருந்தனர்.
என்றாலும், தமிழ்நாட்டின் முதல் திருநங்கையாக எஸ்ஐ பிரித்திகா பெற்ற வெற்றி, எங்கள் லட்சியத்தை அடைவதில் உள்ள அனைத்து முரண்பாடுகளையும் எதிர்த்துப் போராட எங்களுக்கு தைரியத்தை அளித்தது. அவரால் ஏற்பட்ட ஊக்கமே என்னை இந்த அளவுக்கு கொண்டுவந்தது.
மற்ற திருநங்கைகளுக்கும் வாய்ப்பு கொடுத்தால் அவர்களும் வெற்றிபெறுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. மற்றவர்களை போல எனது வெற்றியும் சாதாரணமாக அமையவில்லை. என் வாழ்க்கையில் எத்தனையோ அவமானம், போராட்டங்கள், கேலி, கிண்டல்கள் என்று எல்லா கொடுமைகளையும் அனுபவித்து இருக்கிறேன். அந்த தருணங்களில் மனது நிறைய வலிக்கும்.
ஆனால், அனைத்தையும் தூக்கிப்போட்டு விட்டு சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை மட்டுமே பிரதானமாகக் கொண்டு படிக்க ஆரம்பித்தேன். மற்ற திருநங்கைகள் சந்திக்கிற இன்னல்கள் எனக்கும் ஏற்பட்டது. ஆனால், எனது குடும்பம் எனக்கு ஆதரவாக இருந்தது.
என்னை படிக்க வைத்து எனக்கு தூண்டுகோலாக இருந்தது அவர்கள் மட்டுமே. எனது பெற்றோர்கள் இருந்ததை போல மற்ற பெற்றோர்களும் திருநங்கைகளுக்கு ஆதரவாக இருந்தால் அவர்களும் வெற்றிபெறுவார்கள்," என்று நம்பிக்கை வார்த்தை உத்திர்த்துள்ளார்.
பணி சிறக்க வாழ்த்துக்கள் சிவன்யா!
தகவல் - newindianexpress | தொகுப்பு: மலையரசு