பத்மஸ்ரீ விருது பெற்ற ‘வில்லிசை வேந்தர்’ சுப்பு ஆறுமுகம் காலமானார்!
நாணியில் இருந்து புறப்படும் வில் போல, தனது சீறிய தமிழால் வில்லிசை உலகின் சக்கரவர்த்தியாக வலம் வந்த சுப்பு ஆறுமுகம் இன்று காலமானார் என்ற செய்தி தமிழ் உலகை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நாணியில் இருந்து புறப்படும் வில் போல, தனது சீறிய தமிழால் வில்லிசை உலகின் சக்கரவர்த்தியாக வலம் வந்த சுப்பு ஆறுமுகம் இன்று காலமானார் என்ற செய்தி தமிழ் உலகை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
வில்லிசை வேந்தர் என அழைக்கப்படும் 85 வயதான சுப்பு ஆறுமுகம், வயது முதிர்வு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அதிகாலை காலமானார்.
14 வயதிலே சாதனையை தொடங்கிய ’வில்லிசை வேந்தர்’
சுப்பு ஆறுமுகம் 1928ம் ஆண்டு, திருநெல்வேலி மாவட்டம் சத்திர புதுக்குளத்தில் சுப்பையா பிள்ளை, சுப்பம்மாள் தம்பதிக்கு கடைசி மகனாக பிறந்தார். இவரது தந்தை இசைக் கலைஞராகவும், பொம்மை செய்யும் தொழிலும் செய்து வந்துள்ளார்.
நெல்லையில் உள்ள மத்திரமூர்த்தி உயர்நிலைப்பள்ளியில் படிப்பை முடித்த சுப்பு ஆறுமுகம், பாளையங்கோட்டையில் உள்ள செயிண்ட் சேவியர் கல்லூரியிலும், மதுரையில் உள்ள தமிழ்ச் சங்கத்திலும் படித்தார்.
பாரதியாரின் ‘கண்ணன் பாட்டு’ மீது சுப்பு ஆறுமுகத்திற்கு ஏற்பட்ட ஈர்ப்பு, அவரை 14 வயதிலேயே ‘குமரன் பாட்டு’ என்ற கவிதைத் தொகுப்பை வெளியிடத் தூண்டியது. இதன் மூலமாக தமிழறிஞர்கள் மற்றும் ஆர்வலர்கள் மத்தியில் சுப்பு ஆறுமுகம் பிரபலமாக ஆரம்பித்தார்.
சுப்பு ஆறுமுகமும், என்எஸ்கேவும்:
சுப்பு ஆறுமுகம் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கு போது, கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் ஒரு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்றுள்ளார். அப்போது காந்தியைப் பற்றி அழகு தமிழில் சுப்பு ஆறுமுகம் பாடிய பாடல், என்.எஸ்.கேவை மெய் மறக்கச் செய்தது.
அன்றே 16 வயதான சுப்பு ஆறுமுகத்தின் தாயாரிடம் அனுமதி பெற்று, தனது நாடக கம்பெனிக்கு அழைத்துச் சென்றார் என்.எஸ்.கே. கலைவாணரின் நாடக கம்பெனியில் வில்லுப்பாட்டு கலைஞராகவும், அவரது படங்களுக்கு வசனம் மற்றும் பாடல்கள் எழுதும் பணியிலும் ஈடுபட்டார்.
கலைவாணரின் 19 திரைப்படங்களும், நாகேஷின் 60 திரைப்படங்களுக்கும் நகைச்சுவை பகுதிகளை எழுதி திரையுலகிலும் தனது முத்திரையைப் பதித்துள்ளார்.
40 ஆண்டு கால பயணம்:
காந்தி கதை, திரும்பி வந்த பாரதி, திலகர் கதை, புத்தர் கதை என பலரது கதைகளையும் தனது வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகள் மூலம் எளிமையான தமிழிலில் அனைத்து தரப்பு மக்களிடம் கொண்டு சேர்ந்தவர். கல்லூரிகள், பள்ளிகள், பொது நிகழ்ச்சிகளில் மகாபாரதம், ராமயணம் போன்ற இதிகாசங்களையும் தனது அழகு தமிழ் மற்றும் வில்லிசை கலந்து பாடி, மக்களை மனம் மயங்க வைத்தவர். கோயில்களிலும் தேவாரம் மற்றும் திருவாசகம் பாடியுள்ளார்.
40 ஆண்டுகளாக வில்லிசை உலகில் வலம் வந்த சுப்பு ஆறுமுகம், தனது வில்லுப் பாட்டின் வாயிலாக சுதந்திரப் போராட்ட காலத்தில் மக்களிடையே ஆன்மிகம், தேச பக்தியை வளர்த்துள்ளார்.
1975ம் ஆண்டு கலைமாமணி விருதும், 2005ம் ஆண்டு சங்கீத நாடக அகடாமி விருதும், 20021ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டுள்ளது.
வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகத்திற்கு மகாலட்சுமி என்ற மனைவியும், சுப்புலட்சுமி, காந்தி, பாரதி திருமகன் என மூன்று வாரிசுகளும் உள்ளனர்.
மக்களின் அன்பைப் பெற்றவர்:
சுப்பு ஆறுமுகத்தின் மகள் பாரதி திருமகன் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில்,
”கடந்த சில நாட்களாக அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.”
அப்பா வில்லிசை வேந்தர் என்றால், மகள் பாரதி திருமகன் வில்லிசை ராணி என புகழப்படும் அளவிற்கு வில்லுப்பாட்டு மூலம் கவனம் ஈர்த்து வருகிறார். இவருக்கு வில்லுப்பாட்டில் இவர் ஆற்றிய அரும் பணிகளுக்காக கலைமாமணி விருதும் வழங்கப்பட்டுள்ளது.
“அப்பா கடந்த இரண்டு மூன்று நாட்களாக முதுமை மற்றும் நுரையீரல் சளித்தொந்தரவு காரணமாகவும் கஷ்டப்பட்டு வந்தார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த போதும், வயது முதிர்ச்சி காரணமாக மருந்துகள் சரியாக வேலை செய்யவில்லை. அப்பா தனது வில்லுப்பாட்டு மூலமாக மக்களின் அளவு கடந்த அன்பைப் பெற்றுள்ளார்,” எனத் தெரிவித்துள்ளார்.
சென்னை கே.கே.நகரில் உள்ள இல்லத்தில் சுப்பு ஆறுமுகம் காலமான நிலையில், தற்போது அங்கு அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை இறுதிச்சடங்குகள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
'மல்யுத்த போட்டியால் கிடைத்த அரசியல் வாய்ப்பு' - இந்தியாவின் தவிர்க்க முடியா ஆளுமை முலாயம் சிங் யாதவ் மறைவு!