Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

'மல்யுத்த போட்டியால் கிடைத்த அரசியல் வாய்ப்பு' - இந்தியாவின் தவிர்க்க முடியா ஆளுமை முலாயம் சிங் யாதவ் மறைவு!

இந்திய அரசியலில் தவிர்க்கமுடியாத மாபெரும் ஆளுமைகளுள் ஒருவராக விளங்கிய, உத்திரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான முலாயம் சிங் யாதவ் உடல்நலக்குறைவால் காலமானார். மல்யுத்த போட்டியால் கிடைத்த அரசியல் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி தனக்கென தனி சாம்ராஜ்ஜியம் உருவாக்கியவர் அவர்

'மல்யுத்த போட்டியால் கிடைத்த அரசியல் வாய்ப்பு' - இந்தியாவின் தவிர்க்க முடியா ஆளுமை முலாயம் சிங் யாதவ் மறைவு!

Monday October 10, 2022 , 4 min Read

இந்திய அரசியலில் மூத்த தலைவர்களுள் ஒருவராக பலருக்கு சிம்மச் சொப்பனமாக விளங்கியவர் உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவ். அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வரான அவர், ஒரு முறை இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.

82 வயதான இவர், சமீபகாலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக டெல்லி அருகே குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலை கடந்த சில நாட்களாகவே கவலைக்கிடமாக இருந்து வந்தது.

இந்நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி முலாயம் சிங் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது மரணத்திற்கு பிரதமர் மோடி உட்பட பல தலைவர்கள் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவரான முலாயம் சிங், அரசியலில் தனக்கென தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்தவர். அவரது வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாக இங்கே காணலாம்...

mulayam singh

எளிமையில் தொடங்கி தன்னிகரற்ற தலைவர் ஆன முலாயம்

1939ம் ஆண்டு நவம்பர் 22ம் தேதி உத்திரப்பிரதேசத்தின் எடாவா (Etawah) மாவட்டத்திலுள்ள சைபை (Saifai) கிராமத்தில் பிறந்தவர் முலாயம் சிங் யாதவ். அவரது பெற்றோர் விவசாயம் செய்து வந்தனர். நான்கு சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி என பெரிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் முலாயம்.

சிறுவயதில் இருந்தே மல்யுத்தப் போட்டிகளில் ஆர்வத்துடன் விளங்கினார் முலாயம். கூடவே அப்போதே அவருக்கு அரசியலிலும் இருந்த ஆர்வம் காரணமாக, அரசியல் அறிவியலில் (Political Science) தனது இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பை முடித்தார். அதன் தொடர்ச்சியாக இளங்கலை ஆசிரியர் பட்டமும் பெற்றார்.

1960-களில் மல்யுத்த வீரராக, ஆசிரியராக, சமூக ஆர்வலராக எனப் பன்முகத் திறமையாளராக இருந்த முலாயம் சிங் யாதவ்வை அரசியல் இருகரம் பற்றி அழைத்துக் கொண்டது.

mulayam

அரசியலில் நுழைந்தது எப்படி?

முலாயம் அரசியலில் நுழைந்த கதை சுவாரஸ்யமானது. ஒருமுறை மெயின்புரியில் நடந்த மல்யுத்தப் போட்டி ஒன்றில் கலந்து கொண்டார் முலாயம் சிங். அந்தப் போட்டிக்கு ஜஸ்வந்த் நகர் எம்.எல்.ஏ. நாது சிங் என்பவர்தான் தலைமை தாங்கினார்.

முலாயம் சிங் மல்யுத்தம் செய்யும் திறமையைப் பார்த்து அசந்து போன நாது சிங், தன்னுடன் அரசியலுக்கு வரும்படி அவரை அழைத்தார். அந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட முலாயம் சிங், தனது 28 வயதில், 1967ம் ஆண்டு சம்யுக்தா சோஷியலிஸ்ட் கட்சி சார்பில் ஜஸ்வந்த் நகரில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். கிடைத்த முதல் வாய்ப்பிலேயே வென்று காட்டி, தனது திறமையை நிரூபித்தார்.

உத்திரப்பிரதேச எம்.எல்.ஏ.வாக திறம்பட செயல்பட்டு அரசியலில் தனக்கென தனி அடித்தளத்தை உருவாக்கிக் கொண்டார் முலாயம். கால ஓட்டத்தில் அவரது கட்சி பிளவுபட, பாரதிய லோக் தள், ஜனதா, பாரதிய கிராந்தி தள், ஜனதா தள் என பல்வேறு கட்சிகளில் அவர் பணிபுரிந்தார்.

1975ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி, அவசர நிலையை பிரகடனம் செய்தபோது, சிறையில் அடைக்கப்பட்ட முக்கியத் தலைவர்களுள் முலாயம் சிங்கும் ஒருவர். 19 மாதங்கள் மிசா சிறைவாசத்தை அனுபவித்தார் அவர். சிறைக் காலங்கள் அவரது அரசியல் வாழ்க்கைக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைந்தது.

1992ம் ஆண்டு ’சமாஜ்வாடி’ என்ற தனிக்கட்சியை தனது தலைமையின் கீழ் உருவாக்கினார் முலாயம் சிங். கொஞ்சம் கொஞ்சமாக இந்தக் கட்சி அசைக்க முடியாத மாநிலக் கட்சியாக வளர்ந்தது.

mulayam

உத்தரப்பிரதேச சட்டசபைக்கு 10 முறை தேர்வான முலாயம், 1989 முதல் 1991 வரை, 1993 முதல் 1995 வரை மற்றும் 2007 முதல் 2013 வரை என அம்மாநில முதல்வராக மட்டும் மூன்று முறை பதவி வகித்துள்ளார். இதுதவிர ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் 1996 முதல் 1998 வரை பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.

10 முறை எம்எல்ஏவாகவும், 1 முறை எம்எல்சியாகவும் 7 முறை லோக்சபா உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவர். தற்போது மெயின்புரி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியில் இருந்தநிலையில் தான், முலாயம் சிங் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் விளையாட்டில் முலாயம்

1996ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சி மத்தியில் ஆட்சி அமைக்க இருந்தபோது, முலாயம் சிங்கைத்தான் முதலில் பிரதமராக்குவதாக திட்டமிடப்பட்டது. ஆனால், பீகாரின் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள் தலைவருமான லல்லு பிரசாத் யாதவ் எதிர்ப்பால், பிரதமராகும் வாய்ப்பை முலாயம் சிங் இழந்தார்.

முலாயம் சிங் யாதவிற்கு மாலதி தேவி, சாதனா என இரண்டு மனைவிகள். முதல் மனைவி 2003ல் இறந்துவிட்டார். முலாயம்-மாலதி தம்பதிக்குப் பிறந்தவர்தான், அகிலேஷ் யாதவ்.

தான் தீவிர அரசியலில் இருந்தபோதே, தன் மகன் அகிலேஷையும் அரசியலில் நுழைய வைத்து, அவரை முதல்வராக்கினார் முலாயம் சிங். கட்சியில் உட்பூசல் ஏற்பட்டபோதும், மகனுக்கு ஆதரவாகவே அவர் செயல்பட்டார்.
mulayam

இருந்தபோதும் தனது மகனாலேயே சொந்தக் கட்சியில் இருந்து ஓரம்கட்டப்பட்டார் முலாயம் சிங். 2016ம் ஆண்டு குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் முலாயம் சிங் பெயர் அடிபட்டது. அடுத்த குடியரசுத் தலைவர் அவர்தான் என பெரிதும் பேசப்பட்டது. ஆனால், அதுவும் நடக்கவில்லை.

அரசியல் என்றாலே சர்ச்சைகளுக்கும் பஞ்சமிருக்காது அல்லவா... பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு விவகாரத்தில் பாஜகவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய முலாயம் சிங், நிர்பயா வழக்கு மற்றும் சுதந்திர திபெத் பற்றிய கருத்துகளால் சர்ச்சைகளில் சிக்கினார்.

இந்த சூழ்நிலையில்தான், சமீபகாலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார் முலாயம் சிங். இதற்காக தொடர் சிகிச்சைகளையும் அவர் பெற்று வந்தார். 82 வயதான அவர் உயிர் காக்கும் மருந்துகள் உதவியுடன் டெல்லி அருகே குருகிராம் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். அங்கு, புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் நிதித் சூட் மற்றும் டாக்டர் சுஷில் கட்டாரியா தலைமையிலான மருத்துவர்கள் குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சைப் பலனலிக்காமல் இன்று அவர் காலமானார்.

அவரின் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில்,

“நாங்கள் அந்தந்த மாநிலங்களில் முதலமைச்சர்களாக இருந்தபோது முலாயம் சிங் யாதவ்-ஜியுடன் பலமுறை தொடர்பு கொண்டுள்ளேன். நெருங்கிய தொடர்பு தொடர்ந்தது, அவருடைய கருத்துக்களைக் கேட்க நான் எப்போதும் ஆவலுடன் இருந்தேன். மக்கள் பிரச்சனைகளுக்கு போராடி வாழ்ந்தவர் முலாயம்சிங். மக்களுக்காக அரும் சேவையாற்றியவர். அவரின் மறைவு எனக்கு வேதனை அளிக்கிறது. அவரின் குடும்பத்தினருக்கும், லட்சக்கணக்கான ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி,” எனத் தெரிவித்துள்ளார்.

இதேபோல், காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

“முலாயம் சிங்கிற்கு எதிரிகள் யாரும் கிடையாது. எளிமையான நம்பிக்கையான நபர்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநில அரசியலில் மாபெரும் சக்தியாக விளங்கிய முலாயம் சிங் யாதவ்வின் மறைவுக்காக 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.