‘பிட்காயின் மோசடியில் சிக்க வேண்டாம்; பேராசை பெருநஷ்டம்’ - தமிழக டிஜிபி அறிவுரை!
பிட்காயின் மோசடியில் யாரும் சிக்கிக் கொள்ள வேண்டாம் என தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அறிவுரை விடுத்துள்ளார்.
டிஜிட்டல் இந்தியா என்ற மத்திய அரசின் முழக்கம் பல கட்டம் முன்னோக்கி வருகிறது. இந்தியாவில் பல முறைகளும் ஆன்லைன் முறையில் மாற்றப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக ஆன்லைன் டிஜிட்டல் பரிவர்த்தனையானது பல கட்டங்கள் வளர்ந்து இருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.
சிறிய கடைகளில் தொடங்கி பெரிய நிறுவனங்கள் வரை ஆன்லைன் பரிவர்த்தனை முறை செயல்பாட்டில் இருக்கிறது. ஆன்லைன் வளர்ச்சியில் கிரிப்டோகரன்சி என்பது மட்டும் விதிவிலக்கு அல்ல. கிரிப்டோகரன்சி முதலீடு குறித்த ஆசை மக்கள் மத்தியில் வளர்ந்து வருகிறது.
குறிப்பாக சில போலி நிறுவனங்கள் ஆன்லைன் பிட்காயினில் முதலீடு செய்தால் உங்கள் தொகை இரட்டிப்பாக வழங்கப்படும் என போலி வார்த்தைகள் கூறி ஏமாற்று வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்த புகார்களும் அதிகரித்து வருகிறது. முதலீடு செய்வது என்பது தவறல்ல ஆனால் அதை எங்கு எதில் முதலீடு செய்கிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
இந்த நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு இதுகுறித்து பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் வீடியோ மூலம் அறிவுரை விடுத்துள்ளார்.
“பிட்காயினில் முதலீடு செய்தால் உங்கள் தொகை இரண்டு மடங்கு அதிகமாக திருப்பித் தரப்படும் என ஆசை வார்த்தைகள் கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர். கொஞ்சமாக கொஞ்சமாக பணத்தை உங்களிடம் இருந்து பெற்று இறுதியாக உறுப்பினர் அட்டை பெற வேண்டும் எனக் கூறுவார்கள். அதுவும் செலுத்திய உடன் உங்கள் தொகை உங்களுக்கு கிடைக்கும் வேண்டும் குறிப்பிட்ட தொகையை தெரிவித்து அதை செலுத்தும் படி கேட்பார்கள். நீங்கள் இப்படி செலுத்தும் தொகை கண்டிப்பாக எந்த சூழ்நிலையிலும் திரும்பப் பெற முடியாது.”
சென்னை காவல் ஆணையர் குறிப்பிட்டுள்ள தகவலின்படி, காவலர்களே இதில் சிக்குகிறார்கள் என டிஜிபி சைலேந்திர பாபு வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, புலன் விசாரணை நடத்த வேண்டிய காவலர்களே இந்த மோசடியில் சிக்கிக் கொள்கிறார்கள்.
இதில் சென்னையைச் சேர்ந்த காவலர் ஒருவர் ரூ.20 லட்சம் மற்றும் மற்றொருவர் ரூ.30 லட்சம் என செலுத்தி மோசடி வலையில் சிக்கி இருக்கிறார்கள். நீங்கள் செலுத்தும் தொகை அமெரிக்கா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் செல்கிறது. சர்வதேச போலீஸ் நினைத்தாலும் இதை மீட்க முடியவில்லை.
வாட்ஸ்அப் போன்ற சமூகவலைதளங்களில் பிட்காயினில் முதலீடு செய்தால் தொகை இரண்டு மடங்காக திரும்ப வழங்கப்படும் என விளம்பரங்கள் காண்பிக்கப்படுகிறது. இதை நம்பி யாரும் பணம் செலுத்த வேண்டாம்.
”வங்கியில் வழங்கும் வட்டியை விட சிறந்த முறையான வட்டி யாரும் வழங்க முடியாது. இரண்டு மடங்கு என்ற பேராசை வார்த்தைகள் கூறி ஏமாற்றுகிறார்கள். பேராசை பெரு நஷ்டம். உழைக்காமல் யாரும் வளர முடியாது. எனவே, இந்த போலி பிட்காயின்கள் குறித்த விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம்,” என்று அறிவுரை அளித்துள்ளார் சைலேந்திர பாபு.