{மாற்றத்திற்கான வேட்பாளர்} தொழிலாளர் நலன் காக்கத் துடிக்கும் கோவில்பட்டி தோழர் சீனிவாசன்!
தொழிலாளர்கள் மிகுந்த தொகுதியாக இருப்பதால் கோவில்பட்டி கம்யூனிஸ்ட்களின் கோட்டையாகவே விளங்கி வருகிறது. இதுவரை இத்தொகுதியில் நடைபெற்ற 15 தேர்தல்களில் 7 முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றுள்ளது. 4 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது. 3 முறை காங்கிரஸும், 1 முறை சுயேட்சையும் வெற்றி பெற்றுள்ளனர்.
தொழிலாளர் நலன் மற்றும் மக்கள் நலன் காக்க கோவில்பட்டி தொகுதியில் 25 ஆண்டுகளுக்குப் பின் களமிறங்கியுள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. அதன் வேட்பாளரான கே. சீனிவாசன் முதல்முறையாக சட்டசபை வேட்பாளராக போட்டியிடுகிறார்.
தூத்துக்குடி மாவட்டத்திலேயே 2வது பெரிய நகரம் கோவில்பட்டி. கோவில்பட்டி கடலை மிட்டாய் என்றால் உலகப் பிரசிதம். சமீபத்தில் கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடலைமிட்டாய் தொழிலில் மட்டும் சுமார் 150க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்களும், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் மட்டும் சுமார் ரூ.350 கோடிக்கு வர்த்தகம் நடைபெறுகிறது.
மேலும், தீப்பெட்டித் தொழில், பட்டாசு ஆலைகள் மூலம் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்பெற்று வருகின்றனர். கரிசல் பூமியான கோவில்பட்டி பகுதியில் பருத்தி, உளுந்து, பாசி, சோளம், வெங்காயம், மிளகாய், எலுமிச்சை, மக்காச்சோளம் ஆகியவை அதிகளவில் விளைகிறது.
மேலும், கோரைப்புல் அதிகமாக விளைவதால் கயத்தாறு பகுதிகளில் கோரைப்பாய் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் கயத்தாறு சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 70க்கும் மேற்பட்ட கோரைப்பாய் தயாரிப்பு நிறுவனங்களும், அதில் ஏராளமான தொழிலாளர்களும் பணிபுரிகின்றனர். இவைதவிர நூற்பாலை, ஆயத்த ஆடை தயாரிப்பு என பல்வேறு தொழில்கள் நடைபெற்று வருகின்றன.
சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் தொழிலாளர்கள் மிகுதியாக உள்ள தொகுதி கோவில்பட்டியாகும். இதில் கடம்பூர், கயத்தாறு, கழுகுமலை பேரூராட்சிகளும் அடக்கம். தொழிலாளர்கள் மிகுந்த தொகுதியாக இருப்பதால் இது கம்யூனிஸ்ட் கட்சிகளின் கோட்டையாகவே விளங்கி வருகிறது.
இதுவரை இத்தொகுதியில் நடைபெற்ற 15 தேர்தல்களில் 7 முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றுள்ளது. 4 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது. 3 முறை காங்கிரஸும், 1 முறை சுயேட்சையும் வெற்றி பெற்றுள்ளனர்.
கடந்த முறை இத்தொகுதியில் வென்ற கடம்பூர் ராஜூ அமைச்சர் பதவியை பெற்றதால், இப்பகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் முறையாக அமைச்சரான எம்எல்ஏ எனப் பெயர் பெற்றார்.
இந்நிலையில், கடந்த முறை தேர்தலில் போட்டியிட்டு 2 ஆம் இடம் பிடித்த திமுகவே இம்முறை இத்தொகுதியில் போட்டியிடும் என அக்கட்சியினர் ஆவலுடன் எதிர்பார்த்து சுமார் 40 திமுகவினர் விருப்ப மனு அளித்திருந்த நிலையில், இத்தொகுதி கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஓதுக்கப்பட்டது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அதிலும் குறிப்பாக மார்க்சிஸ்ட் சார்பில் போட்டியிடும் கே.ஸ்ரீனிவாசன், 2 முறை நகர்மன்ற உறுப்பினராக பதவி வகித்தவர். தற்போது கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார்.
இத்தொகுதியில் அதிமுக, அமமுக போட்டியில் தற்போது மார்க்சிஸிட்டும் களமிறங்க ஏற்கெனவே தகிக்கும் கந்தக பூமியான கோவில்பட்டியில் தற்போது தேர்தல் மும்முனைப் போட்டியால் அனல் பறந்து வருகிறது.
ஆம், கோவில்பட்டியில் அமமுக சார்பில் போட்டியிடும் டிடிவி தினகரன், அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஆகியோருடன் கடும் போட்டியில் களமிறங்கியுள்ளார் கே. சீனிவாசன்.
ஸ்ரீனிவாசன் யார்?
1996ல் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் அப்போதைய மாவட்டச் செயலர் சம்பத் திருவைகுண்டம் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி வாய்ப்பை இழந்தார். இந்நிலையில், சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கோவில்பட்டி தொகுதி வழங்கப்பட்டுள்ளது கட்சியினர் இடையே மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.
மார்க்சிஸ்ட் வேட்பாளரான சீனிவாசன் மிகச் சாதாரண குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு வந்தவர். தொழிலாளர் நலனுக்காக பாடுபட்டு வருபவர். அந்த காலத்து எஸ்எஸ்எல்சி முடித்துள்ள இவர், கோவில்பட்டி அருகேயுள்ள ஊத்துப்பட்டியை பூர்வீகமாகக் கொண்டவர். ஆனால் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கோவில்பட்டியில் வசித்து வருகிறார்.
1979ல் கட்சியில் இணைந்த இவர், சிபிஎம் நகரச் செயலர், தலைவர், டிஓய்எப்ஐ ரத்த தான கழகம், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர், விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலக் குழு உறுப்பினர், மக்கள் ஓற்றுமை மேடை கன்வீனர், ஹாக்கி விளையாட்டுக் கழகம் கன்வீனர், தீப்பெட்டி தொழில் பாதுகாப்புக் குழு கன்வீனர் என பல்வேறு பதவிகளை பல்வேறு துறைகளில் வகித்து அனைத்து தரப்பு மக்களின் ஆதரவை பெற்றவர்.
ஸ்ரீனிவாசன், தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க வேண்டி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தொகுதி மக்களுக்கு இவர் நன்கு அறிமுகமானவர்.
கோவில்பட்டி தொகுதி விவரம்
கோவில்பட்டி தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 29 ஆயிரத்து 484 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 34 ஆயிரத்து 385 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 31 பேர் என மொத்தம் 2 லட்சத்து 64 ஆயிரத்து 900 பேர் உள்ளனர். அனைத்து சமுதாய மக்களும் பரவலாக வாழும் இத்தொகுதியில், தீர்க்க வேண்டிய பிரச்னைகளும் நிறைய உள்ளன.
தீப்பெட்டி மற்றும் பட்டாசுத் தொழில் நலிவடைந்து வருவதைத் தடுக்க தீப்பெட்டி மற்றும் பட்டாசு ஆலை அதிபர்கள் மற்றும் தொழிலாளர்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு நெடுங்காலமாக கிடப்பில் உள்ளன.
சத்துணவில் முட்டை வழங்குவது போல சத்து மிகுந்த கடலைமிட்டாயை அரசு கொள்முதல் செய்து மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், பாய் உற்பத்திக்குத் தேவையான கோரைப்புல் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு ஏற்படுவதாகவும், இடைத்தரகர்கள் தலையீட்டால் அதிக விலைக்கு வாங்க நேரிடுவதாகவும், இதனைத் தடுக்க அரசே கோரைப்புல்லை கொள்முதல் செய்து மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மேலும், பாய் கொள்முதல் நிலையம் அமைக்கவேண்டும் என்றும், நகரில் அதிகரித்துவரும் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கவும், கூடுதல் பேருந்துகளை இயக்குவது போன்றவையே மக்களின் முக்கிய கோரிக்கைகளாக உள்ளன.
கோவில்பட்டி தொகுதியில் அதிமுக கடந்த இரு முறை வெற்றி பெற்றதால் 3ஆவது முறையாக வெற்றி பெற்று கோவில்பட்டியை அதிமுகவின் கோட்டையாக நிலைநிறுத்த கடம்பூர் ராஜூ ஓர்புறம் திட்டமிட்டுள்ளார். ஆனால் இருமுறை வென்றும் கடம்பூர் ராஜூ மக்களின் தேவைகளை முறையாக பூர்த்தி செய்யவில்லை. ஆகவே இம்முறை அனைத்து தரப்பு மக்களும் வாக்கும் அவருக்கு எதிராகவே திரும்பும் என்ற கணிப்பில்தான் அதே தொகுதியில் தைரியமாக களமிறங்குகிறார் டிடிவி தினகரன்.
ஆனால், கோவில்பட்டி தொகுதி கம்யூனிஸ்ட் ஆதரவு கொண்ட தொகுதி. இங்கு 7 முறை அவர்கள் வென்றுள்ளனர். இங்கு பாரம்பரிய கம்யூனிஸ்ட் வாக்களர்கள் அதிகம். கிட்டத்தட்ட 40 சதவீதம் பேர் கம்யூனிஸ்ட் வாக்காளர்கள். எனவே,
ஆர்கே நகரில் தினகரனிடம் படுதோல்வி அடைந்தது போல நடைபெறாமல் இருக்க, அதிமுக, அமமுகவுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தவே சிபிஎம்-மை திமுக இத்தொகுதியில் களமிறக்கியுள்ளது என்றும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றத் தகுந்தவர் யார் என மக்கள் நினைக்கிறார்களோ அவர்களுக்கே இத்தொகுதியில் வெற்றி வாகை உறுதியாகும்.
பெயர்: கே. சீனிவாசன்
வயது: 57
கல்வி: எஸ்எஸ்எல்ஸி
மனைவி: எஸ். குமுதம், மகள்கள்: எஸ். நந்தா, எஸ். தெரசா
போட்டியிடும் தொகுதி: கோவில்பட்டி.
கட்சி: சி.பி.எம்
சிறப்பம்சம்: 40 ஆண்டுகளாக தொகுதியில் அறியப்பட்டவர், கட்சியிலும், சமூகத்திலும் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர், 2 முறை நகர்மன்ற உறுப்பினர் பதவி வகித்தவர், தற்போது கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்.
எதிரணி வேட்பாளர்கள்: கடம்பூர் ராஜூ(அதிமுக), டிடிவி தினகரன் (அமமுக), கோமதி (நாம் தமிழர் கட்சி)
(பொறுப்புத்துறப்பு: இத்தொடரில் நாங்கள் வெளிப்படுத்தும் வேட்பாளர்கள், கட்சிக்கு அப்பாற்பட்டு மக்கள் மத்தியில் சமூக செயற்பாட்டாளர்களாக திகழ்பவர்கள். இக்கட்டுரை எந்த கட்சிக்கும் சார்பின்றி எழுதப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். யுவர்ஸ்டோரி எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் சார்பானது அல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.)