Tata Airbus: இந்தியாவில் ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப் போகும் டாடா குழுமம் - பிரான்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம்!
உப்பு முதல் மென்பொருள் வரை பல வணிகங்களை விரிவுபடுத்தும் டாடா குழுமம், தற்போது விமானப் போக்குவரத்துத் துறையில் முக்கியமான ஒப்பந்தம் ஒன்றினை செய்துள்ளது.
உப்பு முதல் மென்பொருள் வரை பல வணிகங்களை விரிவுபடுத்தும் டாடா குழுமம், தற்போது விமானப் போக்குவரத்துத் துறையில் முக்கியமான ஒப்பந்தம் ஒன்றினை செய்துள்ளது.
இந்தியாவின் முன்னணி நிறுவனமான டாடா குழுமம், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஏர்பஸ் நிறுவனத்துடன் உள்நாட்டில் ஹெலிகாப்டர் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் நமது நாட்டிலேயே ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்படவுள்ளன. இதனை வெளியுறவுச் செயலர் வினய் குவாத்ரா உறுதிப்படுத்தியுள்ளார்.
பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் தனது டெல்லி பயணத்தின் போது அளித்த வாக்குறுதிகளில் ஒன்றாக இரண்டு நிறுவனங்களுக்கிடையில் H125 ஹெலிகாப்டர்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்த ஒப்பந்தம் பிரான்ஸ் மற்றும் இந்தியா இடையே வளர்ந்து வரும் உறவுகளை வலுப்படுத்த உதவும், குறிப்பாக பாதுகாப்பு, அணுசக்தி மற்றும் விண்வெளி துறையில் முன்னேற்றம் காண உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு நிறுவனங்களும் இணைந்தது குறைந்தது நாற்பது C-295 போக்குவரத்து விமானங்களை வதோதரா வசதியில் உருவாக்க உள்ளனர். இது டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் (TASL) மூலம் கண்காணிக்கப்படும். முக்கிய பாகங்களை அசம்பிள் செய்வது, ஏவியோனிக்ஸ், மிஷன் சிஸ்டம்ஸ், எலக்ட்ரிக்கல் ஹார்னஸ்கள் நிறுவுதல், ஹைட்ராலிக் சர்க்யூட்கள், ஃப்ளைட் கன்ட்ரோல்கள், டைனமிக் பாகங்கள், எரிபொருள் அமைப்பு, என்ஜின்கள் அசெம்பிள் ஆகிய பணிகள் இந்தியாவில் மேற்கொள்ளப்படவுள்ளன.
முதல் 'மேட் இன் இந்தியா' எச்125 ஹெலிகாப்டர்களின் டெலிவரி 2026ல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏர்பஸ் தலைமை நிர்வாக அதிகாரி குய்லூம் ஃபோரி கூறுகையில்,
“மேட்-இன்-இந்திய' சிவில் ஹெலிகாப்டர் என்பது நம்பிக்கையான புதிய இந்தியாவின் அடையாளமாக மட்டுமல்லாமல், நாட்டில் ஹெலிகாப்டர் சந்தையின் உண்மையான திறனை வெளிப்படுத்தும்,” எனக்கூறியுள்ளார்.
நாட்டின் முதல் ஹெலிகாப்டர் அசெம்பிளி வசதியை தனியார் துறையில் அமைப்பதில் டாடா குழுமம் மகிழ்ச்சி அடைவதாக டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
"இந்தியாவின் முதல் ஹெலிகாப்டர் அசெம்பிளி வசதியை தனியார் துறையில் அமைப்பதில் டாடா குழுமம் மகிழ்ச்சியடைகிறது. இதன் மூலம் உலகில் அதிகம் விற்பனையாகும் ஒற்றை எஞ்சின் ஹெலிகாப்டர்களான ஏர்பஸ் எச்125 ஒற்றை எஞ்சின் ஹெலிகாப்டர்கள் உற்பத்தி செய்யப்படும்,” என்றார்.
இந்த புதிய ஒப்பந்தம், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட H125 ஹெலிகாப்டர்களின் பயன்பாட்டை இது ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2023 இல், பிரான்சில் நடந்த பாஸ்டில் தின கொண்டாட்டத்தில் மோடி கலந்து கொண்டார், அங்கு கூடுதல் நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கான திட்டங்களை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.