ரூ.3000 முதலீடு; இன்று ஆண்டிற்கு ரூ.40 லட்சம் டர்ன் ஓவர்: பாட்டி கால பாரம்பரிய உணவு விற்பனையில் ‘Smartika’ காயத்ரி
பாரம்பரிய உணவை எளிய முறையில் உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற கனவில், ரூ. 3000 முதலீட்டில் சிறிய அளவில் தொடங்கி இன்று ஆண்டிற்கு ரூ. 40 லட்சம் டர்ன் ஓவர் செய்து வருகிறார் ஸ்மர்ட்டிகா காயத்ரி.
சிலருக்கு சிறுவயது முதலே நம்மால் முடிந்த அளவிற்கு மற்றவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற ஆசை, கனவு இருந்து தொழில்முனைவர் ஆவார்கள். வேறு சிலரோ சந்தர்ப்ப சூழ்நிலையால், தொழில்முனைவர் ஆகி, அதில் வெற்றி பெற உழைப்பார்கள்.
‘Smartika Home Essentials’ காயத்ரி சுந்தர் இந்த இரண்டு வகைகளிலுமே பொருந்தக்கூடியவர்.
பல தரப்பட்ட தொழில்களைக் கொண்ட பிசினஸ் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, பிசினஸ் குடும்பத்தில் மணமாகிச் சென்றவர்தான் காயத்ரி. ஆனால், பிசினஸே வேண்டாம் என அவரும், அவர் கணவரும் மாதச் சம்பள வேலைக்குச் செல்ல, காலம் அவரை மீண்டும் தொழில்முனைவர் ஆக்கி, இன்று 15 பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தந்து, ஆண்டிற்கு ரூ.40 லட்சம் டர்ன் ஓவர் செய்யும் அளவிற்கு வாழ்க்கையில் உயர்த்தியிருக்கிறது.
இந்த வெற்றிக்குப் பின்னால் அவர் கற்றுக் கொண்ட பாடங்களும், கடந்து வந்த கசப்பான அனுபவங்களும் நிறைய உண்டு...
சேலம் பக்கத்தில் இளம்பிள்ளை என்கிற சிறிய கிராமத்தில் பிறந்தவர் காயத்ரி. 22 பேர் கொண்ட பெரிய கூட்டுக்குடும்பம் அவருடையது. அப்பா, பெரியப்பா, சித்தப்பா என குடும்பத்தில் இருந்த ஆண்கள் அனைவரும் ஒவ்வொரு தொழிலில் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்க, அவர்களுக்குத் துணையாக அவர்களது மனைவியரும் அதே தொழிலில் உதவியாக இருந்தனர்.
பள்ளி முடித்த ஒரு வருடத்திற்குள் காயத்ரிக்கு குடும்பத்தார் திருமணம் செய்து வைத்து விட்டனர். கணவர் குடும்பமும் வியாபாரத்திற்குப் பேர் போனது. ஆனால், காயத்ரியின் கணவருக்கு மட்டும் ஐடி துறையில் ஆர்வம் ஏற்பட, தந்தையின் வியாபாரத்தைவிட்டு விலகி, வெளிநாட்டிற்குச் சென்று மேல்படிப்பு முடித்து, வேலைக்குச் சேர்ந்துள்ளார். கணவரின் வேலை நிமித்தம் வெளிநாடு சென்ற போது தான், தமிழக பாரம்பரிய உணவுகள் அங்கும் கிடைக்காமல் மிகவும் கஷ்டப்பட்டுள்ளார்.
“ஆரம்பத்தில் அங்கு கிடைக்கும் ரெடி டூ ஈட் வகை உணவுகள் எனக்கும் பிடித்திருக்கவே செய்தது. ஆனால், நாட்கள் ஆக ஆக அது சலித்துப் போக ஆரம்பித்து விட்டது. ஊரில் அம்மா, பாட்டி செய்து கொடுக்கும் ஆரோக்கியமான வீட்டு உணவுகளை மனது தேட ஆரம்பித்துவிட்டது. இரண்டு வயதான எனது மகளுக்கு, நான் சாப்பிட்டது மாதிரியான ஆரோக்கியமான உணவுகளை தர முடியவில்லையே என்ற வேதனை ஏற்படத் தொடங்கியது. நிறைய நேரம் கிடைத்தும், மனதிற்கு பிடித்தவைகளை செய்து சாப்பிட முடியவில்லை. காரணம் அங்கு நம் பாரம்பரிய உணவுப் பொருட்கள் கிடைக்கவில்லை," என்றார் காயத்ரி.
மூன்று வருடங்களுக்குப் பிறகு சென்னைக்கு வந்து விட்டோம். ஆனால், இங்கு வந்த பிறகும் செக்கு எண்ணெய் எனக்குக் கிடைக்கவில்லை. ஒவ்வொரு முறையும் சேலத்தில் இருந்துதான் செக்கு எண்ணெய் கொண்டு வந்தேன்.
”வெளிநாட்டில் தான் நம்மூர் உணவு கிடைக்கவில்லை என்றால், தமிழகத்தின் தலைநகர் சென்னையில்கூட கிடைக்கவில்லையே என்ற வருத்தம் எனக்கு ஏற்பட்டது. அந்த வருத்தம் தான் பின்னாளில் நான் தொழில்முனைவோராக முக்கியக் காரணமாக மாறியது” என்கிறார் காயத்ரி.
தனது இரண்டாவது மகளுக்கு ஏழு மாதங்கள் என்பதால், வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தபோது, ஃபேஸ்புக்கில் சமையல் தொடர்பான குரூப் ஒன்றில் சேர்ந்துள்ளார் காயத்ரி. அங்கு ஒருமுறை எள் எண்ணெய்யால் பெண்களுக்கு என்னமாதிரியான நன்மைகள் என செக்கு எண்ணெய் பற்றி விழிப்புணர்வு பதிவு ஒன்றை அவர் பதிவிட, அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அந்தப் பதிவைப் பார்த்த ஒருவர் தனக்கும் செக்கு எண்ணெய் வேண்டும், வாங்கித்தர முடியுமா என ஆசையாகக் கேட்டுள்ளார். அப்போது தனது சொந்த உபயோகத்திற்கு வாங்கி வைத்திருந்த எண்ணெய்யில் சிறிதை அவருக்கு அளித்துள்ளார் காயத்ரி. அதை வாங்கியவர், அந்த எண்ணெய் நன்றாக இருந்ததாக, சிலாகித்துப் போய் காயத்ரியின் எண்ணெய் வீடியோவின் கமெண்டிலேயே பதிவு ஒன்றைப் போட்டுள்ளார்.
கைம்மாறு பாராமல் காயத்ரி அன்று செய்த உதவிதான், அவரை தொழில்முனைவர் ஆக்கியது. ஆம், அந்தப் பதிவைப் பார்த்த இன்னும் சிலர் தங்களுக்கும் அதே மாதிரி எண்ணெய் வாங்கித்தர முடியுமா என காயத்ரியிடம் கேட்கத் தொடங்கியுள்ளனர்.
“தொடர்ந்து பலரும் ஃபேஸ்புக்கில் என்னிடம் செக்கு எண்ணெய் கேட்கத் தொடங்கினர். இரண்டு தலைமுறைகளாக குறிப்பிட்ட ஒரு செக்கில் இருந்துதான் எங்களது குடும்பத்தினர் எண்ணெய் வாங்கி வருகிறோம். எனவே, அங்கேயே நாமும் கொஞ்சம் எண்ணெய் வாங்கி, அதனை விற்கத் தொடங்கினால் என்ன என என் கணவர் யோசனை கூறினார். வெளியில் சென்று வேலை பார்ப்பதைவிட, ஆன்லைனில் இப்படி வேலை பார்ப்பது எனக்கும் சரியெனத் தோன்றியது. எனவே, 2014ம் ஆண்டு சிறிய அளவில் ரூ.3000 முதலீட்டில் செக்கு எண்ணெய் வியாபாரம் செய்யத் தொடங்கினோம்.”
முதலில் வெறும் நல்லெண்ணெய் மட்டுமே விற்பனை செய்தோம். ஆனால், வாடிக்கையாளர்களே அடுத்தடுத்து கடலை எண்ணெய் கிடைக்குமா, தேங்காய் எண்ணெய் கிடைக்குமா, நல்ல தூய்மையான நெய் கிடைக்குமா என கேட்கத் தொடங்கினர்.
எனவே, நாங்கள் ஒவ்வொரு புதிய பொருளாக அறிமுகம் செய்ய ஆரம்பித்தோம். கொஞ்சம் கொஞ்சமாக வியாபாரம் அதிகமாவதை உணர்ந்தோம்.
“எனவே, எங்களுக்கென தனி ஒரு பிராண்டை உருவாக்க முடிவு செய்தோம். அப்படித்தான் Smartika உருவானது. 'ஸ்மர்ட்டிகா' என்ற வார்த்தைக்கு சமஸ்கிருதத்தில் பாரம்பரிய உணவு என்று அர்த்தம். பாரம்பரிய முறையில் செய்யப்பட்டது என்பதே பொருள்,” என்கிறார் காயத்ரி.
விற்பனையில் திடீர் சரிவு
தனியாக கடை எதுவும் ஆரம்பிக்காமல் ஃபேஸ்புக்கில் தனி பக்கம் ஆரம்பித்து தனது ஸ்மர்ட்டிகா எண்ணெய் வியாபாரத்தை நடத்தி வந்துள்ளார் காயத்ரி. ஆரம்பத்தில் அவருக்கு தொழில் போட்டி எதுவும் இருக்கவில்லை. ஆனால் நாளாக நாளாக செக்கு எண்ணெய் பற்றிய விழிப்புணர்வு அதிகமாக, சென்னையில் நிறைய பேர் இந்த வியாபாரத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். இதனால் காயத்ரியின் வாடிக்கையாளர் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது.
“எனது வியாபாரம் குறைகிறதே என்ற வருத்தம் இருந்தாலும், செக்கு எண்ணெய் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் அதிகரித்திருக்கிறதே என எனக்கு அப்போது மகிழ்ச்சியாக இருந்தது. நன்றாக நடந்து வந்த தொழில் திடீர் என சரிவைச் சந்தித்ததும், இனி எண்ணெய்யை மட்டும் நம்பிக் கொண்டு இருக்கக்கூடாது என முடிவு செய்தேன். எனது நிறுவனத்தின் பெயருக்கு ஏற்ப மேலும் சில பாரம்பரிய உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்துவது என முடிவெடுத்தேன்.”
அதனைத் தொடர்ந்து எனது உறவினர்களிடம் பாரம்பரிய உணவுகள் பற்றி பேசினேன். அப்போது அண்ணி ’சத்துமாவு’ பற்றி கூறினார்கள். நானும் அதனைத் தயாரித்து விற்க ஆரம்பித்தேன். என் மாமியார், முடக்கத்தான், பிரண்டை, தூதுவளை போன்றவற்றைக் கொண்டு தோசை செய்வார்கள். ஆனால், நகரத்தில் இருப்பவர்களுக்கு இதெல்லாம் உடனே கிடைக்காதே.
”எனவே, அவற்றைப் பொடி செய்து கொடுத்தால் வேலைக்கு செல்லும் பெண்களும் சுலபமாக, அதே சமயம் ஆரோக்கியமாக உணவு சமைக்கலாம் என கருதினேன். எனவே சாதத்திற்கு போட்டுக் கொள்ளும் பொடியாக அவற்றைத் தயாரிக்கத் தொடங்கினேன்,” என்கிறார் காயத்ரி.
தொழிலில் நிலைக்க பல தயாரிப்புகள் அறிமுகம்
இப்படியாக ஒவ்வொரு வருடமும் தனது வியாபாரத்தை விரிவுப்படுத்திக் கொண்டே வந்த காயத்ரி, தற்போது 40க்கும் மேற்பட்ட பொருட்களை விற்பனை செய்கிறார். அந்த வரிசையில் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு அவர் அறிமுகப்படுத்தியதுதான் ’மேங்கோசிங்க்’ (Mangozing) எனப்படும் மாங்காய் வடை.
ஒவ்வொரு வருடமும் கொஞ்சம் கொஞ்சமாக தொழிலை விரிவு படுத்திக் கொண்டே வந்தேன். ஒரு கட்டத்தில் சந்தையில் பிரபலமாக உள்ள மற்ற மசாலாப் பொருட்களுக்கு இணையாக கமர்சியலாக்க முடிவு செய்தேன். ஆனால் அது எனக்கு சரிப்பட்டு வரவில்லை. ஒரு ஆர்வத்தில் டிஜிட்டல் மார்க்கெட்டிங்கையும் செய்ய ஆரம்பித்தேன்.
கடந்த 7 ஆண்டுகளாக கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில், புதிதாக அதே சமயம் தனித்துவமான பாரம்பரிய உணவுப் பொருளை அறிமுகப்படுத்த வேண்டும் என நினைத்தேன். ஏனென்றால் ஏற்கனவே சந்தையில் நிறைய மசாலாப் பொடிகள் கிடைக்கின்றன. அவற்றில் பல கமர்சியலாகவே தயாரிக்கப்படுகின்றன. ஆனால், வீட்டில் சிறிய அளவில் செய்து கொண்டிருந்ததால், என்னால் அவர்களுக்கு இணையாக பொருட்களின் விலையைக் குறைக்க இயலவில்லை.
”எனவே, புதிதாக அதே சமயம் பதப்படுத்தும் பொருட்கள் இல்லாமல், தனித்துவமான பாரம்பரிய உணவுப் பொருளை அறிமுகப்படுத்த வேண்டும் என நினைத்தேன். அப்போது கிடைத்த ஐடியா தான் இந்த மாங்காய் வடை. உப்பு, காரம், புளிப்பு. குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களுக்கு இது மிகவும் பிடிக்கும். இரண்டு வருடம் நன்றாக இருக்கும் இந்த மேங்கோசிங்கிற்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.”
ஆனால், இதிலும் ஒரு மைனஸ் இருந்தது. சீசன் முடிந்து விட்டால் மாங்காய் கிடைக்காது. எனவே, வருடம் முழுவதும் கிடைக்கும்படி, மிஷின்களை வைத்து எப்படி இதைத் தயாரிப்பது என நானும் என் கணவரும் நிறைய பேசினோம்.
”இயற்கையாக ஐந்து நாட்களில் செய்வதை, மிஷின்கள் உதவியோடு ஒரே நாளில் எப்படி செய்வது என திட்டமிட்டோம். இப்போது 15 பேர் கொண்ட யூனிட்டை வைத்து மேங்கோசிங்க் தயாரித்து சுமார் 3,500 கடைகளுக்கு விநியோகம் செய்து வருகிறோம்,” என்கிறார் காயத்ரி.
வெளிநாடுகளிலும் Smartika வாடிக்கையாளர்கள்
இந்த Mangozing தயாரிக்கும் யூனிட்டில் 15 பேர் காயத்ரியிடம் வேலை பார்க்கின்றனர். தமிழகம் மட்டுமின்றி, 4 மாநிலங்கள், அமெரிக்கா, சிங்கப்பூர் உட்பட 5 நாடுகள் என உலகம் முழுவதும் காயத்ரிக்கு வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
இதுவரை ரூ. 40 லட்சம் வரை இந்தத் தொழிலில் காயத்ரி முதலீடு செய்துள்ளார். தற்போது ஆண்டிற்கு ரூ.40 லட்சம் டர்ன் ஓவர் செய்து வருவதாகக் கூறுகிறார் அவர்.
“தரத்தில் எப்போதுமே சமரசம் செய்து கொள்ள மாட்டேன். என்னிடம் ஆறு வருடங்களுக்கு முன்பு தாளிப்பு வடாகம் வாங்கியவர்கள்கூட இப்போதும் என்னிடம் வாடிக்கையாளர்களாக உள்ளனர். கொரோனா ஊரடங்கு சமயத்தில், தபால் செலவு அதிகமாக இருந்தால்கூட என்னிடம் இருந்து அமெரிக்காவில் இருப்பவர்கள் தொடர்ந்து பொருட்களை வாங்கினார்கள்.
ரூ.500 பெறுமான சத்துமாவை ரூ.1200 கூரியர் செலவு செய்து வாங்கியவர்கள்கூட உண்டு. தங்கள் குழந்தைக்கு வேறு பொருட்கள் கொடுத்தால் ஒத்துக் கொள்வதில்லை என செலவைப் பற்றியும் கவலைப் படாமல் என்னிடம் இருந்து பொருட்களை வாங்குபவர்கள்தான் என் உந்துசக்தி எனக் கூற வேண்டும்.
சத்துமாவு, நெய், பிரண்டைப் பொடி என என் தயாரிப்புகளில் பலவற்றிற்கு குழந்தை ரசிகர்கள் அதிகம். அதனாலேயே தொடர்ந்து அவற்றைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறேன்.
“பாட்டி கால உணவுகளை உலகத்திலுள்ள அனைத்து தமிழ் மக்களுக்கும் சுலபமான முறையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் என் கனவு,” என்கிறார் காயத்ரி.
ஆரம்பத்தில் காயத்ரி இப்படி எண்ணெய் வியாபாரம் செய்வதற்கு அவர்கள் குடும்பத்தாரே உறுதுணையாக இருக்கவில்லை. 70க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பைத் தரும் நிறுவனங்களை நடத்தி வரும் குடும்பத்தில் இருந்து வந்து, எண்ணெய் விற்பதா? உறவினர்கள் கிண்டல் செய்வார்கள் என்றெல்லாம் விமர்சித்துள்ளனர். ஆனால் அந்த விமர்சனங்களை காயத்ரி காதில் போட்டுக் கொள்ளவில்லை.
“ஒவ்வொரு கட்டத்திலும் விமர்சனங்கள்தான் எங்களை ஓட வைக்கும் தூண்டல்களாக இருந்தது. பரம்பரை தொழில்முனைவோரான எங்களது குடும்பங்களிலேயே, அடுத்தடுத்த தலைமுறையெல்லாம் குடும்பத் தொழிலை விட்டு வெளியே செல்லத் தொடங்கி விட்டனர். இப்படியே போனால் எங்களிடம் வேலை பார்த்தவர்களின் குடும்பம் என்னவாகும் என யோசித்தேன். எனவே, என்னால் முடிந்தளவிற்கு வேலைவாய்ப்பை உருவாக்கித்தர வேண்டும்,” என முடிவு செய்தேன்.
இப்போது 15 பேருக்கு வேலை கொடுத்துள்ளோம் என்ற திருப்தி கிடைத்துள்ளது. எதிர்காலத்தில் 100 பேருக்காவது வேலை கொடுக்க வேண்டும். இன்னும் பல பாரம்பரிய உணவுப் பொருட்களை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும். அதுதான் என் எதிர்காலத் திட்டம், என்கிறார் காயத்ரி.