'ரோட்ல டாட்டா காரே இல்ல...’ - மனைவி கேட்ட கேள்வியால் மாறிய TATA Car வரலாறு - என்.சந்திரசேகரன்!
தனது மனைவி கூறிய கருத்தே இன்று சாலைகளில் அதிக அளவிலான டாடா கார்களை பார்க்கக் காரணம் என டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் நடராஜன் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி மனைவி சுதா மூர்த்தி அவரது கணவரின் வளர்ச்சிக்கு தான் முக்கியப் பங்காற்றியிருந்ததை தெரிவித்திருந்தார். இன்று டாடா கார்களின் எண்ணிக்கை குறித்து தனது மனைவி கூறிய கருத்தே, இன்று சாலைகளில் அதிக அளவிலான டாடா கார்களை பார்க்கக் காரணம் என டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகரன் நடராஜன் தெரிவித்துள்ளார்.
டாடா சன்ஸ் (Tata Sons) தலைவரும், இந்திய தொழிலதிபருமான என்.சந்திரசேகரன் சமீபத்தில் BT Mindrush 2023 கருத்தரங்கில் ‘Reinventing Tata’ என்கிற தலைப்பில் பேசியுள்ளார்.
அந்த உரையாடலில் டாடா நிறுவனத்தின் வெற்றிகள், தோல்விகள், வாடிக்கையாளருடனான உறவு என பல விஷயங்கள் குறித்து பேசியுள்ளார். அதிலும், குறிப்பாக அவருடைய மனைவி கொடுத்த ஐடியா பற்றி சந்திரசேகரன் பகிர்ந்துள்ள சுவாரஸ்ய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

N Chandrasekaran, Chairman, Tata Sons
தனது மனைவி லலிதா சந்திரசேகரனை பற்றி பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு விஷயத்தை நினைவு கூர்ந்துள்ளார்,
“நான் லோனாவாலாவுக்கு வண்டி ஓட்டிச் செல்வேன், என் மனைவி என் அருகில் அமர்ந்து கார்களை எண்ணிக்கொண்டே வந்தார். ஒருமுறை அப்படி செல்லும்போது ஏன் சாலைகளில் டாடா கார்களே இல்லை. ஏதாவது செய்யுங்கள்... என்னால் ஏன் சாலையில் டாடா கார்களை அவ்வளவாக பார்க்க முடியவில்லை?” எனக்கேட்டார்.
அதனை சவாலாக எடுத்துக்கொண்டு உழைத்ததால் இன்று அதிக எண்ணிக்கையிலான டாடா கார்களை சாலையில் பார்க்க முடிகிறது எனக்கூறியுள்ளார்.
டாடா மோட்டார்ஸின் மாற்றம் குறித்துப் பேசிய சந்திரசேகரன், தனது அணி கடினமாக உழைப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
"நாங்கள் நம்பமுடியாத அளவிற்கு சிறப்பாகச் செயல்பட்டுள்ளோம், மிகக் குறுகிய காலத்தில் சந்தையின் 80 சதவீதத்தை நாங்கள் சொந்தமாக வைத்திருக்கிறோம்," என்று சந்திரசேகரன் கூறினார்.
டாடா மோட்டார்ஸ் புதிதாக 10 எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்த உள்ளது.
“வெளியீடுகளில் நாம் பின்வாங்க முடியாது - ஒவ்வொரு தயாரிப்பும் நன்றாக இருக்க வேண்டும், தரம் நன்றாக இருக்க வேண்டும், தனிப்பயனாக்கம் நன்றாக இருக்க வேண்டும். இன்னும் எங்களிடம் உள்ள தொழில்நுட்பத்தில் கார்களை அறிமுகப்படுத்தி வருகிறோம். 2025ம் ஆண்டு அறிமுகமாகவிருக்கும் கார்களுக்காக எங்கள் தொழில்நுட்பத்தை முழுமையாக புதுப்பித்து வருகிறோம். உலகின் மற்ற நாடுகளை விட இந்திய கார்கள் தொழில்நுட்பம் குறைவாக இருப்பதற்கு எந்த காரணமும் இல்லை.”
புதுமையான வாகனங்களுக்காக நிறுவனம் பல்வேறு ஸ்டார்ட்அப்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக கூறிய சந்திரசேகரன், லித்தியம் அயன் பேட்டரிகள் நிலையானது அல்ல, எனத் தெரிவித்துள்ளார்.
நிறுவனங்கள் புதுமைகளை உருவாக்க வேண்டும் என்றாலும், அவற்றின் தழுவல் மற்றும் சுறுசுறுப்பு ஆகியவை வேகமாக இருக்க வேண்டும். இதற்காக நாங்கள் 4 ஆண்டுகள், 3 ஆண்டுகளில் செய்வோம் என்று சொல்ல முடியாது, என்றார்.

‘என் மருமகன் ரிஷி பிரதமர் ஆக என் மகளே காரணம்’ - இன்ஃபோசிஸ் சுதா மூர்த்தி!