தமிழகத்துக்கு ரூ.8 கோடிக்கு கொரோனா பிசிஆர் கிட் வழங்கிய டாடா குழுமம்!
டாடா குழுமம் சார்பில் கொரோனா கண்டறியும் கிட் கருவிகளை வழங்கியதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸை கண்டறியும் பிசிஆர் கருவிகளை தமிழக அரசுக்கு வழங்கி டாடா குழுமம் உதவி செய்துள்ளது.
முதலமைச்சர் வேண்டுகோளை ஏற்று, கொரோனா வைரஸ் பாதித்தவர்களை கண்டுபிடிக்கவும், சிகிச்சை அளிக்கத் தேவையான கருவிகளையும் பல்வேறு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.
இந்நிலையில் டாடா குழுமம் சார்பில் கொரோனா கண்டறிவதற்காக சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பில் 40 ஆயிரத்து 32 பிசிஆர் கிட் கருவிகளை டாடா குழுமம் வழங்கியுள்ளது. இந்த உதவிக்காக டாடா குழுமத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்புக்கு தமிழக அரசுக்கு தோள் கொடுக்கும் விதமாக பல்வேறு தனிநபர்களும், நிறுவனங்களும் தங்களால் ஆன உதவிகளை செய்து வருகின்றன. முதல் அமைச்சர் நிவாரண நிதிக்கு நிவாரண உதவிகளை பல தனியார் நிறுவனங்கள் செய்து வருகின்றன.
ஏற்கன்வே டாடா ட்ரஸ்ட் சார்பில் 500 கோடி ரூபாயை வழங்குவதாக அதன் தலைவர் ரத்தன் டாடா அறிவித்திருந்தார். மேலும் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் இந்த வைரஸ் தற்போது மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு உடனடியாக தீர்வுகாணவேண்டும் என்றார் டாடா.
“இந்த சிக்கலான சூழலை எதிர்த்துப் போராட டாடா ட்ரஸ்ட், டாடா சன்ஸ், டாடா குழுமம் ஆகியவை உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்ட்னர்களுடனும் அரசாங்கத்துடனும் ஒருங்கிணைந்த பொது சுகாதார தளத்தில் ஒன்றிணைகிறது. இந்தத் தளமானது நலிந்த, பின் தங்கிய மக்களைச் சென்றடையத் தொடர்ந்து போராடும்,” என்று குறிப்பிட்டிருந்தார்,
அவர் மேலும் கூறும்போது, “இந்த நோய் தொற்றை எதிர்த்துப் போராடுவதற்காக தங்கள் உயிரையும் பணயம் வைத்து பணியாற்றும் ஒவ்வொருவருக்கும் எங்களது நன்றியையும் மரியாதையையும் தெரிவித்துக்கொள்கிறோம்,” என்றார்.