பிஸ்லெரி நிறுவனத்தின் பங்குகளை வாங்க டாடா குழுமம் திட்டம்!
இந்தியாவின் மிகப்பெரிய மினரல் வாட்டர் தயாரிப்பு நிறுவனம் பிஸ்லரியின் பங்குகளை வாங்குவதற்கு டாடா குழுமம் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய மினரல் வாட்டர் தயாரிப்பு நிறுவனம் பிஸ்லெரி இண்டர்நேஷனலில் பங்குகளை வாங்குவதற்கான கோரிக்கையை டாடா குழுமம் சமர்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
பிஸ்லெரி நிறுவனத்திடம் பங்குகளை வாங்குவதற்கான விருப்பத்தை டாடா குழுமம் சமர்பித்துள்ளதாகவும், இதை படிப்படியாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், இந்த முயற்சி தொடர்பாக அறிந்த நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
"பேக்கேஜ் செய்த குடிநீர் பிரிவில் இது நுழைவு பிரிவு, மத்திய பிரிவு மற்றும் பிரிமியம் பிரிவில் டாடா குழுமம் மிகப்பெரிய அளவில் காலூன்ற வாய்ப்பாக அமையும். ரீடைல் விநியோகம், ஓட்டல்கள் விநியோகம் ஆகியவற்றிலும் சாதகம் அளிக்கும், ஏனெனில் பிஸ்லெரி இந்த பிரிவுகளில் முன்னிலை வகிக்கிறது,” என்று அவர்கள் தெரிவித்தனர்.
டெட்லி டீ, எய்ட் ஓ கிளாக் காபி உள்ளிட்ட பிராண்ட்களை கொண்டுள்ள டாடா குழுமத்தின் நுகர்வோர் பிரிவு கையகப்படுத்தலை தீவிரமாக நோக்கி வருவதாக அண்மையில், இதன் முதன்மை அதிகாரி சுனில் டிசோசா கூறியிருந்தார்.
டாடா குழுமம், நரிஷ்கோ எனும் பெயரில் சொந்த தண்ணீர் வர்த்தகம் கொண்டிருந்தாலும், அது சிறிய அளவிலேயே இருக்கிறது. இந்நிலையில், டாடா குழுமம், நுகர்வோர் பிரிவு அல்லது குழும அளவில் கையகப்படுத்தலை மேற்கொள்ள இருப்பதாக அதிகாரிகளில் ஒருவர் தெரிவித்தார்.
பிஸ்லெரி நிறுவனம், இந்தியா முழுவதும் 150 உற்பத்தி ஆலைகள், 4,000க்கு மேற்பட்ட விநியோகிஸ்தர்கள், 5,000 டிரக்குகளை கொண்டிருப்பதாக அதன் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கையகப்படுத்தல் திட்டம் தொடர்பாக கருத்து கேட்கப்பட்ட போது சந்தை யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது என டாடா குழும செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். பிஸ்லெரி தரப்பிலும் அதன் தலைவர் ரமேஷ் சவ்கானின் கருத்தை அறிய முடியவில்லை என இது தொடர்பான செய்தியில் எகனாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
பிஸ்லெரி நிறுவனம் மினரல் வாட்டர் தவிர, லிமனோட்டா, ஸ்பைசி, சோடா உள்ளிட்டவற்றையும் விற்பனை செய்கிறது. பிஸ்லெரி செயலி மூலமும் விநியோகம் செய்கிறது.
மினரல் வாட்டர் பிரிவில், கோகோ கோலாவின் கின்லே மற்றும் பெப்சியின் அக்வாபினா உள்ளிட்ட பிராண்ட்கள், பிஸ்லெரிக்கு பின் தங்கியுள்ளன. பிஸ்லெரி 32 சதவீத சந்தை பங்கு கொண்டுள்ளதாக நீல்சன் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
பிஸ்லெரியின் பங்குகளை விற்பதாக இருந்தால், பிராண்டை வளர்க்கக் கூடிய இந்திய நிறுவனத்திற்கே விற்பேன் என்று ரமேஷ் சவ்கான் இதற்கு முன் கூறியிருந்தார்.
ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்துடன் அண்மையில் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் ஆனால் இது வெற்றிபெறவில்லை என்றும் மேலே குறிப்பிட்ட அதிகாரி தெரிவித்தார். நெஸ்லே உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களும் பிஸ்லெரியில் பங்குகளை வாங்க ஆர்வம் காட்டியுள்ளன.
சவ்கான் மகள், வர்த்தகத்தை கவனித்து வந்தாலும், அவருக்கு வேறு ஆர்வங்கள் உள்ளன. தம்ஸ் அப், லிம்கா உள்ளிட்ட புகழ் பெற்ற பிராண்ட்களை சவ்கான் உருவாக்கினார். இவை கோகோ கோலாவால் கையகப்படுத்தப்பட்டன.
தொகுப்பு: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan