10 ஆர்டர் டூ 10 ஆயிரம் வாடிக்கையாளர்: ரூ.1.2 கோடி வருவாயுடன் வளர்ச்சி அடைந்த ‘டீ ராஜா’
கொல்கத்தாவைச் சேர்ந்த தேநீர் நிறுவனமான Tearaja 2020-21 நிதியாண்டில் 1.8 கோடி ரூபாய் வருவாயை எட்ட திட்டமிட்டுள்ளது.
கொல்கத்தாவைச் சேர்ந்த தேநீர் நிறுவனம் டீராஜா (Tearaja). இதன் நிறுவனர் 32 வயது மனீஷ் ஜெயின். இவர் பில்லியர்ட் மற்றும் ஸ்னூக்கர் குழுவில் உறுப்பினர். இவரது குடும்பத்தினர் தேநீர் வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர்.
2014-ம் ஆண்டு போட்டிகளில் இருந்து சற்றே விலகி இருக்க நேரம் கிடைத்தது. அந்த சமயத்தில் அப்பாவின் வணிகத்தில் தன்னை இணைத்துக்கொள்ளத் தீர்மானித்தார்.
மனீஷின் அப்பா நடத்தி வந்த வணிக முயற்சி குறித்து ஆய்வு செய்தபோது இவருக்கு இரண்டு விஷயங்கள் புலப்பட்டன. அந்த வணிகம் திவாலாகி கடனும் வட்டியும் மட்டுமே அதிகம் இருந்தது. கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக எந்தவித வளர்ச்சியும் வணிகத்தில் இல்லை.
அப்பா நடத்திய வணிகத்தைத் தொடர்ந்து நடத்தத் தீர்மானித்தார் மனீஷ். இன்று டீராஜா ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் 200-க்கும் மேற்பட்ட தேநீர் வகைகளைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்து வருகிறது.
மனீஷின் குடும்பத்தினர் அசாமைச் சேர்ந்தவர்கள். அங்கு தீவிரவாதிகளின் தாக்குதலும் அச்சுறுத்தலும் தீவிரமாக இருந்த சமயத்தில் மனீஷின் அப்பா குடும்பத்துடன் கொல்கத்தாவிற்கு மாற்றலானார். முதலில் ஹார்ட்வேர் வணிகத்தில் ஈடுபட்டார்.
1994-ம் ஆண்டு கொல்கத்தாவின் லால் பஜார் பகுதியில் 150 சதுர அடியில் டீ ஸ்டோர் ஒன்றை அமைத்தார். இங்கு தேயிலையும் டெட்லி, லிப்டன் போன்ற பிரபல டீ பிராண்டுகளும் விற்பனை செய்தார்.
வணிகம் நஷ்டமடைந்ததால் ஏற்பட்ட கடன் மற்றும் வட்டித் தொகை குறித்து மனீஷ் கூறும்போது,
“வாழ்க்கையே தலைகீழாக மாறியது. எங்கள் வீடு, கடை அனைத்தையும் அடமானம் வைத்தோம். விற்பனையாளர்களுக்கு கொடுக்கவேண்டிய தொகையைக் கொடுக்க எங்களிடம் இருந்த அனைத்தையும் விற்பனை செய்யவேண்டியிருந்தது,” என்றார்.
மனீஷ் ரயில்வே ஸ்போர்ட்ஸ் புரொமோஷன் போர்டில் பணிபுரிந்து வந்தார். முழு நேரமாக பிராண்டை உருவாக்கும் நோக்கத்துடன் வேலையை ராஜினாமா செய்தார்.
“புதுமை படைக்காத காரணத்தினாலேயே குடும்ப வணிகம் வளர்ச்சியடையவில்லை,” என்று எஸ்எம்பிஸ்டோரியிடம் அவர் பகிர்ந்துகொண்டார்.
2016-ம் ஆண்டு மனீஷ், டீராஜா நிறுவினார். மாமியார் வீட்டைச் சேர்ந்தவர்களிடமிருந்து 10 லட்ச ரூபாய் கடன் வாங்கி சுயநிதியில் இந்நிறுவனத்தை நிறுவினார். கொல்கத்தாவில் அமேசான் தளத்தில் முதல் டீ விற்பனையாளராக அறிமுகமானதாக மனீஷ் நினைவுகூர்ந்தார்.
“ஒரு மாதத்திற்கு 10 ஆர்டர்களுடன் தொடங்கப்பட்ட நிலையில் இன்று ஒரு மாதத்திற்கு ஆன்லைனில் 4,000 ஆர்டர்கள் பெறுகிறோம்,” என்றார்.
மனீஷின் மனைவி பூனம் ஜெயின் நிறுவனர் குழுவில் இணைந்தார். 32 வயதான இவர் படைப்பாற்றல் திறனுடன் செயல்பாடுகளில் புதுமை புகுத்தி வருகிறார்.
“டார்ஜலிங், அசாம் ஆகிய இரண்டு பகுதிகளுக்கும் மத்தியில் கொல்கத்தா அமைந்துள்ளதால் அதுவே வணிக செயல்பாடுகளுக்கு சரியான இடம் என்று தீர்மானித்து அங்கு நிறுவனத்தைத் தொடங்கினோம்,” என்றார்.
தேநீர் சுவைத்தல், தர பரிசோதனை, பேக்கேஜிங் என 20 ஊழியர்கள் அடங்கிய குழு செயல்படுகிறது. தொழில்நுட்பம் மற்றும் மார்க்கெட்டிங் குழு அவுட்சோர்ஸ் செய்யப்படுகிறது.
இந்நிறுவனம் பார்ட்னராக இணைந்துள்ள தேயிலை எஸ்டேட்களில் இருந்து நேரடியாக தேயிலை வாங்கப்படுகின்றன. இடைத்தரகர்களின் தலையீடு முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டுள்ளதால் நேரம் மிச்சமாகிறது.
“தேயிலை நேரடியாக கொல்கத்தாவில் இருக்கும் எங்களது கிடங்கிற்கு வந்து சேர்கிறது. அங்கு முறையாகக் கலக்கப்பட்டு, பேக் செய்யப்பட்டு உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படுகிறது,” என்கிறார் மனீஷ்.
பிளாக் டீ, டார்ஜிலிங் டீ, ஊலாங் டீ, வொயிட் டீ, கிரீன் டீ, மூலிகை டீ, ஆயுர்வேத டீ, நோய் எதிர்பாற்றல் வழங்கும் டீ என பல வகையான தேயிலைகள் இவர்களது கேட்டலாகில் இடம்பெற்றுள்ளன.
100 கிராம் தேயிலையின் ஆரம்ப விலை 299 ரூபாய். ஒரு கிலோ 40,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
“குறிப்பிட்ட பிரிவினரை மட்டுமே வாடிக்கையாளர்களாகக் கொண்டிருக்கிறோம். வாடிக்கையாளர்களின் வாழ்க்கையில் மதிப்பை சேர்க்க விரும்புகிறோம். எங்கள் டீயின் தரம் மிகச்சிறந்ததாக இருப்பதால் அவர்களே எங்கள் தயாரிப்பை சந்தைப்படுத்துகின்றனர்,” என்றார்.
டீராஜா இதுவரை 10,000-க்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவையளித்துள்ளது. கார்ப்பரேட் கிஃப்டிங் பிரிவில் கவனம் செலுத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்நிறுவனத்தின் வருவாய் கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்து வருகிறது.
2018-19 நிதியாண்டில் 83 லட்ச ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. 4 லட்ச ரூபாய் லாபம் ஈட்டப்பட்டுள்ளது. 2020 நிதியாண்டில் 6 லட்ச ரூபாய் லாபத்துடன் 1.2 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.
“2020-21 நிதியாண்டில் விற்பனை அளவு 1.8 கோடி ரூபாயை எட்ட திட்டமிட்டுள்ளோம்,” என்றார் மனீஷ்.
வருங்காலத் திட்டம்
சந்தைக்கு ஏற்ற சரியான தயாரிப்பைக் கண்டறிவது மிகப்பெரிய சவாலாக இருந்தது என்கிறார் மனீஷ். வாடிக்கையாளர்களின் கருத்துகளை திறந்த மனதுடன் ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப செயல்பட்டதே இன்றைய நிலையை எட்ட உதவியுள்ளது.
“மாறிவரும் அவ்வப்போதைய சந்தை போக்கு, ஆன்லைன் செயல்பாடுகள், வாடிக்கையாளர்கள் தேவை போன்றவற்றைக் கருத்தில் கொண்டு தொடர்ந்து மாற்றத்தை புகுத்தி வருகிறேன்,” என்றார்.
கடந்த ஆண்டு 1.10 மில்லியன் டன் தேநீர் நுகர்வோரால் வாங்கப்பட்டதாகவும் 2020 மற்றும் 2025 ஆண்டுகளிடையே 4.2 சதவீத ஆண்டு வளர்ச்சி விகிதத்துடன் சந்தை வளர்ச்சி இருக்கலாம் என்றும் மதிப்பிடப்படுகிறது.
“போட்டியாளர்கள் இருப்பினும் நாங்கள் மாறுபட்ட தயாரிப்பை வழங்கி புதுமை படைக்கிறோம். அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் விரிவடைய திட்டமிட்டுள்ளோம்,” என்கிறார் மனீஷ்.
அடுத்த ஆறு முதல் ஒன்பது மாதங்களில் டீராஜா முதல் சுற்று நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.
ஆங்கில கட்டுரையாளர்: டெபோலினா பிஸ்வாஸ் | தமிழில்: ஸ்ரீவித்யா