மரத்தில் ஏறி தன் மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்!
தன் கிராமத்தில் உள்ள வேப்பமரத்தில் ஏறி தனது மாணவர்கள் தவறாமல் வகுப்பெடுக்கும் வரலாறு ஆசிரியர்.
கொரோனா தாக்கத்தால் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால், பள்ளி, கல்லூரிகள் பாதியிலேயே மூடப்பட்டன. பல வகுப்புகளுக்கு இறுதி தேர்வு நிறைவேறாமல் மாணவர்களை அடுத்த கிளாசுக்கு ப்ரமோட் செய்ய அரசு உத்தரவிட்டது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டுமே ஜூன் மாதம் தேர்வு வைத்தப்பின் ரிசல்ட் அறிவிக்கப்படும் என்று அரசு தெரிவித்தது.
மாணவர்களின் வழிகாட்டியான ஆசிரியர்கள், தனியார் பள்ளிகளால் ஆன்லைன் வகுப்புகள் எடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டனர். ஆனால் அரசுப் பள்ளி மாணவர்களின் நிலை கேளிவிக்குறியே.
கொல்கத்தாவில் இருந்து 200 கிமி தூரத்தில் ஒரு சிறிய கிராமத்தில் உயரமான வேப்பமரத்தின் மீது அமர்ந்து ஒரு ஆசிரியர், ஆதிகால நாகரீங்கள், மன்னர்களின் ஆட்சி, போர் வரலாறுகள் என பாடங்களை, சிவில் சர்வீசுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் தன் மாணவர்களுக்கு சொல்லித் தருகிறார்.
சரி அதற்கு ஏன் மரத்தின் மீது ஏற வேண்டும் என்று கேட்கிறீர்களா?
35 வயதான சுப்ரதா படி மேற்கு வங்க மாநிலத்தில் பன்குரா மாவட்டத்தில் உள்ள அஹண்டா என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் இருப்பதோ ஒரு சிறிய கிராமம். அங்கு அவரின் மொபைல் போனின் டேட்டா வந்து வந்து போய் கொண்டிருக்கும். சந்தீப் கொல்கத்தாவில் உள்ள இரண்டு சிவில் சர்வீஸ் பயிற்சி நிலையங்களில் பணிபுரிகிறார்.
லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் தன் சொந்த கிராமத்துக்கு திரும்பிய சந்தீபை, ஆன்லைன் வகுப்பெடுக்கச் சொல்லி இருந்தனர். ஆனால் இன்டெர்நெட் கனெக்ஷன் சரியாக இல்லாத அவரது கிராமத்தில் இருந்து ஆன்லைன் வகுப்பெடுக்க சிரமப்பட்டார்.
எப்படியாவது தன் மாணவர்களுக்கு வழக்கம் போல் பாடங்களைத் தொடர் நினைத்த சந்தீப், போனில் டேட்டா சிகனல் கிடைக்கும் இடத்தைத் தேடி அங்கும் இங்கும் கிராமத்தைச் சுற்றி வந்தார். அப்போது தான் அவருக்கு அந்த ஐடியா தோன்றியது.
வீட்டில் இருந்து சற்று தொலைவில் இருந்த அந்த உயரமான வேப்பமரத்தின் மீது ஏறி நெட் சிக்னல் எடுக்கிறதா எனப் பார்த்தார். அங்கு சிக்னல் நன்றாகக் கிடைக்கவே, உடனே தான் அதில் உள்ள கிளையில் உட்கார்ந்து பாடம் எடுக்கும் வகையில் மூங்கிலால் மரப்பலகை ஒன்றை ரெடி செய்தார். அதில் நன்கு அமர்ந்தபடி சிக்னல் தடையின்றி பாடம் எடுக்கத் தொடங்கினார் சந்தீப். இதுபற்றி பேசிய சந்தீப்,
“கொரோனா தொற்றால் என் குடும்பத்துடன் இருக்க நான் கொல்கத்தாவில் இருந்து அஹண்டாவிற்கு வந்துவிட்டேன். ஆனால் அதே சமயம் ஒரு ஆசிரியராக என் கடமையைச் செய்யாமல் என்னால் இருக்க முடியவில்லை. இங்கு நெட் சிக்னல் மோசமாக இருந்தது. அதைச் சரி செய்ய எல்லா வழிகளையும் தேடினேன்,” என்றார்.
தினமும் காலை தன் வீட்டைவிட்டு பாடம் எடுக்க கிளம்பும் சந்தீப், தன்னுடன் சாப்பாடு, தண்ணீர் எடுத்துச்சென்று மரத்துக்கு மேல் சென்றுவிடுவார். ஒரு சில நாட்கள் அவருக்கு தொடர்ந்து 2-3 வகுப்புகள் இருக்கும் என்பதால் தயாராகச் சென்று விடுகிறார்.
“கடும் வெயில் காரணமாக மரத்தின் மேல் கஷ்டமாக இருக்கும். சிறுநீர் கழிக்கச் செல்லமுடியாது. ஆனால் அதை அட்ஜஸ்ட் செய்து கொள்கிறேன். என்னால் என் மாணவர்களின் வகுப்பு தடைப்படக்கூடாது என்று நினைக்கிறேன்,” என்றார்.
என் வகுப்புகளுக்கு மாணவர்களின் அடென்டன்ஸ் ஃபுல்லாக இருக்கும். அவர்களும் எனக்கு நல்ல ஒத்துழைப்பு தருகிறார்கள். அவர்கள் நல்ல மதிப்பெண் எடுக்க ஆர்வமாக இருக்கிறார்கள்.
சந்தீபின் மாணவரின் ஒருவரான புத்ததேப் மைடி தன் ஆசிரியரைப் பற்றி பேசுகையில்,
“சந்தீப் சார் எங்களுக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். அவர் எங்களுக்காக எடுக்கும் முயற்சி அளப்பறியது. அவரின் வகுப்புகளில் நான் தவறாமல் கலந்து கொள்வேன். எங்கள் எல்லா கேள்விக்கும் அவர் பதில் அளிப்பார்,” என்றார்.
சந்தீப் பணிபுரிந்த பயிற்சி நிலைய தலைவர் சமீத் ரே பேசியபோது,
“எங்கள் ஆசிரியர் சந்தீபை நினைத்து பெருமையாக இருக்கிறது. அவர் தொடக்கத்தில் இருந்தே நேர்மையான ஊழியர். இந்த கடுமையான சூழலில் மாணவர்களுக்காக சந்தீப் எடுக்கும் முயற்சி பாராட்டுக்குரியது,” என்றார்.
தகவல் உதவி: ஹிந்துஸ்தான் டைம்ஸ்