[Tech30] மின் வாகனங்கள் ஆயுள் காலத்தை நீட்டிக்கும் Zeuva பேட்டரிகள்!
மின் வாகனங்களுக்கான செலவு குறைந்த பேட்டரிகளை தயாரிக்கும் Zeuva ஆட்டோமேட்டிவ் நிறுவனம், மின்வாகன பயன்பாட்டில் முக்கிய சிக்கலாக இருக்கும் பேட்டரி சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக யுவர்ஸ்டோரியின் டெக் 30 பட்டியலில் இடம்பெறுகிறது.
நிஷாந்த் ரஞ்சன் எப்போதுமே பெரிதாக ஒன்றை உருவாக்க விரும்பினார். 90 களில் போகாரோ ஸ்டீல் சிட்டியில் வளர்ந்து, பின் ஐஐடி கராக்பூரில் பயின்றவர் தொழில்முனைவில் ஆர்வம் கொண்டார்.
வர்த்தகம் தன் இரத்த்தில் கலந்திருப்பதாகக் கூறும் நிஷாந்த், டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்கால் ஊக்கம் பெற்றதாகவும் கூறுகிறார். ஆனால், தனக்கு ஆர்வம் இருந்த தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமொபைல் இரண்டையும் இணைத்து ஒரு திட்டத்தை வகுக்க அவருக்கு சிறிது காலம் தேவைப்பட்டது.
அழகு சாதன ஸ்டார்ட் அப் ஒன்றில் சி.டி.ஓவாக இருந்த பிறகு, அவர் 2016ல் Zeuva ஆட்டோமேட்டிவ் நிறுவனத்தை துவக்கினார். மின் வாகனங்களை பிரபலமாக்கும் நோக்கில் இந்த நிறுவனத்தை துவக்கினார்.
உலக அளவில் மின் வாகனங்கள் கவனத்தை ஈர்த்திருந்தாலும் இந்தியாவில், வரவேற்பு அதிகம் இல்லை. மின் வாகனங்களின் முக்கியப் பிரச்சனை பேட்டரி தான் என்பதை நிறுவனம் உணர்ந்தது.
“மூல உற்பத்தி நிறுவனங்களைப் பார்த்த போது, அவர்கள் பேட்டரியை தாங்களே உருவாக்குவதில்லை என புரிந்து கொண்டோம். வெளி நிறுவனங்களிடம் இருந்து அவற்றை பெற்று வந்தனர். இப்போது கூட இந்தியாவின் மின் வாகன நிறுவனங்கள் பேட்டரிகளை சொந்தமாக உருவாக்குவதில்லை. இதை எங்களுக்கான வாய்ப்பாக பார்த்தோம்,” என்கிறார் நிஷாந்த்.
பேட்டரி தயாரிப்பு
ஆரம்ப தடுமாற்றத்திற்கு பிறகு, 2018 முதல், Zeuva மின் வாகனங்களுக்கான லித்தியான் அயான் பேட்டரிகளை தயாரிக்கத்துவங்கியது.
மும்பையை மையமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஸ்டா ர்ட் அப், மனோஜ் பாட்டியா மற்றும் விவேக் தேவாங்கே ஆகியோரை இணை நிறுவனர்களாக இணைத்துக்கொண்டது.
“லித்தியம் பேட்டரிகளில் என்ன தேவை என கல்விச் சூழலில் இருப்பவர்கள் நினைப்பதற்கும், வர்த்தக நிறுவனங்கள் தேவைக்கும் பெரிய இடைவெளி இருக்கிறது. மின் வாகனங்களுக்கான சிக்கலான தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்தினோம்,” என்கிறார் நிஷாந்த்.
சர்தார் பட்டேல் டெக்னாலஜி பிஸ்னஸ் இன்குபேட்டர் ஆதரவு பெற்றுள்ள Zeuva நிறுவனம் 2021ல் சில மில்லியன் டாலர்கள் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.
குறைந்த செலவு பேட்டரி
Zeuva உருவாக்கியுள்ள குறைந்த செலவு பேட்டரிகள் மூலம், மின் வாகனங்கள், மின் ஸ்கூட்டர்கள் மற்றும் ரிக்ஷாக்களின் உற்பத்தி செலவை 5 மடங்கு குறைக்க முடிகிறது.
இந்த பேட்டரிகள், லேசாக, செலவு குறைந்தவையாக, சுற்றுச்சூழலுக்கு நட்பாக இருக்கின்றன.
“மின் வாகனம் தரும் மைலேஜ் பலன் அதன் பேட்டரியால் தீர்மானிக்கப் படுகிறது. எனவே, இந்த அம்சமே மின் வாகன பயன்பாட்டை தீர்மானிக்கும்,” என்கிறார் நிஷாந்த்.
தனது பேட்டரிகள் 50 சசவீதம் கூடுதல் ஆயுள் காலம் கொண்டிருப்பதாகவும், வேகமாக சார்ஜாகும் திறன் கொண்டிருப்பதாகவும் நிறுவனம் தெரிவிக்கிறது.
காப்புரிமைக்கு காத்திருக்கும் இந்தத் தயாரிப்பு முழுவதும் இந்தியாவிலேயே உருபாக்கப்பட்டுள்ளது. தெர்மல் நிர்வாகம், குறைந்த மின்சக்தி இயக்கம், புளுடூத், ஜிபிஎஸ் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டுள்ளது.
“மின் வாகனத்தின் செலவில் பாதி பேட்டரியாக அமைகிறது. பொதுவாக, ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்த தொழில்நுட்பத்தை அமெரிக்கா அல்லது ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்வார்கள். ஆனால், அந்த நாடுகளில் முக்கிய வாகனமாக இருப்பது கார். இந்தியாவில் முக்கிய வாகனம் இரு சக்கர வாகனமாகும். இவற்றுக்கு வயர், மின்னணு அமைப்பு ஆகியவற்றில் புதுமையாக்கம் தேவை,” என மேலும் விளக்குகிறார் நிஷாந்த்.
வர்த்தக மாதிரி
பேட்டரி விற்பனை தான், நிறுவனத்தின் பிராதான வர்த்தக மாதிரி என்றாலும், பி2பி வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேக பேட்டரி சேவையையும் வழங்க உள்ளது. இது தொடர்பான முன்னோட்ட முயற்சி நடைபெற்று வருகிறது.
முன்னிலை மூல தயாரிப்பு நிறுவனங்கள், இ-காமர்ஸ் நிறுவனங்கள், உணவு நுட்ப நிறுவனங்கள், லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களை இதற்காக தொடர்பு கொண்டு வருகிறது.
2021ல் நிதி திரட்ட வாய்ப்புள்ள நிலையில், Zeuva உற்பத்தி ஆலையை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் தனது குழுவையும் வலுவாக்க உள்ளது.
"ஆட்டோமேட்டிவ் துறையில் தூய தொழில்நுட்பத்தைப் பின்பற்றச் செய்வதில் முன்னிலையில் இருக்க விரும்புகிறோம். மேம்பட்ட பேட்டரி தொழில்நுட்பத்தை ஏற்கச்செய்வதற்கான பிரச்சனைகளைத் தீர்க்க முயல்கிறோம்,” என்கிறார்.
இருப்பினும் சவால்கள் இருக்கின்றன. இந்திய மக்கள், மின் வாகனங்கள் வழக்கமான வாகனங்களை விட விலை அதிகம் என்பதால் அதற்கு செலவு செய்ய விரும்பவில்லை.
இரண்டாவதாக, சார்ஜ் செய்யும் வசதி போதுமானதாக இல்லை என்கிறார் நிஷாந்த். இந்த தடைகளை மீறி, நிட்டி ஆயோக்கின் மின்வாகன மிஷன் 2030 இந்த துறையில் ஸ்டார்ட் அப்களுக்கு ஊக்கம் அளிக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும் நிறுவனமாக Zeuva திகழ்கிறது.
ஆன்கிலத்தில்: சோஹினி மிட்டர் | தமிழில்: சைபர்சிம்மன்