[TechSparks2021] 'இந்தியாவின் ஸ்டார்ட் அப் சூழல் இன்னமும் இளம் பருவத்திலேயே இருக்கிறது' – பியுஷ் கோயல்!
டெக்ஸ்பார்க்ஸ் 2021 நிகழ்வின் முதல் நாள் நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் ஸ்டார்ட் அப் சூழல் இன்னமும் இளம் பருவத்திலேயே இருப்பதாகவும், ஸ்டார்ட் அப்கள் பன்மடங்கு வளர்ச்சியடைவதற்குத் தேவையான சூழலை அமைத்துக் கொடுப்பதில் அரசு அக்கறை செலுத்தும் என்றும் குறிப்பிட்டார்.
இந்தியா உலகின் மூன்றாவது மிகப்பெரிய ஸ்டார்ட் அப் சுற்றுசூழலைக் கொண்ட நாடு. இங்கு DPIIT அங்கீகரிக்கப்பட்ட 57,000 ஸ்டார்ட் அப்கள் உள்ளன. இன்று 66 ஸ்டார்ட் அப்கள் யூனிகார்ன் அந்தஸ்தைப் பெற்றுள்ளன.
இதில் 90 சதவீத நிறுவனங்கள் 2015ம் ஆண்டிற்குப் பிறகே 1 பில்லியன் டாலர் மதிப்பை எட்டியுள்ளன. 2021ம் ஆண்டில் மட்டும் 33 நிறுவனங்கள் யூனிகார்ன் அந்தஸ்தைப் பெற்றுள்ளன. இவை ஸ்டார்ட் அப் சூழலின் வளர்ச்சியை சுட்டிக்காட்டுகின்றன.
ஆனால், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர், நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் பியுஷ் கோயல் மாறுபட்ட கருத்தை முன்வைக்கிறார்.
யுவர்ஸ்டோரி வழங்கும் முக்கிய நிகழ்வான 'டெக்ஸ்பார்க்ஸ்’ இந்தியாவின் மிகப்பெரிய, உந்துதலளிக்கக்கூடிய, அதிகம் எதிர்பார்க்கப்படும் மாநாடாக விளங்குகிறது.
'TechSparks 2021' நிகழ்வின் இன்றைய தொடக்க விழாவில் பேசிய பியுஷ் கோயல் இந்தியாவின் ஸ்டார்ட் அப் சூழல் இன்னமும் முதிர்ச்சியடையாத இளம் பருவத்தில் இருப்பதாகவே தெரிவித்துள்ளார்.
”இந்தியாவில் இன்று கிட்டத்தட்ட 70 யூனிகார்ன் நிறுவனங்கள் உள்ளன. இதில் 90 சதவீத நிறுவனங்கள் 2015ம் ஆண்டிற்குப் பிறகே யூனிகார்ன் அந்தஸ்தைப் பெற்றிருக்கின்றன. நமது ஸ்டார்ட் அப் சூழல் இன்னமும் இளம் பருவத்தில் இருப்பதாகவே தோன்றுகிறது. நம்மைப் பெருமைப்படுத்தும் வகையில் வளர்ச்சியடைவதற்கான சாத்தியக்கூறுகம் அதிகம் உள்ளன,” என்று யுவர்ஸ்டோரியின் டெக்ஸ்பார்க்ஸ் நிகழ்வின் 12-வது பதிப்பின் தொடக்க உரையில் பியுஷ் கோயல் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடந்த ஆறு மாதங்களில் இந்தியாவில் 22-க்கும் அதிகமான யூனிகார்ன் நிறுவனங்கள் உருவாகியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதாவது சராசரியாக ஒரு மாதத்தில் 3 யூனிகார்ன் நிறுவனங்கள் உருவாகியுள்ளன. இது கற்பனைக்கும் எட்டாதது.
அடுத்த தலைமுறை தொழிமுனைவோர் மற்றும் புதுமை படைப்போர்கள் ஊக்கம்பெறுவதில் ’டெக்ஸ்பார்க்ஸ்’ போன்ற நிகழ்வு பெரும் பங்கு வகிப்பதாக மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் பாராட்டினார்.
ஊக்கமளிக்கக்கூடிய வகையில் செயல்படும் இத்தகைய நூற்றுக்கணக்கான தொழில்முனைவோர்களின் வெற்றிக் கதைகளை வெளிப்படுத்தி, அதுதொடர்பான உரையாடலை ஒருங்கிணைத்து வருவதில் யுவர்ஸ்டோரி நிறுவனர் ஷ்ரத்தா ஷர்மா மற்றும் அவரது குழுவினரின் பங்களிப்பை பியுஷ் கோயல் பாராட்டினார்.
தொழில்முனைவுக் கனவு
இந்திய ஸ்டார்ட் அப் சூழலின் முன்னேற்றப் போக்கும் முதலீட்டாளர்களின் ஆர்வமும் தொழில்முனைவு முயற்சி தொடர்பான இந்தியாவின் நீண்ட கால நோக்கத்தை உணர்த்துகிறது.
“பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டலின்கீழ் ஸ்டார்ட் அப்களின் வளர்ச்சிக்கும் சிறந்த எதிர்காலத்திற்கும் உகந்த சூழலை இந்தியா உருவாக்கிக்கொடுக்கும்,” என்றார்.
இந்தியாவின் வளத்தை ஸ்டார்ட் அப்கள் மேம்படுத்தியுள்ளதாகவும் அதற்குத் தேவையான ஆதரவை அரசு வழங்குவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையில் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசின் கொள்கைகளும் ஸ்டார்ட் அப்களுக்கு சாதகமாகவே இருப்பதாகவும் பியுஷ் கோயல் சுட்டிக்காட்டினார். மக்களின் மனநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றமும் தொழில்முனைவு சூழலின் வளர்ச்சிக்குக் காரணம் என்றும் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவின் இளம் தலைமுறையினர் அவர்களுக்குக் கிடைக்கும் வேலை வாய்ப்புகளில் திருப்தியடைவதில்லை. தங்களது புதுமையான சிந்தனைகளையும் திறனையும் கொண்டு தங்களுக்கான அடையாளத்தை உருவாக்கிக்கொள்ள விரும்புகின்றனர். புதுமை படைப்பதில் ஆர்வம் காட்டும் போக்கு இவர்கள் அனைவரிடமும் பொதுவாகக் காணப்படும் அம்சமாகும்.
வளர்ச்சி
இந்தியாவில் நிதி தொழில்நுட்பம், கல்வி தொழில்நுட்பம், விவசாயத் தொழில்நுட்பம் என வெவ்வேறு துறைகளில் ஸ்டார்ட் அப்கள் துடிப்புடன் செயல்பட்டு வருகின்றன. இந்த ஸ்டார்ட் அப்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மூலை முடுக்குகளையும் சென்றடைந்து சரியான தீர்வை வழங்கி வருகின்றன.
இந்த முயற்சியின் பலனாக வளர்ச்சியும் மனிதகுலத்தின் செழிப்பும் சாத்தியமாகியுள்ளது என்பதை பியுஷ் கோயல் ஆழமாகப் பதிவு செய்தார்.
“பயோடெக், ஐடி துறை இரண்டும் ஒன்றிணைந்து ஹெல்த்கேர் பிரிவை மேம்படுத்தி வருகின்றன. தகவல் தொடர்பு, ரோபோடிக்ஸ், எரிபொருள் தொழில்நுட்பம் ஆகியவை ஒன்றிணைந்து விண்வெளி ஆய்வை மேம்படுத்தி வருகின்றன,” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவிற்காக, இந்தியர்களால் உருவாக்கப்பட்டுள்ள ஸ்டார்ட் அப் சூழலானது வருங்கால வளர்ச்சியை மட்டும் கருத்தில் கொள்ளாமல், பொருளாதார மீட்சியிலும் கவனம் செலுத்துகிறது.
சமூகத்தின் அனைத்து நிலைகளும் வளர்ச்சியடைவதை உறுதிசெய்து மனிதர்களின் வாழ்க்கையில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தினால் மட்டுமே இந்திய ஸ்டார்ட் அப் சூழல் அதன் உண்மையான நோக்கத்தை எட்டியதாகக் கருதப்படும் என்கிறார் பியுஷ் கோயல்.
ஆங்கில கட்டுரையாளர்: சன்ஹதி பேனர்ஜி | தமிழில்: ஸ்ரீவித்யா