‘ஸ்டார்ட்-அப் சூழலில் பெண்களின் பங்களிப்பு அதிகம் இருக்க வேண்டும்,’ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!
ஸ்டார்ட் அப் சூழலில் பாலின சமத்துவமின்மை பிரச்சனைக்கு ஒரு நாடு தீர்வு கண்டிருக்கிறது என்றால் அது இந்தியாதான் என்று டெக்ஸ்பார்க்ஸ் நிகழ்வில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
”பெண்களின் பங்களிப்பு அதிகம் இருக்கவேண்டும்,” என்று இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டார்ட் அப் தொழில்நுட்ப மாநாடான யுவர்ஸ்டோர்யின் டெக்ஸ்பார்க்ஸ் நிகழ்வில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார். இந்நிகழ்வில் யுவர்ஸ்டோரி நிறுவனர் மற்றும் சிஇஓ ஷ்ரத்தா ஷர்மாவுடன் உரையாடியபோது மத்திய நிதியமைச்சர் இவ்வாறு சுட்டிக்காட்டினார்.
பாலின சமத்துவமின்மை என்பது உலகம் முழுவதும் பரவலாகக் காணப்படும் பிரச்சனை. ஸ்டார்ட் அப் சூழலில் பாலின சமத்துவமின்மை பிரச்சனைக்கு ஒரு நாடு தீர்வு கண்டிருக்கிறது என்றால் அது இந்தியாதான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் படித்த அமெரிக்க கருவூல செயலாளர் ஜேனட் யெலன் புத்தகம் ஒன்றை சுட்டிக்காட்டி அவர் கூறும்போது,
“பல்கலைக்கழகம், அரசாங்கம் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஏராளமானோரின் கருத்துகளின்படி, பெண்களுக்கு உரிய இடம் கிடைப்பதில்லை என்பதைத் தெரிந்துகொண்டேன்,” என்றார்.
அவர் தொடர்ந்து கூறும்போது,
“இருப்பினும் இது இந்தியாவில் மட்டுமே காணப்படும் போக்கு என்று நம்பிக்கையிழக்கவேண்டிய அவசியமில்லை. இது உலகளாவிய விஷயம். இந்தியர்களான நாம், பல்வேறு கற்பிதங்களைத் தகர்த்து பல விஷயங்களில் முன்னுதாரணமாகத் திகழ்கிறோம். இதிலும் நம்மால் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கமுடியும்,” என்றார்.
இங்கு எந்தவகையான நிறுவனங்கள் உருவாக வேண்டும் என நினைக்கிறீர்கள் என்னும் கேள்விக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன்,
“டெக்னாலஜி நிறுவனங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. ஆனால் இந்த பெரிய அரங்கில் பெண்களின் பங்கு மிகக்குறைவாக இருக்கிறது. பெண்களின் பங்களிப்பு அதிகமாக இருந்தால் மகிழ்ச்சி அடைவேன். இது இந்திய பிரச்சனை மட்டுமல்ல, இது சர்வதேச பிரச்சனை. இருந்தாலும் டெக்னாலஜியில் பெண்களின் பங்களிப்பு உயர்ந்தால் மகிழ்ச்சி அடைவேன்,” என்றார்.
டெக்ஸ்பார்க்ஸ் நிகழ்வில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பது இது இரண்டாவது முறை. 2020-ம் ஆண்டு டெக்ஸ்பார்க்ஸ் நிகழ்வில் உரையாற்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அரசாங்கத்திற்கும் நாட்டு மக்களுக்கும் இடையே வெளிப்படையான உரையாடல் அவசியப்படுவதை வலியுறுத்தியிருந்தார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022ம் ஆண்டு பட்ஜெட்டின்போது, ’பெண் சக்தியே நம் சிறந்த எதிர்காலத்தின் முன்னோடி’ என்று குறிப்பிட்டிருந்தார்.