பெண்களுக்கு வாகனம் ஓட்ட கற்றுத்தந்து வருமானத்திற்கு வழி செய்யும் ஐதராபாத் பெண்!
பெண்கள் வாகனம் ஓட்ட கற்றுக்கொண்டு, போக்குவரத்து சேவை சார்ந்த பணிகளை பெற 2019 ல் ஜெய் பாரதி, மோவோ சோஷியல் இனிஷியேட்டிவ்ஸ் நிறுவனத்தை துவக்கினார். 2022 ல், டெலிவரி சேவைகள் உள்ளிட்டவற்றுக்கான தொழில்நுட்ப பயிற்சி பெற்ற பெண் டிரைவர்களை கொண்ட மோவோ ப்ளீட் நிறுவனத்தை துவக்கி நடத்தி வருகிறார்.
2019ல், இந்தியா, வங்கதேசம், மியான்மர், தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ், வியட்னாம் ஆகிய நாடுகள் வழியே மீகாங்கிற்கு 17,000 கிமீ பயணத்தை மேற்கொண்ட நான்கு துடிப்பான பெண்கள் குழுவில் ஜெய் பாரதி இடம்பெற்ற போது, போக்குவரத்து சார்ந்த சேவை (மொபிலிட்டி) எப்படி பெண்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் எனக் கண்டறிந்தார்.
தெலுங்கானா சுற்றுலாவை பிரபலப்படுத்துவதற்கான இந்த பயணம் தாய்லாந்தை அடைந்த போது, 40 மற்றும் 50 வயது பெண்கள், பைக் டாக்சி டிரைவர்களாக தங்கள் வாகனத்துடன் சாலையில் காத்திருந்ததை பார்த்தார். இதைப்பார்த்து அவருக்கு வியப்பும், அதிசயமும் உண்டானது.
”தாய்லாந்து வடக்குப் பகுதியில், பயண அல்லது உணவு டெலிவரி சேவை வழங்கிய இந்தப் பெண்களை பார்த்ததும் எனக்கு அதிர்ச்சி உண்டானது. உலகம் முழுவதும் என் பயணத்தில் பல பெண்கள் பார்த்துள்ளேன். ஆனால், இந்த சம்பவம் என மனதை ஆக்கிரமித்தது,” என்று ஹெர்ஸ்டோரியிடம் பாரதி கூறுகிறார்.
அந்த தருணம் தான் அவருக்கு அந்த புரிதல் உண்டானது.
“இந்தியாவில் ஏன் அதிக பெண் டிரைவர்கள் இருக்கக் கூடாது? இந்த வயதில் வேலைவாய்ப்புகளை எதிர்நோக்கும் பெண்கள் மத்தியில், ஆனால் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல பைக் அல்லது ஸ்கூட்டரை ஓட்ட முடியாதவர்களுக்காக ஒரு தீர்வு தேவை,” என்று யோசித்தார்.
இதன் காரணமாக, ’மூவிங் வுமன்’ சோஷியல் இனிஷியேட்டிவ்ஸ் எனும் (MOWO), லாப நோக்கில்லாத அமைப்பை ஏற்படுத்தினார். போக்குவரத்து மூலம் பெண்களுக்கு அதிகாரமளித்தல், வேலைவாய்ப்பை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டிருந்தது.
போக்குவரத்து சார்ந்த பணியாளர்களில் அதிக பெண்களைக் கொண்டு வர விரும்பும் லாப நோக்கம் கொண்ட ஸ்டார்ட் அப் நிறுவனத்திற்காகவும் MOWO வாகனங்களை அவர் உருவாக்கி வருகிறார்.
தொழில்முறை கட்டிடக்கலை வல்லுனரும், பைக் ஓட்டுதலில் ஆர்வம் உள்ளவருமான ஜெய் பாரதி, கல்லூரியின் பிக்கனேரி ஐதராபாத்தின் ஒரு பகுதியாக கேளிக்கைக்காக பைக் ஓட்டத்துவங்கினார். கடந்த பத்தாண்டுகளில் தெற்காசியா மற்றும் அமெரிக்காவில் ஒரு லட்சம் கிமீ பயணித்துள்ளார்.
மீகாங் பயணத்தின் போது, இந்தியாவை விட சாலைகளில் அதிக பெண்கள் கண்டார். தாய்லாந்து, வியட்னாம், கம்போடியா ஆகிய நாடுகளில் இது இயல்பாக இருந்தது. ஆனால் இந்திய சாலைகளில் பாலின சமத்துவமின்மை வெளிப்படையாகத் தெரிகிறது. பாதுகாப்பு பிரச்சனைகளும் உள்ளன.
“இந்த பயணத்தின் போது, சாலைகள் அல்லது வாகனம் ஓட்டுவதை பாலின பாகுபாடில்லாமல் செய்ய என்ன செய்ய வேண்டும் என யோசித்துக் கொண்டிருந்தேன். இந்த எண்ணத்துடன் பெண்களுக்கு வாகனம் ஓட்ட கற்றுத்தருவதன் மூலம் என்ன சமூக தாக்கத்தை உண்டாக்க முடியும் என என் வலைப்பின்னல் தொடர்புகளை பயன்படுத்தினேன்,” என்கிறார்.
பாலின சமத்துவம்
2019ல் ஜெய் பாரதி, 2030 வாக்கில் பத்து லட்சம் பெண்களுக்கு மொபிலிட்டி வாய்ப்பை அளிக்கும் நோக்கத்துடன் மோவோ சோஷியல் இனிஷியேட்டிவ்ஸ் அமைப்பை துவக்கினார்.
பெண்களிடம், குறிப்பாக அடிப்படை ஸ்கூட்டர் கூட அணுக முடியாத குறைந்த வருமானம் கொண்ட பெண்கள் பிரிவில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது சரியான துவக்கமாக இருக்கும் என நினைத்தார். மொபிலிட்டி இந்த பெண்களுக்கு பலவிதமான வாய்ப்புகளை உருவாக்கும் என நினைத்தார்.
“பெண்கள் மொபிலிடிக்கான அணுகலை பெறுவது அவசியம் எனும் விழிப்புணர்வை துவக்கினோம். மேலும், அவர்கள் வாழ்க்கையில் உள்ள படித்த ஆண்களும், குழந்தைகளும் பெண்கள் வாகனம் ஓட்டுவதை ஊக்குவிக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்த துவங்கினோம்,” என்கிறார்.
வாகனம் ஓட்டுவது ஒரு திறனாக விளங்கும் போது, ஒரு பெண் தான் நினைத்ததை செய்ய முடியும். தனது வர்த்தகத்தை கவனிக்க முடியும், குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச்செல்ல முடியும், வாழ்வாதாரத்திற்காகவும் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த திறனை அளிப்பது தான் முக்கியம்.
2021ல் நடத்தப்பட்ட இந்தியாவில் 20 நகரங்களில் நிகழ்ந்த முவீங் பவுண்டரிஸ் பயண நிகழ்வில், விழிப்புணர்வு உச்சம் தொட்டது, பெண்கள் தொடர்பு கொள்வதற்கான வாட்ஸ் அப் எண்ணை உருவாக்கி, அவர்கள் எண்ணங்களை அறிந்து கொள்வதற்காக நேரில் சந்தித்து, சூழலில் உள்ள பெண்களை ஆதரிக்க விரும்பும் அரசு அல்லது இதர அமைப்புகளுடன் தொடர்பு கொண்டார்.
“பெரும்பாலான பெண்கள் கற்றுக்கொள்ளத் தயாராக இருந்தனர். ஆனால், கற்றுத்தர யாரும் இல்லை என்பது தான் பெரிய பிரச்சனை. அப்படியே அவர்கள் கற்றுக்கொண்டாலும், வாகனம் ஓட்டுதல் தொடர்பான கொள்கைகள் பொதுவாக பணியிடத்தில் உள்ள ஆண்களுக்கு ஏற்பவே அமைந்துள்ளது,” என்கிறார்.
மேலும், பெரும்பாலான இ-காமர்ஸ் அல்லது மொபிலிட்டி சேவைகள் பெண்கள் திறன் மிக்கவர்களாக, முறையான ஆவணங்கள் பெற்றிருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறது. இதை மனதில் கொண்டு மோவோ சோஷியல் ஒரு வாட்ஸ் அப் குழுவை உருவாக்கிறது. இதில் டிரைவராக விரும்பும் 2000 பெண்கள் இணைந்தனர்.
டிரைவர் இருக்கையில்
இதன் விளைவாக இந்த அமைப்பு ஐதராபாத்தில் ஓட்டுனர் பயிற்சி அளிக்கத்துவங்கியது. இதுவரை ஐதராபாத்தில் இந்த அமைப்பு 2,500 பெண்களுக்கு இரு சக்கர வாகனங்கள் ஓட்ட மற்றும் 200 பெண்களுக்கு ஆட்டோ ஓட்ட கற்றுத்தந்துள்ளது. இதனிடையே, கார் ஓட்டும் பயிற்சியையும் துவக்கியுள்ளது.
தெலுங்கானா மாநில அரசின், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையின் வாகன ஓட்டுதல் பயிற்சி மையத்தை இந்த அமைப்பு பயன்படுத்திக்கொண்டது. பெண்களுக்கு என்று உருவாக்கப்பட்ட முதல் வாகனம் ஓட்டுதல் பயிற்சி மையம் இது.
“பெண்களுக்கு பாதுகாப்பான, மூடப்பட்ட சூழல் தேவைப்படுவதால் இந்த இடத்தை பெண்கள் வசதியாக உணர்கின்றனர்” என்கிறார்.
இந்த மையம் அரசுத் துறையில் அமைந்துள்ளதால் மற்ற திறன்கள் கற்றுக்கொள்ள வரும் பெண்களும் இதில் இணைந்து பயிற்சி பெறுகின்றனர். இந்த பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. எனினும், மோவோ அவர்கள் ஓட்டுனர் உரிமம் பெற சொந்தமாக விண்ணப்பிக்க வேண்டும், என வலியுறுத்துகிறது.
கிராமப்புற பகுதிகளிலும் பயிற்சி முகாம்களை நடத்துகிறது. ஐதராபாத் பிட்ஸ் பிலானி வளாகத்தில் 150 பெண் ஊழியர்களுக்காக முகாம் நடத்தியது. தில்லியில், ஜிஎம்.ஆர் பவுண்டேஷன் மற்றும் இடிஓ மோட்டார்சுடன் இணைந்து பயிற்சி முகாம் நடத்தியது.
இதில் மின் வாகனங்கள் ஓட்டும் பயிற்சி அளிக்கப்பட்டது. மற்ற மாநில அரசுகளுடன் இணைந்து, அரசு கட்டிடங்களில் மையம் அமைக்க முயன்று வருகிறது. இது பெண்கள் எளிதாக பயிற்சி பெற வழிவகுக்கும்.
“விழிப்புணர்வு மற்றும் வாகனம் ஓட்டும் பயிற்சிக்கு பிறகு, இந்தத் திறன் கொண்டு பெண்கள் வருமானம் ஈட்ட வேண்டும் என எதிர்பார்க்கிறோம். பலர் இதற்காக முயற்சித்து, பல்வேறு சேவைகளில் இணைந்தாலும், ஒரு சில மாதங்களில் வேலையை விட்டுவிடுகின்றனர்,” என்கிறார் பாரதி.
இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. மிகச்சில பெண் டிரைவர்களே இருப்பதால், சுற்றி இருக்கும் ஆண்களை கண்டு மிரள்கின்றனர். மேலு,ம் பெண்களுக்கான கழிவறை இல்லாததும் பிரச்சனை. இது போன்ற பிரச்சனைகள் அவர்கள் வேலையில் தொடர்வதை பாதிக்கின்றன.
வேலைவாய்ப்பு
இதன் விளைவாக, 2022ல் MOWO Fleet நிறுவனத்தை துவக்கினார். லாபநோக்கிலான இந்த ஸ்டார்ட் அப், வாகனம் ஓட்டுதல் துறையில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பெண் ஓட்டுனர்களுக்கான சந்தை இருந்தாலும், பெண்களுக்கு நல்ல கழிவறை வசதி, மற்றும் இந்த இடங்களில் ஒரு பெண் ஊழியரேனும் கொண்டுள்ள சேவை நிறுவனங்களை மோவோ கண்டறிய விரும்புகிறது.
ஓட்டுனர் பயிற்சி அளித்து, தேவையான ஆவணங்கள் பெற உதவிய பிறகு இந்த ஸ்டார்ட் அப் 50 பெண்கள் புளூ டார்ட்டில் பணி பெற உதவியுள்ளது, உபெர் நிறுவனத்துடன் முன்னோடி திட்டத்தையும் செயல்படுத்து வருகிறது. இந்த வாகனங்கள் அனைத்தும் மின் வாகனங்களாகும். செயலி மூலம் பெண்களின் நேரத்தை தெரிந்து கொண்டு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
ஐதராபாத்தைச்சேர்ந்த கல்பனா, இரண்டு வேலைகளை முயன்ற பிறகு நண்பர் மூலம் மோவோ ஃப்ளீட் நிறுவனத்தை தெரிந்து கொண்டார்.
“பயிற்சிக்குப் பின், கடந்த 6 மாதங்களாக நிறுவனத்திற்காக பணியாற்றுகிறேன். மிகவும் மகிழ்ச்சியாகவும், மதிப்பாகவும் உணர்கிறேன். என் வருமானம் குடும்ப வாழ்க்கைக்கு உதவுகிறது,” என்கிறார். இதுவே பெண்கள் நிறுவனத்தை நாடிவர காரணம் என்கிறார் பாரதி.
“இந்த பெண்களில் பெரும்பாலானோர் முதல் முறை வேலைவாய்ப்பு பெறுபவர்கள். குறைந்த வேலை நேரத்தில் மாதம் ரூ.15000 முதல் 17000 வரை சம்பாதிக்கின்றனர். வருமானமும் சீராக இருக்கிறது. பலரும் மின் வாகனங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். எரிபொருளில் மிச்சமாகும் தொகையை தவணையாக செலுத்தலாம் என்கிறார்.
மோவோ சோசியல் இனிஷியேட்டிவ்ஸ் பல்வேறு நிறுவனங்களின் மானிய உதவியுடன் நடைபெறுகிறது. மோவோ சோஷியல் இனிஷியேட்டிவ்ஸ், வில்குரோவிடம் இருந்து, கடன் நிதி, ட்வாரன் திட்டம் மற்றும் நீடித்த போக்குவரத்து போட்டியில் வெற்றி என மூன்று வகைகளில் நிதி பெற்றுள்ளது. விதை நிதி திரட்டவும் திட்டமிட்டுள்ளது.
Villgro-வின் சிஒஒ ஜெனான் லிலானி பார்கவா,
"பாலின நோக்கில் ஸ்மார்ட்டாக செயல்படும் விதத்தை கண்டறிந்ததற்கான உதாரணமாக மோவோ விளங்குகிறது. எங்கள் ‘Tvaran, திட்டம் மூலம் மோவோவுடன் வளர்ச்சி நோக்கில் செயல்பட்டு வருகிறோம். அவர்கள் மேடைக்கான தொழில்நுட்பத்தை உருவாக்குவது, பெண் டிரைவர்களை அதிக அளவில் இடம்பெற வைக்க உதவுவது ஆகியவை இதில் அடங்கும்,” என்கிறார்.
நிறுவனம் மோவோ சோஷியல் இனிஷியேட்டிவ்சிற்காக 15 பேர் குழுவை கொண்டுள்ளது. மோவோ ப்ளீட் இயக்குனர் குழுவிலும் 9 பேரை கொண்டுள்ளது.
“சந்தா சார்ந்த போக்குவரத்தை சேவையை துவக்க உள்ளோம், ஐதராபாத்தில் பள்ளி நேரங்களுக்கு பிறகு, விருப்ப வகுப்புகளுக்கான பிக் அப் அண்ட் டிராப் அப் சேவையை வழங்கத் திட்டமிட்டுள்ளோம்,” என்கிறார்.
ஆங்கிலத்தில்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில்: சைபர் சிம்மன்
பெண்களுக்கான 'ஸ்டார்ட் அப் திட்டங்கள்’ மத்திய அரசு செய்துள்ளது என்னென்ன?
Edited by Induja Raghunathan