1400 ஏக்கர்; ரூ.1.800 கோடி: திருப்பதிக்கு நிகராக தெலங்கானாவில் உருவாகும் கோவிலில் என்ன ஸ்பெஷல்?
திருப்பதிக்கு இணையாக பிரமாண்டமாக உருவாகும் யாதகிரிகுட்டா கோவில்!
இந்தியாவின் பணக்கார கோவிலான திருப்பதி கோவிலுக்கு நிகராக ஒரு அற்புதமான கோவிலை கட்ட வேண்டும் என்ற தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் கனவு விரைவில் நிறைவேற்றப்போகிறது.
தனி தெலங்கானா உதயமானது அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் இந்தியாவின் பணக்கார கோவிலான திருப்பதி கோவிலுக்கு நிகராக ஹைதராபாத்திலிருந்து 70 கி.மீ தூரத்தில் உள்ள யாதகிரிகுட்டாவின் அழகிய மலைகளில் உள்ள பகவான் லட்சுமி நரசிம்ம சுவாமியின் பழங்கால குகைக் கோவிலை மாற்றத் தீர்மானித்து அறிவித்தார்.
2016ல் யாதகிரிகுட்டா மேம்பாட்டு ஆணையம் ஒன்றை அமைத்து அதற்கு ரூ.1800 கோடி பட்ஜெட் ஒதுக்கீடு செய்து கோவிலை புனரமைக்கும் பணிகளை ஆரம்பித்தார். முன்னதாக இந்த குகைக் கோவிலானது சிறிய குன்று ஒன்றில் அமைந்திருந்தது. ஆனால், தற்போது இந்த குன்றை சுற்றியுள்ள பசுமையான காடுகள் நிறைந்த 8 மலைகள் உட்பட 1400 ஏக்கர் புதிதாக நிர்மானிக்கப்படவுள்ள திருப்பதி கோவிலுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு பிரமாண்ட முறையில் பணிகள் தொடங்கின.
1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த வைஷ்ணவ ஆலய ஆகம விதிகளின்படி புதிய கோவில் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமானத்துக்கு செங்கல், சிமெண்ட் போன்றவை இல்லாமல் அதற்கு பதிலாக தெலங்கானா பகுதியின் காகதீய கட்டிடக்கலையின்படி, க்ரிஷ்ணசீலா எனப்படும் கிரானைட் கற்களை மட்டுமே கொண்டு கட்டப்பட்டு வருகிறது.
இந்தக் கற்கள் கொண்டு கட்டுவதற்குக் காரணம், இன்னும் 1000 ஆண்டுகள் ஆனாலும் இயற்கை சீற்றங்கள் எது வந்தாலும், இந்த கட்டிடக்கலையால் கோவில் பாதுகாக்கப்படும். இதற்காக நூற்றுக்கணக்கான சிற்பிகள் மற்றும் கைவினைஞர்கள் கோவிலில் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது இந்தப் பணிகள் அனைத்தும் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளன.
14.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கோயில் வளாகத்தில் ஏழு கோயில்கள் உள்ளன, இதில் 100 அடி பிரதான குவிமாடம் உள்ளது.
"பிரதான கோயில் வளாகத்துடன் தொடர்புடைய அனைத்து பணிகளும் உள் மற்றும் வெளிப்புற பிரகாரங்கள் (கூட்டு சுவர்கள்), பல்வேறு வகையான கல் செதுக்கப்பட்ட தூண்கள், இணைக்கப்பட்ட கோயில்கள், பல்வேறு தெய்வங்கள் மற்றும் தெய்வங்களின் சிற்பங்கள் மற்றும் ஆல்வார்ஸ் (வைஷ்ணவ சாமியார்கள்) உள்ளிட்ட கட்டிடக்கலை பணிகள் நிறைவடைந்துள்ளன.”
சமீபத்தில் இந்தப் பணிகளை சந்திரசேகர ராவ் பார்வையிட்டபோது தான் அந்த கோவிலின் புகைப்படங்கள் வெளியாக அதன் பிரமாண்டம் வெகுவாக மக்களை ஈர்த்தது. தங்க கோபுரம், விமானம் என அனைத்தும் திருப்பதிக்கு இணையாக தயார் செய்யப்பட்டு வருகிறது.
இதே போல் திருப்பதியில் உள்ளது போல புஷ்கர்னி எனப்படும் பக்தர்கள் நீராடுவதற்கு குளம், பக்தர்கள் முடிகாணிக்கை வழங்கும் அரங்கம், பிரசாதங்கள் தயாரிக்கும் கூடம் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் மட்டும் இன்னும் பாக்கி இருக்கின்றன. இதுவும் இன்னும் சில தினங்களில் முடிந்துவிடும்.
இதையடுத்து, வரும் மே மாதத்தில் பிரமாண்ட முறையில் பகவான் லட்சுமி நரசிம்ம கோயிலின் திறப்பு விழா நடத்தப்படும். இதற்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
தொகுப்பு: மலையரசு