‘சூரரைப் போற்று’ - 16 அரசுப் பள்ளி மாணவர்களின் முதல் விமானப் பயணம்; திறமைக்கு பரிசளித்த தன்னார்வ அமைப்பு!
சென்னை அரசு பள்ளி மாணவர்கள் 16 பேரை, விமானத்தில் இலவசமாக திருவனந்தபுரம் அழைத்துச் சென்றுள்ளது ’தட்ஸ் மை சைல்ட்’ என்ற அரசு சாரா தன்னார்வளர் அமைப்பு. அரசு வழங்கும் உதவித் தொகை தேர்வில் வெற்றி பெற்றதற்காக இந்த ஏற்பாட்டை அந்த அமைப்பு செய்துள்ளது.
அவிமானம்... நம்மில் இன்னும் பலருக்கு வானத்தை வியந்து பார்க்க வைக்கும் ஒரு வார்த்தைதான் இது. நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களின் ஆசைப் பட்டியலில், பலருக்கு இன்னமும் எட்டாக்கனியாக இருப்பது, ‘விமானத்தில் ஒரு முறையாவது பறந்து பார்த்துவிட வேண்டும்’ எனும் ஆசைதான்.
அப்படிப்பட்ட கனவான விமான பயணத்தை, அரசுப் பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு நினைவாக்கி இருக்கிறது 'தட்ஸ் மை சைல்டு' (Thats my child) என்னும் அரசு சாரா தன்னார்வளர் அமைப்பு.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டைக்கு அருகில் உள்ள பழங்குளம் எனும் சிற்றூரை பூர்வீகமாகக் கொண்ட வானதி தான் இந்த ’தட்ஸ் மை சைல்டு’ அமைப்பின் நிறுவனர். தற்போது இந்த அமைப்பில் வானதி உட்பட ஐந்து முக்கிய உறுப்பினர்களோடு, சென்னை, கோவை, திருநெல்வேலி, தேவகோட்டை மற்றும் பொள்ளாச்சி ஆகிய இடங்களில் பல தன்னார்வல உறுப்பினர்களும் தங்களால் இயன்ற உதவியை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவியாக செய்து வருகின்றனர்.
ஏற்கனவே, இந்த அமைப்பைப் பற்றி நாம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே எழுதியிருக்கிறோம்.
முதல் முறை விமானப் பயணம்
தற்போது இந்த அமைப்பு, சென்னை பல்லாவரத்தில் இயங்கி வரும் மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 16 பேரை விமானத்தில் திருவனந்தபுரம் அழைத்துச் சென்று, அங்கு இஸ்ரோ அலுவலகத்தைச் சுற்றிக் காட்டி, பின் மீண்டும் விமானத்திலேயே சென்னை அழைத்து வந்துள்ளது.
“கடந்த எட்டு வருடங்களாக இந்த அமைப்பு இயங்கி வருகிறது. அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளியில் படிப்பை தொடர முடியாத, கல்வியில் முன்னேற முடியாத பள்ளி மற்றும் மாணவர்களை தேர்ந்தெடுத்து 7 விதமான திட்டங்கள் கீழ் வகைப்படுத்தி, அவர்கள் கல்வியைத் தொடர தேவையான உதவிகளைச் செய்து வருகிறோம். படித்தால் தங்கள் வாழ்க்கை மாறும் என்ற விழிப்புணர்வை அவர்கள் மத்தியில் ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம்,” என்கிறார் வானதி.
அதோடு, அரசு தரும் கல்வி சார்ந்த உதவித்தொகை பற்றிய போதிய விழிப்புணர்வும் மக்கள் மத்தியில் இல்லை. அதனை அவர்களிடம் கொண்டு சேர்க்கும் வேலையையும் நாங்கள் செய்து வருகிறோம். எங்கள் அமைப்பில் உள்ளவர்கள் பெரும்பாலும் ஐடி துறையைச் சேர்ந்தவர்கள்தான். எனவே, பண உதவிகளோடு, தங்களது ஓய்வுநாளில் பள்ளி மாணவர்களுக்கு இலவச வகுப்புகள் எடுக்கும் வேலையையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம், என்றார் வானதி.
சூரரைப் போற்று
அரசு உதவித்தொகையைப் பெறுவதற்கான தேர்வுகளில் வெற்றி பெற இந்த அமைப்பு மாணவர்களை ஊக்குவித்து வருகிறது. பல இடங்களில் குழந்தைகளின் வருமானத்தை நம்பியும் குடும்பங்கள் இருக்கின்றன என்பதால், எதிர்காலத்தில் அவர்கள் படித்து நல்ல நிலையை அடைவார்கள் என்ற நம்பிக்கையை மாணவர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் ஏற்படுத்தும் வகையில் தற்போது 'சூரரைப் போற்று' என்ற புதிய திட்டத்தையும் ’தட்ஸ் மை சைல்ட்’ அமைப்பு ஆரம்பித்துள்ளது.
“சூரரைப் போற்று திட்டத்தின் முதல்கட்டமாக பல்லாவரத்தில் இயங்கி வரும் மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 16 பேரை விமானத்தில் திருவனந்தபுரம் அழைத்துச் சென்று, அங்கு இஸ்ரோ அலுவலகத்தைச் சுற்றிக் காட்டி இருக்கிறோம். இந்த 16 மாணவர்களுமே முதன்முறையாக விமானத்தில் பயணிக்கிறார்கள். இது அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களது குடும்பத்திற்கும் ஆச்சர்யம் கலந்த இன்பமான தருணமாக அமைந்துள்ளது.”
இந்த 16 மாணவர்களும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை (NMMS - National Means cum Merit Scholarship) தேர்வில் கடந்த 3 ஆண்டுகளில் இந்தப் பள்ளியில் இருந்து தேர்ச்சி பெற்றவர்கள். இந்தப் பயணம் அவர்களது வெற்றிக்கு எங்கள் பரிசு. தங்களது படிப்பின் மூலம், திறமையின் மூலம் தங்களது வாழ்க்கைத்தரம் மாறும் என்பதை இப்போதே மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த விமானப் பயணத்தை ஏற்பாடு செய்துள்ளோம்.
இது நிச்சயம் தொடர்ந்து அவர்கள் நன்றாக படிக்க வேண்டும் என்ற ஊக்கத்தை அம்மாணவர்கள் மத்தியிலும், மற்ற மாணவர்கள் மத்தியில் உருவாக்கும் என நாங்கள் நம்புகிறோம், என நம்பிக்கையுடன் பேசுகிறார் வானதி.
வாய்ப்புகளை வரமாக்குங்கள்!
சென்னையில் நேற்று காலை விமானம் மூலம் திருவனந்தபுரம் செல்லும் மாணவர்கள், அங்கு மதிய உணவை முடித்துக் கொண்டு, இஸ்ரோ சென்று சுற்றிப் பார்த்தனர். பின்னர், மாலையில் கடற்கரை சென்று சிறுதுநேரம் விளையாடி விட்டு, இரவு மீண்டும் விமானம் மூலமாகவே சென்னை திரும்பியுள்ளனர்.
இதற்கான விமான கட்டணங்களை ’தட்ஸ் மை சைல்ட்’ அமைப்பின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான பிரணவ் முழுமையாக ஏற்றுள்ளார். இதுதவிர குழந்தைகளின் உணவு மற்றும் இதர செலவுகளுக்கு திருவனந்தபுரம் மற்றும் சென்னையில் உள்ள மற்ற உறுப்பினர்கள் பொறுப்பேற்று சிறப்பாக இந்த பயணத்தை இனிமையாக முடித்துத் தந்துள்ளனர்.
“இந்த 16 மாணவர்களில் அவர்கள் குடும்பத்திலேயே முதன்முறையாக 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்களும் உள்ளனர். இது இரக்கத்தினால் அவர்களுக்குக் கிடைத்த பயணமாக இருக்கக்கூடாது... அவர்களது உழைப்பிற்கு கிடைத்த பரிசாகத்தான் இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருந்தோம். கடவுள் வரம் தர மாட்டார், வாய்ப்புகளைத்தான் தருவார். அதனை நாம் சரியாக பயன்படுத்திக் கொண்டால், வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு வெற்றியாளர்களாகச் செல்ல இயலும். இதனை மாணவர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவே, இந்தப் பயணம்,” என்கிறார் வானதி.
தலைமையாசிரியரின் உதவி
’தட்ஸ் மை சைல்ட்’ அமைப்பின் இந்த வித்தியாசமான முயற்சிக்கு பக்கபலமாக இருந்துள்ளார் அப்பள்ளியின் தலைமையாசிரியர் ரவி. முன்னதாக இவர் திருவண்ணாமலை பள்ளியில் வேலை பார்த்தபோதே, இந்த அமைப்புடன் சேர்ந்து தங்கள் பள்ளி மாணவர்களுக்கு பல உதவிகள் சென்றடையச் செய்துள்ளார். தற்போது மாற்றலாகி பல்லாவரம் வந்துவிட்ட நிலையில், தொடர்ந்து இந்த அமைப்புடன் சேர்ந்து இந்தப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான கல்வி உதவிகளை செய்து வருகிறார்.
“இந்த விமானப் பயண திட்டம் குறித்து நாங்கள் கூறியதும், முதலில் அதிகம் சந்தோசப்பட்டது அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ரவி தான். பயணத்திற்கான ஏற்பாடுகளை நாங்கள் ஒருபுறம் பார்த்துக் கொண்டிருக்க, மாவட்ட கல்வி அலுவலரிடம் இதற்கான அனுமதி பெறுவது, சம்பந்தப்பட்ட குழந்தைகளின் பெற்றோரிடம் சம்மதக் கடிதம் வாங்குவது போன்ற வேலைகளை முழுக்க முழுக்க அவரே பார்த்துக் கொண்டார். இதனால் எங்களது வேலை சுலபமானது,” என்றார் வானதி.
முன்னாள் மாணவர்களின் நன்றிக்கடன்
இதுபோன்ற தன்னார்வலர்கள்தான் எங்கள் அமைப்பின் பெரிய பலம். தற்போது எங்களது அமைப்பில் பல ஊர்களில் இருந்தும் பலர் தன்னார்வலர்களாக சேர்ந்து சேவை செய்து வருகின்றனர். எங்கள் அமைப்பு மூலம் பயனடைந்து தற்போது பணியில் இருக்கும் முன்னாள் மாணவர்களும் இதில் அடக்கம். இன்னும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும்போது, பயனடையும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
”எங்கள் அமைப்பின் முக்கியக் குறிக்கோள் குழந்தைகள் நிச்சயம் பள்ளிப் படிப்பை முடிக்க வேண்டும் என்பது தான். நிதியை காரணம் காட்டி அல்லது குடும்ப சூழலால் எந்த குழந்தையும் படிப்பை நிறுத்திவிடக் கூடாது,” என ஒவ்வொரு வார்த்தையிலும் அக்கறை கலந்து பேசுகிறார் வானதி.
தங்களது இந்த விமானப் பயணம் குறித்து விஜயலட்சுமி என்ற 11ம் வகுப்பு மாணவி கூறுகையில்,
“நான் தமிழ் திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்றேன். அதற்காக எங்கள் தலைமை ஆசிரியர் மின்னும் நட்சத்திரம் என என்னை காலை பிரார்த்தனை கூட்டத்தில் வைத்து, மற்ற மாணவ, மாணவியர் முன்னிலையில் விருது வழங்கினார். அப்போதே எங்கள் வீட்டில் எல்லோரும் ரொம்பவே மகிழ்ச்சி அடைந்தனர்.
அதன்பிறகு, தட்ஸ் மை சைல்ட் வானதி மேடம் வந்து, இந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர்களை விமானத்தில் அழைத்துப் போக இருப்பதாகக் கூறினார். இதை நான் வீட்டில் கூறிய போது, முதலில் அவர்கள் நம்பவேயில்லை. பிறகு எங்கள் ஆசிரியை போன் செய்து கூறிய போதுதான் நம்பினார்கள்.
”நான் என் படிப்பில் கிடைத்த வெற்றி மூலம் இப்படி விமானத்தில் பறந்தது என் குடும்பத்தினருக்கு வார்த்தைகளில் சொல்ல முடியாத மகிழ்ச்சி. ஏனென்றால் எங்கள் குடும்பத்தில் 11ம் வகுப்பு படிக்கும் முதல் ஆள் நான் தான்,” என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
சூரரைப் போற்றுவோம்.. வானம் அவர்களுக்கு வசப்படட்டும்!
ஒரு வருட சேமிப்புப் பணத்தில் முதல் விமானப் பயணம் சென்ற 24 பெண் கூலித் தொழிலாளர்கள்!