திண்டுக்கல் பிரியாணியை ரூ.600 கோடி மதிப்பு சர்வதேச ப்ராண்ட் ஆக்கிய தலப்பாக்கட்டி நாகசாமி தனபாலன்!
1957ல் ஒரு சிறிய நகரத்தில் ஒரே ஒரு உணவகமாக தொடங்கப்பட்ட ‘திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி’ இன்று பல நாடுகளில் பரந்து விரிந்து நிலைநாட்டிய வெற்றிக்கதை.
திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி ஒரு சிறிய நகரத்தில் ஒரே ஒரு உணவகமாக 1957-ல் துவங்கப்பட்டது. இன்று 600 கோடி மதிப்புமிக்க ப்ராண்டாக 62 கிளைகளுடன் , நாள் ஒன்றுக்கு 4000 கிலோ பிரியாணியை உலகெங்கும் விற்பனை செய்து செயல்படுகிறது.
கடந்த ஆண்டு தனியார் ஈக்விட்டி நிறுவனமான, CX Partners இடம் இருந்து சங்கிலித்தொடர் ரெஸ்டாரண்ட் நிறுவனமான ’திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஹோட்டல்’ ரூ.260 கோடி முதலீடு பெற்றது. தலப்பாக்கட்டி திரட்டியுள்ள முதல் தனியார் ஈக்விட்டி நிதி இதுவாகும்.
இந்த நிதித் திரட்டலை தொடர்ந்து, திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஹோட்டல்ஸ், பொது பங்குகளை வெளியிட விரும்புவதாகவும், அடுத்த 3 ஆண்டுகளில் ஐபிஓவுக்கு விண்ணப்பிக்க இருப்பதாகவும், அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
நாகசாமி தனபாலனுக்கு 36 வயது. எட்டு வருடங்களுக்கு முன் யூகேவில் ஒரு அலுவலகத்தில் ரிசப்ஷனிஸ்டாக பணிபுரியத் துவங்கினார். இன்று 200+ கோடி வணிகத்தை நடத்தி வருகிறார். எதுவும் திட்டமிடப்பட்டு நடக்கவில்லை என்கிறார். வெளிநாட்டில் சிறப்பாக செயல்பட்டு வெற்றியாளராகவேண்டும் என்கிற கனவு இந்தியாவில் நிறைவேறியது.
நாகசாமியின் அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அவரை பராமரிப்பதற்காக 2009-ம் ஆண்டு நாகசாமி இந்தியா திரும்பவேண்டிய சூழல் ஏற்பட்டது. தற்போது திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி என்கிற பெயரில் செயல்பட்டு வரும் உணவகத்தை அவரது தாத்தா சிறிய அளவில் நடத்தி வந்தார். இந்தியா திரும்பியதும் இந்தத் தொழிலில் அவரும் ஈடுபட தீர்மானித்தார். திண்டுக்கல் சார்ந்த உணவகம் விரிவடைந்து முதலில் சென்னையில் ஒரு சிறிய ரெஸ்டாரண்டாக உருவானது. தற்போது உலகெங்கும் 40-க்கும் மேற்பட்ட உணவகங்கள் செயல்பட்டு வருகிறது.
எதுவும் திட்டமிடப்படவில்லை. யூகேவில் குடியேற நினைத்தேன். ஆனால் என்னுடைய அப்பாவின் உடல்நலம் குன்றியது. அவரைப் பார்க்க இந்தியா வந்தேன். அப்போது இந்த கிராமிய உணவை ஏன் சென்னைக்கு எடுத்துச்செல்லக் கூடாது என்கிற கேள்வி என்னுள் எழுந்தது. இவ்வாறு நினைத்ததும் 2009-ம் ஆண்டு மெல்ல மெல்ல திண்டுக்கல்லிலிருந்து சென்னைக்கு பயணித்தோம்,” என்றார் மூன்றாம் தலைமுறை தொழில்முனைவோரான நாகசாமி.
நாகசாமியின் தாத்தா 1957-ம் ஆண்டு ’ஆனந்தா விலாஸ்’ என்கிற ஒரு சிறிய ஹோட்டலை அவர்களது சொந்த ஊரான திண்டுக்கல்லில் அமைத்தார். அப்போதுதான் இவரது குடும்பத்திற்கு பிரியாணி மீது பிரியம் ஏற்படத் துவங்கியது.
அந்நாளில் அக்கவுண்டண்டாக இருந்தார் நாகசாமி நாயுடு. அவரது மனைவியின் பிரியாணி ரெசிபி தனித்துவமானது என்று நம்பினார். இதைப் பின்பற்றுவதால் அவரது ஹோட்டல் தனித்து விளங்கும் என்றும் நம்பினார். ஆனந்தா விலாஸ் உணவகத்தில் முக்கிய உணவாக ஆட்டிறைச்சி பிரியாணி பரிமாறப்பட்டது. ஒருவர் மற்றவருக்கு பரிந்துரைத்து இந்த உணவு பிரபலமாகி தொலை தூரத்திலிருந்து மக்கள் உணவகத்துக்கு வரத்துவங்கினர்.
இங்கு பிரியாணி எவ்வளவு பிரபலமோ அதே அளவிற்கு கவுண்ட்டரில் வெள்ளை டர்பனுடன் இருக்கும் நபரும் பிரபலம். சில காலங்களுக்குப் பிறகு ஆனந்தா விலாஸ் என்று அழைக்கப்பட்ட உணவகம் தலப்பாக்கட்டி பிரியாணி என்று அழைக்கப்பட்டது. தலப்பா என்றால் பாரம்பரிய டர்பன் என்று பொருள்படும். 1957 முதல் 2009 வரை திண்டுக்கல்லில் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே தலப்பாக்கட்டி பிரியாணி உணவகம் இருந்தது. கோவையில் ஒரு கிளையை அமைத்து சோதனை செய்யப்பட்டது. ஆனால் அங்கு சிறப்பாக செயல்படவில்லை.
நாகசாமி தொழிலை கையில் எடுத்துக்கொண்ட பிறகு பல மாற்றங்கள் ஏற்பட்டது.
திண்டுக்கல்லைத் தாண்டி விரிவடையலாம் என்று 2009-ம் ஆண்டு முதலில் பரிந்துரைத்தபோது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரியாணி என்ற பெயரை உச்சரித்ததும் நினைவிற்கு வருபவை பானையில் நறுமணமிக்க குங்குமப்பூ சேர்த்த நீளமான அரிசி, பொன்னிறமாக வறுக்கப்பட்ட வெங்காயம், மிருதுவான இறைச்சித் துண்டுகள் போன்றவை. இவை அனைத்தும் மிகச்சரியான பதத்தில் சமைக்கப்பட்டிருக்கும். இந்தியாவில் பல விதமான பிரியாணிகள் உள்ளன.
லக்னவி பிரியாணி நுட்பமான சுவைக்கு பிரபலமானது. ஹைதராபாதி பிரியாணி காரமான சுவைக்கு பிரபலமானது. கொல்கத்தா பிரியாணியில் வேகவைத்த முட்டையும் உருளைக்கிழங்கும் சேர்க்கப்பட்டிருக்கும். பெரும்பாலான பிரியாணிகள் ராயல் கிச்சனில் உருவாக்கப்பட்டதாகும்.
ஆனால் திண்டுக்கல் தலப்பாக்கட்டி கிராமத்து சுவையுடன் ஒரு வேறுபட்ட பிரியாணியை அளிக்கிறது. கிராமப்புற சுவை சென்னை நகரவாசிகளின் விருப்பத்தை நிறைவேற்றுமா என்று ஆரம்பத்தில் தயங்கினார் நாகசாமி.
”என்னால் இந்தச் சவாலை எதிர்கொள்ள முடியுமா என்றும் பணத்தை இழந்துவிடுவோமோ என்றும் அப்பா பயந்தார்,” என்றார் நாகசாமி.
சிறப்பாக வளர்ச்சியடைய முடியுமா? தொழிலை வெற்றிகரமாக நடத்த முடியுமா? இதுபோன்ற கேள்விகள் நாகசாமியின் மனதில் எழுந்தது. இருந்தும் துணிந்து செயலில் இறங்க முடிவெடுத்தார். உணவுப் பிரியர்கள் ஒரு தனிப்பட்ட சுவையை நிச்சயம் விரும்புவார்கள் என்பதை மட்டும் திடமாக நம்பினார். சென்னையின் முக்கிய குடியிருப்புப் பகுதியான அண்ணாநகரில் முதல் கிளையை அமைக்க முதலீடு செய்தார் அவரது அப்பா.
”வாடிக்கையாளர்தான் கடவுள். தொழிலில் முடிவுகள் எடுப்பதன் பின்னணியில் வாடிக்கையாளர்களின் கருத்துக்கள்தான் உள்ளது. தொடர்ந்து வாடிக்கையாளரின் கருத்துகளுக்கு செவி கொடுப்பதே வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை புரிந்துகொள்ள உதவுகிறது. திண்டுக்கல்லில் உணவகத்திற்கு வரும் மக்கள் ஏன் சென்னைக்கு இத்தகைய பிரியாணியை கொண்டு வரவில்லை என்று கேட்டனர். அதைத்தான் நான் நிறைவேற்றினேன்,” என்றார் நாகசாமி.
வெற்றியின் ரகசியம்
பணத்தை சேர்ப்பது மட்டுமே தொழில்முனைவில் ஈடுபடுவதன் முக்கிய நோக்கமா? அல்லது பணத்தைத் தாண்டி வேறு ஏதேனும் நோக்கம் இருக்குமா? தனது நோக்கம் பெரியது என்றும் பணத்தை சேர்ப்பதில் மட்டுமே கவனம் செலுத்தவில்லை என்றும் தெளிவாக தெரிவிக்கிறார் நாகசாமி.
நான் குழந்தையாக இருந்தபோதே என்னுடைய அப்பாவும் தாத்தாவும் எனக்குத் தேவையான பணத்தை சேர்த்து வைத்துள்ளனர். பணம் எனக்கு ஒரு பொருட்டல்ல. இந்த ப்ராண்டை தேசிய அளவில் பிரபலப்படுத்த விரும்புகிறேன். அதுதான் என்னுடைய கனவு. கேஎஃப்சி போன்ற ரெஸ்டாரண்ட்கள் எனக்கு ஊக்கமளித்தது. அவை பல்வேறு நகரங்களில் செயல்படுகிறது. தலப்பாக்கட்டி ஏன் தேசிய அளவில் செயல்பட முடியாது என்று யோசித்தேன்.”
இந்த உணர்வை மேலும் உறுதிப்படுத்த நினைத்தார். சரவண பவன் மற்றும் அடையாறு ஆனந்த பவன் ஆகிய இரண்டு ரெஸ்டாரண்ட்கள் சென்னையில் வெற்றிகரமாக செயல்படுகின்றன. இதன் வெற்றிக்கு பின்னால் இருந்த தொழில்முனைவோரை அணுகிறார். வளர்ச்சி நோக்கிய பாதையை இவர்கள் நாகசாமிக்குத் தெளிவுபடுத்தினர்.
தொழில்முனைவுக் கனவினால் ஈர்க்கப்பட்டாலும் ஒரு சிறந்த நோக்கத்தை உருவாக்குவதும் அதற்காக உழைத்து வெற்றிகரமாக அதைச் செயல்படுத்துவதும் முற்றிலும் வேறுபட்ட செயலாகும். வளர்ச்சியை நோக்கி பயணிக்கையில் வெளியிலிருந்து திறமைகள் உள்ளே புகுத்துவதில் சிக்கல்களைச் சந்திப்பார்கள். பெரும்பாலான குடும்பத் தொழில்கள் இந்த சிக்கல்கள் காரணமாக தடுமாறிவிடும்.
எனினும் மேலும் சிறப்பாக செயல்பட வேண்டுமெனில் ஒரு சிறந்த குழு உடன் இருக்க வேண்டும் என்பதை நன்குணர்ந்தார் நாகசாமி. தாய்வழி மாமாவான சுப்புராஜ் ராமசாமி மற்றும் ரவி ஆகியோரை தொழிலில் உடன் இணைந்துகொள்ளுமாறு கேட்டார்.
நீங்கள் வளர்ச்சியடையத் துவங்குகையில் ஒரு நம்பகமான குழு உங்களுடன் இருப்பது அவசியம். கற்றறிந்தவர்களால் எந்த ஒரு நிறுவனத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தமுடியும் என்று திடமாக நம்புகிறோம். ஆகவே அப்படிப்பட்டவர்களையே நான் தேர்ந்தெடுப்பேன். நான் பணியிலமர்த்துபவர்கள் என்னைவிட அதிகம் தெரிந்துகொண்டவர்களாக இருக்கவேண்டும்,” என்று நாகசாமி விவரித்தார்.
இது பெரும்பாலான தொழில்முனைவோரின் எண்ணத்திற்கு முரண்பட்ட கருத்தாகும். ஏனெனில் பல தொழில்முனைவோர் தங்களுக்கு சமமாகவோ அல்லது தங்களைக் காட்டிலும் அதிகமாக தங்களது ஊழியர்கள் தெரிந்துவைத்திருக்கக்கூடாது என்றே நினைப்பார்கள்.
ப்ராண்டை உருவாக்கும்போது கற்றறிந்தது
’தலப்பாக்கட்டி’ நாகசாமி நாயுடுவை கேஎஃப்சியை உருவாக்கிய கோலோனல் சேண்டர்ஸுடன் ஒப்பிடுவது நியாயமாகாது. எனினும் இரண்டு கதைகளும் ஒரே மாதிரியானது. ஆனந்தா விலாஸாக துவங்கப்பட்ட உணவகம் வெள்ளைநிற டர்பன் அணிந்த நபருடன் வலுவாக இணைக்கப்பட்டு மனதில் பதிந்தது.
பிரியாணி பிரபலமாவதற்கு இவரே முன்னிலைப்படுத்தப்பட்டார். எனவே பிரியாணி பிரபலமாவதற்கு எது காரணமோ அந்தப் பெயரிலேயே அழைக்கப்படவேண்டும் என்று நினைத்தனர். நாகசாமியின் தாத்தாவின் மறைவிற்குப் பின் அவர்கள் அவ்வாறே உணவகத்தின் பெயரை மாற்றினார்கள்.
தலப்பாக்கட்டி ப்ராண்ட் வெற்றிபெற்றதை அடுத்து அதேபோன்ற பெயர்களைக்கொண்ட தலப்பாக்கட்டு, ராயல் தலப்பாக்கட்டு போன்ற போட்டியாளர்கள் உருவானார்கள். இவை பின்னாளில் தலப்பாக்கட்டி என்கிற ப்ராண்டின் உண்மையான உழைப்பை குலைக்க வாய்ப்புள்ளது என்பதை உணர்ந்தார் நாகசாமி. சட்டப்படி நடவடிக்கை எடுத்து தன்னுடைய ப்ராண்ட்டின் பெயருக்கான உரிமையை பெற்றார்.
”என்னுடைய ஆர்கிடெக்ட் எனக்கு உதவினார். எங்களது ப்ராண்டை வெளிப்படுத்தும் விதத்தில் என்னுடைய தாத்தாவின் புகைப்படத்தைக் கொண்ட ஒரு லோகோவை உருவாக்கினோம். இவ்வாறு சந்தையில் மற்றவர்களிடமிருந்து எங்களை வேறுபடுத்தியுள்ளோம்.”
அடுத்தகட்ட நடவடிக்கையாக இவர்களது ப்ராண்ட் ரெஸ்டாரண்ட் அமைந்திருக்கும் விதத்தை வேறுபடுத்த நினைத்தனர். திண்டுக்கல்லில் ஒரு சிறிய குடில் போன்ற அமைப்பில் வாடிக்கையாளர்களுக்கு பிரியாணி பரிமாறப்படும். மேலும் இவர்களது உணவகம் தனித்து தெரியும் விதத்தில் பிரியாணி தயாரிக்க பயன்படுத்தப்படும் பெரிய பானை வெளியே பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும்.
ஆனால் இந்த அணுகுமுறை நகர்புறங்களுக்கு பொருத்தமாக இருக்காது. ஆகவே சென்னையின் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவிதத்தில் மாற்றியமைக்கவேண்டியது அவசியமானது. இந்த ப்ராண்ட் இலக்காகக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர்கள் நடுத்தர மற்றும் மேல்தட்டு மக்கள். குறிப்பாக குடும்பத்துடன் வந்து நல்ல உணவை ரசிக்கவேண்டும் என்று நினைப்பவர்கள்.
”நாங்கள் சந்தையில் நுழைவதற்கு முன்பு நடுத்தர மற்றும் மேல்தட்டு மக்கள் குளிர்சாதன வசதி இல்லாத சாதாரண ரெஸ்டாரண்டுகளுக்கே சென்றுகொண்டிருந்தனர். அவர்களால் தங்களது குடும்பத்தினரை அங்கு அழைத்துச்செல்ல முடியவில்லை. ஆகவே அவர்கள் குடும்பத்துடன் குழந்தைகளை அழைத்து வந்து சாப்பிடும் வகையில் நாங்கள் தலப்பாக்கட்டியை அறிமுகப்படுத்தினோம்.”
தயாரிப்பையும் ப்ராண்டையும் வேறுபடுத்திக் காட்டியது திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணியை வளம்பெறச் செய்தது. அதே சமயம் நேரமும் முக்கியக் காரணியாக அமைந்தது. பிரியாணி மிகவும் பிரபலமாகத் துவங்கிய நேரம் அது. இது இவர்களது ப்ராண்டின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது.
முன்பெல்லாம் பண்டிகை மற்றும் விசேஷங்களில் மட்டுமே பிரியாணி விசேஷ உணவாக பரிமாறப்படும். ஆனால் விரைவில் மக்கள் பிரியாணியை வழக்கமான உணவாக உட்கொள்ளத் துவங்கினர். மதிய உணவு வேளையிலோ, இரவு உணவு வேளையிலோ அல்லது இடைப்பட்ட நேரத்திலோ எடுத்துக்கொள்ளத் துவங்கினர். அந்தச் சந்தர்ப்பத்தை நாங்கள் பயன்படுத்திக்கொண்டோம். எங்களது தனித்துவமான மணம் மற்றும் சுவை எங்களது போட்டியாளர்களிடமிருந்து எங்களை வேறுபடுத்திக் காட்டியது. அதுவே வளர்ச்சிக்கும் உதவியது,”
என்கிறார் தற்செயலாக தொழில்முனைவோரான நாகசாமி.
திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி பரிமாறும் முக்கிய உணவு வகை எப்போதும் மட்டன் பிரியாணிதான். ஆனால் வாடிக்கையாளர்களின் தேவை அதிகரிக்கவே சிக்கன் பிரியாணி மற்றும் இறைச்சித் துண்டுகள் அடங்கிய பிரியாணி ஆகியவை இணைக்கப்பட்டது. சிக்கன் 65 பிரியாணி, பனீர் பிரியாணி, காளான் பிரியாணி ஆகிய வகைகளும் கிடைக்கிறது. இவர்களது மெனுவில் தீயில் சுடப்பட்டு தயாரிக்கப்படும் வகைகளும் உள்ளது. மற்ற தென்னிந்திய உணவு வகைகளான மட்டன் சுக்கா, கரண்டி ஆம்லெட் போன்ற உணவு வகைகளும் கிடைக்கிறது.
செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள்
திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி இரண்டு கிளைகளுடன் துவங்கப்பட்டு 10 வருடங்களில் 62 கிளைகளாக அதிகரித்துள்ளது. தற்போது பாரீஸ், துபாய், கோலாலம்பூர், கலிஃபோர்னியா ஆகிய பகுதிகள் செயல்பட்டு வருகின்றன. சிட்னி, அபுதாபி, மஸ்கட் ஆகிய சந்தைகளில் செயல்பட விரும்புகிறது. இந்தியாவில் தமிழ்நாட்டில் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் விரிவடைந்த பிறகு மற்ற நகரங்களிலும் செயல்பட திட்டமிட்டு வருகிறது.
Thalappakatti.com என்கிற வலைதளம் மூலமாக வழங்குவதிலும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. வீட்டில் டெலிவரி செய்ய திட்டமிடுவதன் மூலம் சென்னையில் மட்டும் 1.5 – 2 கோடி ரூபாய் ஈட்ட வாய்ப்புள்ளது என்று கருதுகின்றனர்.
சென்னை மற்றும் திண்டுக்கல்லில் அமைக்கப்பட்டுள்ள மையப்படுத்தப்பட்ட சமையலறை மூலமாக செயல்பட்டு வரும் இந்நிறுவனம் அடுத்த வருடத்தில் 10 நகரங்களில் செயல்பட திட்டமிட்டுள்ளது.
நாவூறச் செய்யும் சுவை அடங்கிய திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணியை நீங்கள் இதுவரை சுவைத்ததில்லையெனில் பதட்டப்படவேண்டாம். பெங்களூரு, மும்பை, டெல்லி போன்ற நகரங்களிலும் விரிவடைய திட்டமிட்டு வருகின்றனர். விரைவில் உங்களது பகுதிக்கு அருகிலும் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி திறக்க வாய்ப்புள்ளது.