அடிச்சுது ‘ஜாக்(மீன்)பாட்’ - ஒரே ஒரு மீன் விற்று 3 லட்சம் சம்பாதித்த மீனவப் பெண்!
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த புஷ்பா கர் என்பவருக்கு கிடைத்த 52 கிலோ எடையுள்ள மீன் 3 லட்ச ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.
இன்றைய பொழுது சிறப்பானதாக அமையவேண்டும் என்று நாம் தினமும் தவறாமல் பிரார்த்தனை செய்கிறோம். ஆனால் அடுத்த நொடி என்ன நடக்கும் என்கிற மர்மமே வாழ்க்கையை சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்கிறது. அப்படித்தான் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள கிராமத்தில் ஏழையாக படுத்துறங்கிய ஒரு மூதாட்டி மறுநாள் லட்சாதிபதி ஆக மாறியிருக்கிறார்.
மேற்குவங்க மாநிலத்தின் பர்கனா மாவட்டத்தில் சாகர் தீவில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்பா கர். இவர் மிகப்பெரிய மீன் ஒன்று ஆற்றில் மிதந்து வருவதைப் பார்த்தார். அதை கஷ்டப்பட்டு கரைக்கு இழுத்தார். இந்த மீன் அவரை லட்சாதிபதி ஆக்கப்போகிறது என்பதை அவர் அப்போது அறிந்திருக்கவில்லை.
அந்த மீனைக் கண்டதும் உள்ளூர் சந்தையில் இந்த மீன் நல்ல விலைக்கு போகும் என்று அருகிலிருந்தவர்கள் கூறியுள்ளனர். மற்றவர்கள் உதவியுடன் புஷ்பா கர் அதை சந்தைக்கு கொண்டு சென்றுள்ளார்.
அந்த மீன் 'போலா’ என்கிற வகையைச் சேர்ந்தது என்பது தெரியவந்தது. 52 கிலோ எடை இருந்தது. ஒரு கிலோ 6,200 ரூபாய் என்கிற விலையில் விற்பனை செய்யப்பட்டு அவருக்கு 3 லட்ச ரூபாய் கிடைத்துள்ளது.
அந்த மீன் அழுகிப்போகும் நிலையில் இருந்ததால் உண்பதற்கு பயன்படுத்த முடியாது. இருப்பினும் மற்ற மருத்துவth தேவைகளுக்குப் பயன்படும். இதுபோன்ற மீன்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
“சக்புல்துபி கிராமத்தைச் சேர்ந்த புஷ்பா கர் ஆற்றில் மீன் மிதந்து வருவதைப் பார்த்தார். கடினமாக முயற்சி செய்து அந்த மீனை கரைக்கு இழுத்துள்ளார். அது போலா மீன் என்று தெரிய வந்துள்ளது. அந்த வழியாக சென்ற கப்பல் மோதி அந்த மீன் இறந்திருக்க வாய்ப்புண்டு,” என்று கிராமவாசி ஒருவர் குறிப்பிட்டார்.
புஷ்பா கர்ரிடம் கிடைத்த அந்த மீன் அழுகிப் போகாமல் இருந்திருந்தால் மேலும் நல்ல விலைக்கு விற்பனையாகியிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
தகவல் உதவி: பூனே மிரர்