ஊரடங்கில் வேலையின்றி வாடியபோது அடித்த ஜாக்பாட்: 12 கோடி வென்ற கேரள இளைஞர்!
கோயிலில் கணக்காளராக வேலை செய்யும் கேரளாவைச் சேர்ந்த 24 வயது அனந்து விஜயன் லாட்டரியில் 12 கோடி ரூபாய் வென்றுள்ளார்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக மக்கள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்த பலரும் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதில் சில விதிவிலக்குகளும் உண்டு.
சிலர் இந்த மோசமான சூழலையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அதற்கேற்ப தங்களது செயல்பாடுகளை மாற்றியமைத்துக் கொண்டு வருவாய் ஈட்டி வரும் வெற்றிக் கதைகளையும் பார்க்கிறோம்.
அதேபோல் இந்தக் கடுமையான சூழலிலும் அதிர்ஷ்ட்டம் சிலரை கோடீஸ்வரர்களாக மாற்றியுள்ளது. அப்படித்தான் கேரளாவைச் சேர்ந்த நபர் ஒருவர் கோடீஸ்வரராக மாறியுள்ளார்.
கேரள மாநிலத்தின் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் அனந்து விஜயன். 24 வயதான இவரது பூர்வீகம் இடுக்கி மாவட்டம். இவர் எர்ணாகுளத்தில் உள்ள பொன்னீத் கோயிலில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார்.
அனந்து விஜயன் தனது அப்பா, அம்மா, அக்கா, தம்பி ஆகியோருடன் வசித்து வருகிறார். அக்கா முதுகலை பட்டப்படிப்பு முடித்து தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் வேலையை இழந்துவிட்டார். சகோதரர் பிபிஏ முடித்துவிட்டு எம்பிஏ சேர இருக்கிறார்.
அனந்து விஜயனுக்கு லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் உண்டு. பல முறை வாங்கியிருக்கிறார். ஆனால் இதுவரை பெரிதாக பரிசுத்தொகை என்று எதையும் வென்றதில்லை. இவர் சமீபத்தில் கேரள அரசின் திருவோண பம்பர் லாட்டரி டிக்கெட் வாங்கியிருந்தார். இதற்கான குலுக்கல் திருவனந்தபுரத்தில் நடந்தது.
இதில் பம்பர் பரிசாக 12 கோடி ரூபாய் வென்றுள்ளார். ஏஜென்சி கமிஷன், வரி போன்ற பிடித்தங்கள் போக அனந்து விஜயனுக்கு 7.5 கோடி ரூபாய் கிடைக்கும். இந்த லாட்டரி சீட்டை வங்கியில் டெபாசிட் செய்துள்ளார்.
இதுகுறித்து நியூஸ்18 இடம் அவர் கூறும்போது,
“முதல் பரிசு கிடைத்த தகவலை நான் குடும்பத்தினரிடம் முதலில் தெரிவித்தேன். அனைவரும் ஆச்சரியப்பட்டனர். என் உற்சாகத்தை வெகு நேரமாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. இரண்டு மணி நேரத்திற்கு மேல் தூங்க முடியவில்லை,” என்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.
தகவல் மற்றும் பட உதவி: நியூஸ்18