காஷ்மீர் குங்குமப்பூ: இனிப்பான, விலை உயர்ந்த மசாலா பொருளின் கதை
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் விலை உயர்ந்த மசாலா பொருளாக இது அறியப்படுகிறது.
காஷ்மீரின் அடையாளங்களில் மிக முக்கியமானது அங்கு சாகுபடி செய்யப்படும் குங்குமப்பூ. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் விலை உயர்ந்த மசாலா பொருளாக இது அறியப்படுகிறது. பல்வேறு ஆரோக்கிய நலன்களை தன்னகத்தே கொண்டுள்ளது காஷ்மீர் குங்குமப்பூ. நாளுக்கு நாள் இதன் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. அதற்கான காரணம் மற்றும் காஷ்மீர் குங்குமப்பூ குறித்த வரலாற்றை பார்ப்போம்.
வான் உயர்ந்த வெண் பனி போர்த்திய மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது காஷ்மீரின் பாம்போர் பகுதி. இங்கு சுமார் இருபது ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் குங்குமப்பூ சாகுபடி சார்ந்து இயங்கி வருகின்றனர். இந்த பகுதியை இந்திய குங்குமப்பூக்களின் தலைநகரம் எனச் சொல்லலாம். காஷ்மீர் தலைநகரான ஸ்ரீநகரில் இருந்து சுமார் 14 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது பாம்போர். இந்தப் பகுதியில் அமைந்துள்ள விளைநிலங்கள் முழுவதும் ஊதா நிறப்பூக்களால் போர்வை போர்த்தியது போல காட்சி தருகின்றன.
குரோக்கஸ் சடிவஸ் (Crocus sativus) என இந்த ஊதா நிறப்பூக்கள் அறியப்படுகின்றன. இந்தப் பூக்களில் மஞ்சள் மற்றும் சிகப்பு நிறத்தில் இழைகள் இருக்கும். இதில் சிகப்பு நிற இழைகள் தான் அசல் ’குங்குமப்பூ’ என அறியப்படுகிறது. இந்தப் பகுதியில் சாகுபடி செய்யப்படும் குங்குமப்பூ விசேஷமானதாக அறியப்படுகிறது. அதன் காரணமாகவே இங்கு விளைவிக்கப்படும் குங்குமப்பூக்கள் லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நடப்பு ஆண்டில் சுமார் 10 கிராம் குங்குமப்பூ ரூ.3,200 விற்பனை செய்யப்படுவதாக தகவல். அப்படியென்றால் ஒரு கிலோ குங்குமப்பூ சுமார் 3 லட்ச ரூபாய்க்கு மேல் விற்பனை ஆகிறது. இதற்கு புவிசார் குறியீடும் (GI Tag) வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கிருந்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
அதிக விலைக்குக் காரணம் என்ன? ஒரு கிலோ குங்குமப்பூ பல லட்சங்களில் விற்பனை செய்யப்படுவதற்கான காரணம் அதனை சாகுபடி செய்வது சார்ந்த பின்னணியில் அடங்கியுள்ள உழைப்புதான். ஆண்டுக்கு ஆறு வார காலம் மட்டுமே குரோக்கஸ் சடிவஸ் பூக்கள் பூக்கும். இதோடு காலநிலை மாற்றம் போன்ற சவால்களும் எதிர்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது. சுமார் 1.5 லட்சம் பூக்களில் இருந்து ஒரு கிலோ குங்குமப்பூ மட்டுமே கிடைக்கும் எனத் தெரிகிறது. ஒரு பூவில் 3 முதல் 4 குங்குமப்பூ இழைகள் இருக்கும்.
கூடைகளில் பூக்களை பறிப்பதில் இருந்து தொடங்குகிறது குங்குமப்பூக்களின் அறுவடை. அதன் பின்னர், பூக்கள், மஞ்சள் மற்றும் சிகப்பு நிற இழைகளை தனித்தனியாக பிரிக்க வேண்டும். தொடர்ந்து அந்த இழைகளை உலர்த்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இப்படியாக அதன் பணி உள்ளது. முக்கியமாக இது காஷ்மீர் பிரதேசத்தின் பொருளாதார மேம்பாட்டிற்கு முக்கியக் காரணியாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
குங்குமப்பூ இந்தியாவிற்குள் வந்தது எப்படி?
இந்தியாவிற்குள் குங்குமப்பூ வந்தது குறித்து வெவ்வேறு விதமாக சொல்லப்படுகிறது. கடந்த 12-ம் நூற்றாண்டில் இரண்டு சூஃபி துறவிகள் இந்தியா வந்திருந்த போது குங்குமப்பூ கிழங்கை கொண்டு வந்ததாக சொல்லப்படுகிறது. முகலாய அரசர்கள் இந்தியாவிற்கு வந்த போது அவர்களுடன் குங்குமப்பூவும் வந்ததாக சொல்லப்படுகிறது. பாரசீகர்கள் ஈரானில் இருந்து வர்த்தக நோக்கத்தில் இந்தியாவுக்கு குங்குமப்பூவை கொண்டு வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
Edited by Induja Raghunathan