இந்தியாவில் உலகின் மிகபெரிய சூரிய மின்சக்தி பூங்கா!
2050 மெகாவாட் திறன் கொண்ட உலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி பூங்கா முழு கொள்ளளவில் செயல்படத் துவங்கியுள்ளது. எங்கு தெரியுமா?
கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி பூங்கா முழு கொள்ளளவில் செயல்படத் துவங்கியுள்ளது. இந்த பூங்காவின் இறுதி கட்ட 200 மெகாவாட் திறனும் செயல்பாட்டிற்கு வந்துள்ளதால் மொத்த 2050 மெகாவாட் திறனும் செயல்படத் துவங்கியுள்ளது.
கர்நாடக மாநிலம் தும்கூரில் உள்ள பவகடாவில் 13,000 ஏக்கர் பரப்பில், பவகடா சூரிய மின்சக்தி பூங்கா அமைந்துள்ளது. துவக்கத்தில் 2,000 மெகாவாட் திறன் கொண்டதாக அமைக்கப்பட்டு, பின்னர் 50 மெகாவாட் சேர்க்கப்பட்டு, உலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி பூங்காவாக அமைந்துள்ளது.
இந்திய சூரிய மின்சக்தி கார்ப்பரேஷன் மற்றும் கர்நாடக மறுசுழற்சி ஆற்றல் நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு நிறுவனமான கர்நாடகா சோலார் பார்க் டெவலப்மண்ட் கார்ப்பரேஷன் சார்பில் இந்த சூரிய மின்சக்தி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
2019 டிசம்பர் மாத வாக்கில் இந்த மொத்த கொள்ளலவும் செயல்பாட்டிற்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பவகடா சூரிய மின்சக்தி பூங்காவின் 2050 மெகாவாட் திறனும் செயல்பாட்டிற்கு வந்து, மின் உற்பத்தி செய்யப்படுவதாகவும், மெர்காம் மீடியா சார்பில் தொடர்பு கொள்ளப்பட்ட போது தெரிவிக்கப்பட்டதாக அந்த இணையதளம் தெரிவித்துள்ளது.
பவகடா சூரிய மின்சக்தி பூங்கா 2015ம் ஆண்டில் திட்டமிடப்பட்டு, இதற்கான பணிகள் 2016 ஜனவரியில் துவங்கியது. இந்த பூங்கா 250 மெகாவாட் திறன் கொண்ட எட்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய திட்டம் என்பதால், இதற்கான திட்டமிடலும் பெரிய அளவில் அமைந்தது.
இந்த பூங்காவுக்கான நிலம் அனைத்தும் குத்தகை முறையில் பெறப்பட்டுள்ளதால் செலவு குறைந்துள்ளது. நிலத்திற்காக பூங்கா நிறுவனம் சார்பில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ஏக்கருக்கு ரூ.21,000 அளிக்கப்படுகிறது. இந்த பகுதி வறட்சியானது என்பதால், இது விவசாயிகளுக்கும் சாதகமாக அமைந்துள்ளது.
பணிகள் துவக்கப்பட்ட ஓராண்டில் 400 மெகாவாட் பகுதி செயல்பாட்டிற்கு வந்தது. இந்த பூங்காவை முழுவதுமாக திட்டமிட்டு, அடிப்படை உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆனது.
மெர்கான் இந்தியாவின் சோலார் திட்ட டிராக்கர் படி, சூரிய மின்சக்தி உற்பத்தியில் இந்தியாவின் முன்னணி மாநிலமாக கர்நாடகம் திகழ்கிறது. மாநிலத்தில் 7.1 கிகாவாட் திறன் சூரிய மின்சக்தி திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. மேலும் 1 கிகாவாட் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தகவல் உதவி: மெர்காம் இந்தியா | தமிழில்: சைபர்சிம்மன்