மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதைக் கண்டறியும் ஸ்மார்ட் கருவியை கண்டுபிடித்துள்ள இளைஞர்!
ஹைதராபாத்தைச் சேர்ந்த சாய் தேஜா சாலை பாதுகாப்பிற்காக ஸ்மார்ட் டிடெக்டரை உருவாக்கியுள்ளார். வாகன ஓட்டுனர் மது அருந்தியிருந்தால் இந்தக் கருவி அதைக் கண்டறிந்து வாகனத்தின் இயக்கத்தை நிறுத்திவிடும்.
இந்தியாவைப் போன்றே பல்வேறு நாடுகளில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றமாகும். இருப்பினும் பலர் இதைப் பொருட்படுத்தாமல் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதைப் பார்க்க முடிகிறது. இதனால் எந்த பாதிப்பும் இல்லை என்று பலர் குறிப்பிடும் நிலையில் மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டத் துவங்கும்போது சாலை பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது என்பதும் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது என்பதும் கருத்தில் கொள்ளப்படவேண்டும்.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் பிரச்சனைக்கு முடிவு காணவும் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும் ஒரு தனித்துவமான தீர்வைக் கண்டறிந்துள்ளார் ஹைதராபாத்தைச் சேர்ந்த 22 வயது சாய் தேஜா. பத்தாம் வகுப்பு முடித்துள்ள இவர், மது அருந்தியிருப்பதைக் கண்டறியும் கருவியைக் கண்டுபிடித்துள்ளார். இதன் மூலம் வாகன ஓட்டுனர் மது அருந்தியிருப்பது கண்டறியப்பட்டால் வாகனத்தின் என்ஜின் நிறுத்தப்படும்.
வாகன ஓட்டுனர் மது அருந்தியிருப்பதைக் கண்டறிய உதவும் இந்தக் கருவியை டேஷ்போர்டில் வைக்கலாம். இந்தக் கருவி கார் என்ஜினின் இயக்கத்தைக் கட்டுப்பத்துவதுடன், அத்துடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண் வாயிலாக எஸ்எம்எஸ் அனுப்பப்படும் என ’தி க்விண்ட்’ தெரிவிக்கிறது.
ANI உடனான உரையாடலில் தேஜா இந்தக் கருவி குறித்து மேலும் விவரிக்கையில்,
”சில தவிர்க்கமுடியாத காரணங்களால் பத்தாம் வகுப்புடன் எனது பள்ளிப்படிப்பை நிறுத்திக்கொண்டேன். ஆனால் எலக்ட்ரானிக்குகள் மீது எனக்கு ஆர்வம் இருந்தது. இணையம் வாயிலாக கோட் செய்ய கற்றுக்கொண்டு மது அருந்தியிருப்பதைக் கண்டறியும் கருவியைக் கண்டுபிடித்தேன். வாகன ஓட்டுனர் 30 சதவீதத்திற்கும் மேல் மது அருந்தியிருந்தால் வாகன என்ஜினின் இயக்கத்தை இந்தக் கருவி கட்டுப்படுத்திவிடும்,” என்றார்.
சாலை பாதுகாப்பு
அவர் மேலும் கூறுகையில்,
“கருவியின் மைக்ரோகண்ட்ரோலரில் சேமிக்கப்பட்டுள்ள தொடர்பு எண்ணிற்கு வாகன எண் குறிப்பிடப்பட்டு எஸ்எம்எஸ் அனுப்பிவைக்கப்படும். இந்தக் கருவியைக் கண்டுபிடிக்க எனக்கு 15 நாட்கள் ஆனது. இதன் விலை 2,500 ரூபாய்,” என்றார்.
நாட்டில் சாலை பாதுகாப்பு மோசமாக இருப்பதாகவும் 2016-ம் ஆண்டு மது அருந்தி வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட மொத்த சாலை விபத்துகளின் எண்ணிக்கை 14,894 என்றும் இந்த விபத்துகளால் 6,131 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
தேஜாவின் கருவி முறையாக சந்தைப்படுத்தப்பட்டால் நாட்டில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் குறையும்.
கட்டுரை : THINK CHANGE INDIA