சொப்புச் சாமானில் சமைத்து யூடியூப் சேனலில் கலக்கும் திருவண்ணாமலை ஜோடி!
இந்தியாவின் முதல் மினியேச்சர் சமையல் சேனல் ’தி டைனி ஃபுட்ஸ்’
சிறு வயதில் நாம் அனைவரும் சிறிய சொப்புச் சாமான்களை வைத்து விளையாடியது உண்டு. ஆனால் இங்கு ஒரு தம்பதிகள் சிறு விளையாட்டுப் பாத்திரங்களை வைத்து சமையல் செய்து அசத்துகின்றனர்.
திருவண்ணாமலையில் உள்ள தனிப்பாடி என்ற கிராமத்தைச் சேர்ந்த ராம்குமார்-வளர்மதி தம்பதியனர் மினியேச்சர்களை கொண்டு சமையல் செய்து யூடியுபில் பிரபலம் அடைந்துள்ளனர். பொறியியல் பட்டபடிப்பை முடித்த ராம்குமார், படிப்பு முடிந்ததும் தன் தந்தையின் வணிகத்தை பார்த்துக்கொண்டார். சுயமாக தொழில் தொடங்க வேண்டும் என்று யோசித்த அவர், மனைவியின் யோசனை படி ’தி டைனி ஃபுட்ஸ்’ என்னும் யூடியுப் சேனலை துவங்கியுள்ளார்.
“என்னிடம் முதலீடு எதுவும் இல்லை, முதலீடு இல்லாமல் எங்களால் செய்ய முடிந்தது யூடியுப் சேனல் தான். அதில் ஏதேனும் வித்தியாசத்தை தர வேண்டும் என்று எண்ணினோம்,” என்கிறார் ராம்குமார்.
முதலில் சமையல் சேனல் துவங்கவே நினைத்து இருந்தனர் இந்த தம்பதியினர், ஆனால் அயல்நாட்டில் பிரபலமாக இருக்கும் மினியேச்சர் சமையலில் கவரப்பட்ட ராம்குமாரின் மனைவி, தமிழ் பாரம்பரிய அமைப்பில் சொப்புச் சாமானில் சமைக்கலாம் என முடிவு செய்தார்.
“நமது ஊரில் எவரும் இதை முயற்சி செய்ததில்லை; வெளியூரிலும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தான் சமைத்துள்ளனர். வயல்வெளியில் மண் பாத்திரங்களை கொண்டு இங்கே நாங்கள் சமைக்கிறோம்.”
சமையல் செய்யும் பாத்திரத்தில் இருந்து, காய்கரி நறுக்கும் கத்தி வரை சகலமும் சிறிய பொம்மை பாத்திரமாகவே இருக்கிறது. பெரிய பாத்திரத்தில் சமைத்தால் கூட அந்த அளவு முழுமை அடையுமா என்று தெரியவில்லை. ஆனால் இவர்கள் சொப்புச் சாமானில் செய்யும் உணவுவகைகளைப் பார்க்க கவர்ச்சியாக நாவூறும் வகையில் அமைகிறது.
திருவண்ணாமலையில் சுற்றியுள்ள ஏதேனும் வயல்வெளியை தேர்ந்தெடுத்து சமைத்து படம் பிடிக்கின்றனர். சமையல் செய்யும் முன் கிராமிய சுற்றுப்புறத்தை விளையாட்டு சாமான்களைக் கொண்டு உருவாக்குகிறார் ராம்குமார். மண் வீடு, மாடுச் சக்கர வண்டி என அழகிய சிறு கிராமத்தையே உருவாக்குகிறார். அதன் பின் ராம்குமாரின் மனைவி சமையல் செய்கின்றார்.
“சுற்றுப்புறத்தை உருவாக்கி சமையல் செய்து முடிக்க குறைந்தது ஆறு மணி நேரம் தேவைப் படுகிறது. சில சமயத்தில் கிராம மக்கள் இடம் தர மறுத்தால் சரியான இடத்தை தேர்ந்தெடுக்க பல மணி நேரம் ஆகி விடும்,” என்கின்றனர்.
இருவரும் வேலைக்கு செல்வதால் விடுமுறை நாட்களில் சமையல் செய்து ஒவ்வொரு சனிக்கிழமையும் புது வீடியோக்களை அப்லோட் செய்கின்றனர். கடந்த நவம்பர் மாதம் தொடங்கிய இந்த சேனலிற்கு தற்போது ஒரு லட்சத்திற்கு மேலான பார்வையாளர்களும், 15000-க்கும் மேலான சப்ஸ்க்ரைபர்சும் உள்ளனர். இந்தியாவின் முதல் மினியேச்சர் சமையல் என்பதால் இந்த வரவேற்பு.
“முதலில் வீட்டில் முயற்சி செய்து பார்த்தோம் ஒரு பாத்திர பாலை பொங்க வைப்பதற்கு ஒரு நாள் ஆகியது. அதன் பின் என் மனைவி பல வழிகளை முயற்சி செய்து இன்று சற்று சுலபமான முறையில் சமைக்க முடிகிறது.”
இவர்களின் சேனலிற்கு பிறகு இதே கருத்தைக் கொண்டு சில யூடியுப் சேனல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் இவர்களை கேட்பது எவ்வாறு நெருப்பை வெகு நேரம் எரிய வைப்பது என்பது தான் என்கிறார் ராம்குமார். ஆரம்பத்தில் தங்களுக்கு அந்த தடங்கல் இருந்தாலும் தற்பொழுது அதை சரி செய்துவிட்டதாக கூறுகிறார்.
இவர்கள் பயன்படுத்தும் சிறிய மண் பாத்திரங்கள் பார்பப்தற்கு அழகாக இருப்பதால் அதை விற்பனைக்கு உள்ளதா என பலர் இவர்களை தொடர்பு கொள்கின்றனர். ஆனால் தற்பொழுது அந்த யோசனை எதுவும் இல்லை என்கிறார்.
“ஸ்மார்ட்போன்கள் ஆதிக்கம் செலுத்துவதால் குழந்தைகள் எவரும் சொப்புச் சமான்களை வைத்து விளையாடுவதில்லை. எங்கள் வீடியோக்களை பார்த்தாவது குழந்தைகளுக்கு அந்த ஆசை தோன்றட்டும்,” என்கிறார்கள்.
சிக்கன் பிரியாணி, இட்லி – இறால் குழம்பு, ஃபிரைட் சிக்கன், மட்டன் பிரியாணி என நம் சமையல் அறையில் சமைக்கும் அனைத்து உணவுகளையும் சமைக்கின்றனர். மேலும் இந்த அனைத்து ரெசிபிகளும் யூடியுபில் செம ஹிட். முகநூலிலும் 20000-க்கும் மேலான ஃபாலோயர்கள் உள்ளனர். எந்த தொழிலும் புதுமை இருந்தால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்பதற்கு இவர்களே எடுத்துக்காட்டு.
"