25 வயதிலே இரும்பு வியாபாரத்தில் கலக்கும் பட்டயக் கணக்கர்: ஓராண்டில் ரூ.10 கோடி வருவாய்
தனது கல்வி, அறிவு, திறமை, அனுபவம் போன்றவற்றைப் பயன்படுத்தி அமித் ஒரு கணக்கியல் அல்லது ஆலோசனை நிறுவனத்தை ஆரம்பித்திருக்கலாம். ஆனால் அவர் நம்பிக்கையோடு லட்சியத்தை நோக்கிப் பாய்ந்தார். அதில் வெற்றியும் பெற்றார். இன்று மிக வேகமாக வளர்ந்துவரும் தொழில்முனைவோராக இருக்கிறார்.
இளைஞர்கள் தங்கள் கல்லூரிக் கல்வியை முடித்த பிறகு கல்வித் தகுதிக்கு தகுந்த வேலையைத் தேடி பொருளீட்டுவார்கள். கல்வித் தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லையெனில் கிடைத்த வேலையில் குறைந்த ஊதியத்திலாவது பணியாற்றுவார்கள். சற்று வசதியுள்ளவர்களெனில் சுயதொழிலில் ஈடுபடுவார்கள். அல்லது தனது கல்வித் தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்கும் வரை காத்திருப்பார்கள். இவ்வாறு இளைஞர்களை ரகம் வாரியாக பிரிக்கலாம்.
இதில் பெங்களூரைச் சேர்ந்த அமித் சோப்ரா சற்று வித்தியாசமானவர். தனது 20 வயதிலேயே பட்டயக் கணக்கரான இவர், பல்வேறு எம்என்சி நிறுவனங்களில் பணிபுரிந்தார். எந்த நிறுவனத்திலும் அவரால் நிரந்தரமாக நிம்மதியாக பணியாற்ற முடியவில்லை. அப்போதுதான் அவர் அந்த முடிவை எடுத்தார். தனக்கான களம் இதுவல்ல. இந்த பணியை விட்டு முற்றிலுமாக விலகிவிட்டு, ஏதேனும் தொழிலில் ஈடுபட்டு சாதிக்கவேண்டும் என முடிவெடுத்தார்.
அவர் தடாலடியாக யோசித்து, இரும்பு, எஃகு வியாபாரத்தில் இறங்குவதன்று முடிவெடுத்தார். முடிவெடுத்ததோடு மட்டுமன்றி களத்திலும் இறங்கி கடுமையாக உழைத்து ஓராண்டில் ரூ.10 கோடிக்கு வியாபாரம் செய்து தனது 25ஆம் வயதிலேயே ஓர் வியத்தகு சாதனையையும் படைத்துவிட்டார்.
இதுகுறித்து அவர் பேசியபோது,
”நான் புதிதாக ஓர் துறையைத் தேர்ந்தெடுத்து பணிபுரிய விரும்பினேன். ஆனால் அந்தத் துறையானது நிலையான தொடர்ந்து வளர்ச்சியடையும் துறையாக இருக்கவேண்டும் எனக் கருதினேன்.அப்போதுதான் இந்தியாவில் இரும்பு, எஃகு பொருள்கள் தயாரிப்பு துறைக்கு ஒரு நல்ல எதிர்காலம் இருக்கும் என நான் அறிந்தேன். மேலும், இத்துறை சீராக வளர்ச்சியடைந்து வருவதையும் நான் கண்கூடாக பார்த்தேன்,” என்கிறார்.
ஆம். அவர் சொல்வது போல, இந்தியாவின் எஃகு உற்பத்தி அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக, இந்தியா பிராண்ட் ஈக்விட்டி பவுண்டேஷன் அமைப்பு அளித்த தரவுகளின்படி, 2018 ஆம் ஆண்டில் உலகின் இரண்டாவது பெரிய எஃகு உற்பத்தியாளராக இந்தியா இருந்தது, 2018ம் ஆண்டின் உற்பத்தி 106.5 மில்லியன் டன்களாக இருந்தது.
இதுதான் நான் செய்யும் தொழில் என முடிவு செய்து விட்டேன். ஆனால் என் முன் மிகப்பெரிய சவால் ஒன்று காத்திருந்தது. அதுதான் பெரிய அளிவிலான முதலீடு. இதை சமாளிக்க எனது சேமிப்பிலிருந்து ரூ. 30 லட்சம் முதலீடு செய்தேன். மேலும், எனது குடும்பத்தினரின் உதவியுடன் 2018ல் பெங்களூரில் கேசர் இன்டர்நேஷனலைத் தொடங்கினேன் என்கிறார்.
கட்டுமான நிறுவனங்களளுக்கு அவர்கள் விரும்பிய சரியான வகையிலான எஃகு தயாரிப்புகளை பெற முடியவில்லை என்பது பெரிய குறையாக இருப்பதை அறிந்தேன், எனவே நான் எஃகு உற்பத்தியைத் தொடங்கத் தேவையில்லை, அவர்களுக்குத் தேவையான பொருள்களைத் தரமாக செய்து தருவதே போதும் என உணர்ந்தேன்.
எஃகு கோணங்கள், ஜாய்ஸ்டுகள், விட்டங்கள், சாலைகள், பார்கள் போன்ற சரியான எஃகு தயாரிப்புகளை அவர்களுக்கு வழங்குவதன் மூலம் கட்டுமான நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் ஒரு நிறுவனத்தையும் தொடங்க முடியும் என அமித் முடிவெடுத்துள்ளார்.
இதையடுத்து, ’கேசர் இன்டர்நேஷனல்’ பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எஃகு மூலங்களையும், கட்டமைப்பு எஃகு தயாரிப்புகளை தயாரிக்க ரோலிங் மில்களை வேலைக்கு அமர்த்தியது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையிலான தயாரிப்புகளை வழங்கியது. பிரபல கட்டுமான நிறுவனங்களான பிரெஸ்டீஜ் மற்றும் சோபாவுக்கும் எஃகு தயாரிப்புகளை விற்பனை செய்தது.
இவ்வாறு பெரிய நிறுவனங்களை வாடிக்கையாளர்களாக பெற்றதால், கேசர் இன்டர்நேஷனல் முதல் ஆண்டிலேயே ரூ.10 கோடி வருவாயைப் பெற்றது.
”எங்கள் ஆலைகள், வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் வார்ப்புகளைத் தயாரித்து வழங்குகின்றன. எனவே இத்தயாரி்ப்புகளை கட்டுமான நிறுவனங்களுக்கு மட்டுமன்றி, கப்பல் தயாரிப்பாளர்களுக்கும் வழங்குகிறோம்,” என்கிறார் அமித்.
மேலும், எந்தவொரு வியாபாரத்தையும் தொடங்க பெங்களூர் சிறந்த சந்தை என்பதால்தான் பெங்களூரில் இத்தொழிலைத் தொடங்கினேன் என்கிறார்.
இப்போதெல்லாம், முன்பை விட வேகமாக உயரமான கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. முன்பு 20 தளங்களுக்கு மேல் இருந்த கட்டிடங்கள் கட்ட இரண்டு ஆண்டுகள் ஆனது. ஆனால் எஃகு ஜாயின்டுகள் மூலம், அவற்றை மிக வேகமாக முடிக்கமுடியும். இங்குதான் நாங்கள் பல்வேறு கட்டுமான நிறுவனங்களுக்கு சரியான எஃகு தயாரிப்புகளைப் பயன்படுத்தி கட்டிடத்தை வேகமாக உருவாக்க உதவுகிறோம் என்கிறார்.
இதைத்தாண்டி அமித் எதிர்கொள்ளும் ஒரு பெரிய சவால் நல்லெண்ணம். இந்திய கட்டுமானத் துறையில், புதிய வாடிக்கையாளர்களை பெறுவதற்கு நல்லெண்ணம் மிக முக்கியமானது. அமித் நிறுவனம் தொடங்கி ஓராண்டு மட்டுமே ஆகிறது. இந்நிலையில், நிறுவனத்தின் தயாரிப்புகளின் நம்பகத்தன்மையை கட்டுமானத் துறை பங்குதாரர்களை நம்ப வைக்க வேண்டியுள்ளது.
தனது கல்வி, அறிவு, திறமை, அனுபவம் போன்றவற்றைப் பயன்படுத்தி அமித் ஒரு கணக்கியல் அல்லது ஆலோசனை நிறுவனத்தை ஆரம்பித்திருக்கலாம். ஆனால் அவர் நம்பிக்கையோடு லட்சியத்தை நோக்கிப் பாய்ந்தார். அதில் வெற்றியும் பெற்றார். இன்று மிக வேகமாக வளர்ந்துவரும் தொழில்முனைவோராக இருந்து வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் இளைஞர்களுக்கு ஓர் முன்னுதாரணமாக மாறியுள்ளார்.
ஆங்கில கட்டுரையாளர்: ரிஷம்ப் மன்சூர் | தமிழில்: பரணிதரன்