சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவோருக்கான தளத்தை உருவாக்கிய இளைஞர்!

அப்பா விவசாயி, அம்மா தொழிலாளி என வறுமையில் கஷ்டப்பட்டு படித்து வந்துள்ள மனோஜ், சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் நபர்களின் கதைகளை வெளியிடும் தளத்தை உருவாக்கி அவர்களுக்கு நிதி உதவி பெறவும் செயல்படுகிறார்.

2nd Dec 2019
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

பதின்ம வயதான 14 வயதில் பெரும்பாலானோர் விளையாட்டுகளில் கவனம் செலுத்தும் வேளையில் மனோஜ் பச்சுவாரி தனது குடும்பத்திற்காகவும் படிப்பு செலவுகளுக்காகவும் டாப்-அப் கார்டுகளை விற்பனை செய்தார். இவர் அலிகார் மாவட்டத்தில் உள்ள பொஹினா எனும் சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர்.


இவரது குழந்தைப்பருவம் மோசமாகவே இருந்துள்ளது. குடும்பத்திற்கு உதவவேண்டும் என்பதும் படிப்பை முடிக்கவேண்டும் என்பதுமே இவரது குறிக்கோளாக இருந்தது. ஆங்கிலத்தில் பேசுவது என்பது கற்பனைக்கும் எட்டாத ஒன்றாக இருந்தது.

”ஆங்கிலத்தை விட்டுத்தள்ளுங்கள், இந்தி பேசுவதுகூட கடினமாக இருந்த காலகட்டம் அது,” என்கிறார் தற்போது 27 வயதாகும் மனோஜ்.

மனோஜ் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மனோஜ் ’சோஷியோ ஸ்டோரி’ (Socio Story) என்கிற சமூக தளத்தை நிறுவியுள்ளார். இது சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் நபர்கள், கதைகள், யோசனைகள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் தளமாகும்.

1

இந்தத் தளம் உலகைச் சிறப்பான இடமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சமூக பணியாளர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் பயணத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அத்துடன் அவர்களது யோசனைகள் செயல்வடிவம் பெற அவர்களை நிபுணர்களுடனும் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவோருடனும் இந்தத் தளம் இணைக்கிறது.


’சோஷியோ ஸ்டோரி’ இதுவரை எட்டு அரசு சாரா நிறுவனங்களுக்கு வழிகாட்டியுள்ளது. ஆயிரத்திற்கும் அதிகமானோரின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்சமயம் இந்நிறுவனம் சுகாதார பராமரிப்பு வசதியை வழங்கும் ’ஆரோக்யா’ (Aaroogya) நிறுவனத்திற்கு வழிகாட்டி வருகிறது. அத்துடன் டெல்லி என்சிஆர் பகுதி, ஹரியானா, மேற்குவங்கம், வடகிழக்கு மாநிலங்கள் போன்றவற்றைச் சேர்ந்த 5,00,000 பெண்களுக்கு உதவியுள்ளது.

துவக்கம்

எனினும் மனோஜின் பயணம் எளிதாக இருக்கவில்லை.

“நானும் என்னுடைய குடும்பமும் மிகவும் கஷ்டப்பட்டோம். என்னுடைய அப்பா விவசாயியாகவும் தொழிலாளியாகவும் பணிபுரிந்தார். எனக்கு உணவளிக்கவேண்டும் என்பதற்காகவே என்னுடைய அம்மாவும் தினமும் வேலை செய்வார்,” என்றார்.

மனோஜிற்கு 14 வயதிருக்கையில் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது குடும்பத்திற்காக சம்பாதிக்கவேண்டும் என்று தீர்மானித்தார். அருகில் இருக்கும் நகர் வரை பயணித்து 5 ரூபாய் மற்றும் 10 ரூபாய் மதிப்புள்ள டாப் அப் கார்டுகளை வாங்குவார். அதை கிராமத்திற்கு கொண்டு வந்து 6 ரூபாய்க்கும் 11 ரூபாய்க்கும் விற்பனை செய்வார். இதன் மூலம் மாதம் 5,000 ரூபாய் வரை சம்பாதித்துள்ளார். இந்தத் தொகை குடும்பச் செலவுகளுக்கும் அவரது படிப்பிற்கும் உதவியது.

2

2008-ம் ஆண்டு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று அலிகார் பகுதிக்கு அருகில் உள்ள கல்லூரியில் வணிக நிர்வாகப் பிரிவில் இளநிலை பட்டப்படிப்பில் சேர்ந்தார். அடுத்ததாக செமஸ்டர் கட்டணத்தை செலுத்துவதில் பிரச்சனை ஏற்பட்டது.

”என்னுடைய பெற்றோர் என்னுடைய செமஸ்டர் கட்டணத்தை கட்டுவதற்காக கடன் கொடுப்போரிடமிருந்தும் உறவினர்களிடமிருந்தும் பணத்தை இரவல் வாங்கினார்கள். என் பெற்றோர் மாதக்கணக்கில் நிலத்தில் அயராது உழைத்து அந்தப் பணத்தை திருப்பிச் செலுத்துவார்கள். நான் பட்டப்படிப்பை முடிக்கும் வரை சூழ்நிலை மிகவும் மோசமாகவே இருந்தது. நான் என்னுடைய உறவினர் வீட்டில் தங்கியிருந்தேன்,” என்றார்.

பட்டம் பெற்ற பிறகு 2011-ம் ஆண்டு மனோஜ் வேலை தேட ஆரம்பித்தார். 25க்கும் அதிகமான நிறுவனங்களுக்கு நேர்காணலுக்கு சென்றார். ஆனால் பணி கிடைக்கவில்லை. இவ்வாறு சில போராட்டங்களை சந்தித்த பிறகு நொய்டா சென்று 2,000 ரூபாய் மாத சம்பளத்தில் ஒரு வேலையில் சேர்ந்தார்.


ஆனால் மனோஜிற்கு இது திருப்தியளிக்கவில்லை.

“நான் கையில் பணமின்றி ரயில் நிலையத்தில் இருந்தேன். அங்கிருந்த கடை உரிமையாளர்களுக்காக வேலை செய்தேன். அவர்களுக்குத் தேவையான பொருட்களை டெலிவர் செய்தேன். எனக்கு கமிஷன் தொகை கிடைத்தது. சில நாட்களுக்குப் பிறகு என்னிடம் பணம் சேர்ந்ததும். குடும்பத்தை பராமரித்து சிறப்பாக வருவாய் ஈட்ட எம்பிஏ படிக்க முடிவு செய்தேன்,” என்று நினைவுகூர்ந்தார்.

மாற்றம்

இந்த முறை கல்லூரி கட்டணம் செலுத்த மனோஜ் தானே பணத்தை ஏற்பாடு செய்யவேண்டியிருந்தது. ஓரிரு வங்கிகளை அணுகினார்.

”ஆரம்பத்தில் வங்கி மேலாளர் ஒப்புதல் அளிக்கவில்லை. நான் தொடர்ந்து ஒரு மாதம் வங்கிக்கு சென்றதைப் பார்த்து எனக்குக் கல்விக் கடன் வழங்க ஒப்புதலளித்தார். இதற்கு என்னுடைய குடும்ப நிலத்தை அடமானம் வைத்தேன்,” என்றார்.

2014-ம் ஆண்டு எம்பிஏ முடித்த பிறகு கேம்பஸ் வேலை வாய்ப்பு கிடைத்தது. விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் பிரிவில் நல்ல சம்பளத்துடன்கூடிய பணி கிடைத்தது. ஆனால் மனோஜிற்கு இது திருப்தியளிக்கவில்லை. ஒன்றிரண்டு பணிகள் மாறிய பிறகு 2016-ம் ஆண்டில் இறுதியாக டெல்லிக்கு மாற்றலானார்.

3

பலர் சமூக நலனில் பங்களிக்க விரும்புகின்றனர் என்பதை அவரது பணியும் அனுபவமும் அவருக்கு உணர்த்தியது. துரதிர்ஷ்டவசமாக தேவையான வளங்களும் ஆதரவும் இல்லாத காரணத்தால் பல தனிநபர்களும் அரசு சாரா நிறுவனங்களும் தங்களது யோசனைகளை செயல்படுத்துவதிலும் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதிலும் சிரமங்களை சந்திப்பதை உணர்ந்தார்.

”நான் என்னுடைய கிராமத்திற்கு திரும்ப செல்லும்போதெல்லாம் பல இளைஞர்களிடம் ஆர்வம் இருப்பினும் முறையான ஆதரவு கிடைக்காமல் தவிப்பதைக் கவனித்திருக்கிறேன். ஒருவேளை உணவிற்கே இவர்களது பெற்றோர்கள் போராடுவதால் அடிப்படை கல்விகூட கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்,” என்றார்.

உதவிக்கரம்

ஆர்கானிக் விவசாயம் மற்றும் இதர திட்டங்களில் பணிபுரியும் பலருக்கு உதவி தேவைப்படுவதை மனோஜ் கவனித்தார். 2017-ம் ஆண்டு நொய்டாவில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யத் தொடங்கினார். இதில் சமூக நலனில் பங்களிப்போர் மேடையேறி தங்களது கதைகளைப் பகிர்ந்துகொண்டனர். அவரது பணியைத் தொடர்ந்தவாறே இத்தகைய நிகழ்வுகளை ஏற்பாடு செய்தார். உள்ளூர் அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்காக சிறியளவிலான நிகழ்வுகளை ஏற்பாடு செய்தார்.

”இது முறையாக நடைபெறவில்லை. இதை எப்படி முறைப்படுத்துவது என்பதில் எனக்கு தெளிவில்லை. 2018-ம் ஆண்டு என்னுடைய யோசனையை செயல்படுத்தி அதற்கு வடிவம் கொடுக்கக் கற்றுக் கொண்டதுதான் அனைத்திற்கும் ஆரம்பப்புள்ளியாக அமைந்தது,” என்றார்.

மனோஜ் ஏழு முதல் எட்டு நிகழ்வுகளை அடுத்தடுத்து ஏற்பாடு செய்தார். துறையில் இருந்தவர்களின் தொடர்பை பயன்படுத்தி கார்ப்பரேட் சமூக பொறுப்பு நடவடிக்கைகளின் தலைவர்களை தொடர்புகொள்ளத் தொடங்கினார். இதுவே ’சோஷியோ ஸ்டோரி’ உருவாக வழிவகுத்தது.


Clownselors, Aaroogya, Love Heals போன்றவை சோஷியோ ஸ்டோரியின் ஆன்லைன் தளம் வாயிலாக பங்கேற்ற அரசு சாரா நிறுவனங்கள் ஆகும். மனோஜ் விரைவில் தனது பணியை விட்டு விலகி சோஷியோ ஸ்டோரி உருவாக்கத் திட்டமிட்டார்.

”நாங்கள் அரசு சாரா நிறுவனங்களுக்கு ஆரம்பகட்ட உதவிகளை வழங்குகிறோம். குறைந்த கட்டணத்தில் சமூக பொறுப்பு நடவடிக்கைகள் தொடர்புடைய திட்டங்களைப் பெறுவது, வலைதளம் உருவாக்குவது, சட்ட ரீதியான உதவி போன்றவற்றை வழங்குகிறோம்,” என்றார்.

மாற்றத்தை ஏற்படுத்த விரும்புவோர்களுக்கு உதவும் வகையில் ’சோஷியோ ஸ்டோரி அகாடமி’ என்கிற பிரிவும் செயல்படுகிறது. சமூக நிறுவனங்கள் பிரிவில் காணப்படும் இடைவெளிகளை நிரப்பி வெற்றியடைய உதவுகிறது. ஸ்பான்சர்ஷிப் மூலம் இந்த நடவடிக்கைகளுக்கான நிதி ஏற்பாடு செய்யப்படுகிறது.


சோஷியோ ஸ்டோரி தளத்தில் ஒரு கதையை பகிர்ந்துகொள்ள நீங்கள் நாமினேஷன் பெறவேண்டும். ஒவ்வொரு காலாண்டிலும் சுமார் 500 நாமினேஷன்கள் பெறப்படுகிறது. அசோகா பல்கலைக்கழகத்தின் உறுப்பினர்கள், TEDx பேச்சாளர்கள் போன்றோர் அடங்கிய நிபுணர் குழுவால் இவை மதிப்பிடப்படுகிறது.


மதிப்பீடு முடிந்த பிறகு ஐந்து போட்டியாளர்கள் தங்களது கதைகளை பகிர்ந்துகொள்ள தேர்வு செய்யப்படுகின்றனர். இதில் வெற்றி பெறுபவர்கள் தங்களது யோசனைகளை பகிர்ந்துகொள்ளவும் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு தலைவர்களுடன் உரையாடவும் வாய்ப்பளிக்கப்படும்.


இதுவரை சோஷியோ ஸ்டோரி 2,400 கதைகளை பகிர்ந்துகொண்டுள்ளது. ஐந்து யோசனைகள் செயல்வடிவம் பெற உதவியுள்ளது.

வருங்காலத் திட்டம்

மனோஜ் முதலீட்டாளர் குழுவை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார். இந்தியா முழுவதும் உள்ள அரசு சாரா நிறுவனங்களை இணைத்துக்கொண்டு அவர்களுக்கு நிதி உதவி கிடைக்கவும் அவர்களது செயல்பாடுகள் வளர்ச்சியடையத் தேவையான ஆதரவு கிடைக்கவும் உதவவேண்டும் என திட்டமிட்டுள்ளார்.


உலகம் முழுவதும் சமூக நலனில் பங்களிக்கும், அதிகம் போற்றப்படாத ஹீரோக்களின் கதைகளை எடுத்துரைக்க விரும்புகிறார். இவர்களுக்கு சரியான முதலீட்டாளர்கள் கிடைக்கவும் ஊடக வெளிச்சம் பெறவும் ஆதரவளிக்க விரும்புகிறார்.


ஆங்கில கட்டுரையாளர்: கிருஷ்ணா ரெட்டி | தமிழில்: ஸ்ரீவித்யா


  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

Our Partner Events

Hustle across India