துணை கலெக்டரான துப்புரவுப் பணியாளர்: 40 வயதில் சாதனை படைத்த ஆஷா!
பலருக்கு உண்மையான உத்வேகம் ஆஷா!
ஜோத்பூர் மாநகராட்சியின் பெண் துப்புரவாளர் ஆஷா கந்தாரா சமீபத்தில் ராஜஸ்தான் நிர்வாகச் சேவை தேர்வில் தேர்ச்சி பெற்று அம்மாநில துணை கலெக்டராக பணியாற்ற இருக்கிறார்.
ஆஷாவின் வயது 40. 1997ல் இளம் வயதிலேயே திருமணம் செய்துகொண்டவர் ஆஷா. சில வருடங்கள் திருமண வாழ்க்கை நன்றாக சென்ற நிலையில், இவருக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தது. இந்தநிலையில் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, அவரின் கணவர் கைவிட இரண்டு குழந்தைகள் உடன் வாழ்க்கை போராட்டத்தை எதிர்கொள்ள தயாரானார் ஆஷா.
ஆஷாவின் தந்தை படித்தவர். அரசுத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கணவன் கைவிட்ட நிலையில் தனது தந்தை குடும்பத்துடன் இணைந்திருக்கிறார் ஆஷா. அப்போது அவரின் தந்தை மீண்டும் படிப்பை தொடங்குமாறு ஆஷாவை அறிவுறுத்த அதன்படி, அவரும் பட்டப்படிப்பை மேற்கொண்டுள்ளார்.
கல்லூரி படிப்பை முடித்தவர் அரசுப்பணிக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டுள்ளார். 2018ம் ஆண்டு நடந்த ராஜஸ்தான் மாநில அரசுப்பணி தேர்வில் கலந்துகொண்டுள்ளனர்.
இரண்டு கட்டங்களாக அந்த தேர்வில் கலந்துகொண்டிருக்கிறார். இந்தநிலையில் தான் கொரோனா தொற்றுநோய் ஏற்பட தேர்வு முடிவுகள் தாமதமாகி இருக்கிறது. அதேநேரம், தொற்றுநோய் அவரின் வருவாய் நிலையையும் கேள்விக்குறியாக்கி இருக்கிறது. இதையடுத்து ஒரு தீர்க்கமான முடிவை எடுத்திருக்கிறார் ஆஷா. அது அவரின் தாயுடன் சேர்ந்து துப்பரவுப் பணிகளில் ஈடுபவது என்பது. ஜோத்பூர் மாநகராட்சியில் தூய்மை பணியாளராக தனது தாயுடன் இணைந்து பணியாற்றி வந்துள்ளார் .
இந்தநிலையில் சில தினங்கள் முன் 2018ல் அவர் எழுதிய தேர்வின் முடிவுகள் வெளியாகியது. இதில் நல்ல மதிப்பெண்கள் பெற, தற்போது துணை கலெக்டராக பணியாற்ற இருக்கிறார். முன்னதாக, சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு தயாராக திட்டமிட்டு இருந்துள்ளார் ஆஷா. ஆனால் அவரின் வயது வரம்பு அதிகமாக இருக்க, அந்த முடிவை விடுத்து மாநில அரசுத் தேர்வுகளில் கலந்துகொண்டுள்ளார். சிங்கிள் மதராகவும், தூய்மை பணியாளராகவும், நிறைய கேலிகளை மக்களிடம் இருந்து எதிர்கொண்டவர் ஆஷா.
தனக்கு நேர்ந்த விமர்சனங்களையும், கேலிகளையும் உந்துதலாக மாற்றி, அந்த விஷயங்கள் எதுவும் வெற்றிக்கு தடையல்ல என்பதை தற்போது நிரூபித்து இருக்கிறார். இந்த வெற்றிப்பயணம் தொடர்பாக ஆஷா பேசுகையில்,
“இது ஒரு கடினமான பயணம். இதில் நான் நிறைய கஷ்டங்களை எதிர்கொண்டுள்ளேன். இப்போது நான் ஒரு நிலையில் இருப்பதாகக் கருதுகிறேன், அங்கு வறியவர்களுக்கும் அநீதிக்கு உள்ளாக்கப்பட்டவர்களுக்கும் ஏதாவது செய்ய விரும்புகிறேன்," என்றுள்ளார்.
ஆஷா பலருக்கு உண்மையான உத்வேகம். நீங்கள் அர்ப்பணிப்பு மற்றும் மன உறுதியுடன் பணிபுரிந்தால் எந்த சவாலும் பெரிதாக இல்லை என்பதற்கு அவள் தற்போது ஒரு சான்று என்பது மறுப்பதற்கில்லை!
தகவல் உதவி: இண்டியா டைம்ஸ் | தமிழில்: மலையரசு