டைம் இதழின் ‘100 செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியல் 2021’ - மோடி, மம்தா இடம்பிடிப்பு!
தலிபான் தலைவரும் இடம்பிடித்தார்!
ஆண்டுதோறும் உலகின் செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியலை வெளியிடும் அமெரிக்காவின் டைம் இதழ், 2021ஆம் ஆண்டிற்கான உலகின் செல்வாக்கு மிகுந்த 100 பிரபலங்கள் பட்டியலை தற்போது வெளியிட்டிருக்கிறது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ், சீன அதிபர் ஷி ஜிங்பிங், முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் போன்ற பலர் இந்தப் பட்டியலில் இடம் பிடித்திருக்கின்றனர்.
இதே பட்டியலில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடம்பிடித்துள்ளார். மேலும், இந்தியாவில் நேரு, இந்திரா காந்திக்கு பிறகு உருவான மிகப்பெரிய அரசியல் சக்தி மோடி என்று குறிப்பிட்டு இருப்பதுடன், மோடி மீது கடுமையான விமர்சனங்களையும் டைம் இதழ் முன்வைத்திருக்கிறது.
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் இந்த பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார். அவரை பற்றி குறிப்பிட்டுள்ள டைம் இதழ்,
ஆண்கள் ஆதிக்கம் மிகுந்த சமூகத்தில் தனது திறமையை நிரூபித்த ஒரு அச்சமில்லாத அரசியலின் முகம் என்று கூறியுள்ளது. இவர்களைத் தாண்டி மற்றொரு இந்தியர் இந்தப் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார். அவர் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தலைமை செயல் அதிகாரி அதார் பூனாவாலா.
நான்காம் இந்தியராக டைம் பட்டியலில் இடம்பிடித்துள்ளவர், மஞ்சுஷா பி குல்கர்னி என்பவர். விளையாட்டு வீரர்கள், நடிகர்கள், ஆர்வலர்கள் முதல் வழக்கறிஞர்கள் வரை அனைத்துத் தரப்பு மக்களையும் கலந்த சின்னங்களின் பிரிவில் மஞ்சுஷா பி குல்கர்னி இடம்பெற்றுள்ளார்.
மஞ்சுஷா பி. குல்கர்னி (மஞ்சு) ஆசிய பசிபிக் கொள்கை மற்றும் திட்டமிடல் கவுன்சிலின் (A3PCON) நிர்வாக இயக்குனர் ஆவார். பிறப்பால் இந்தியராக இருந்தாலும் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் உள்ள 1.5 மில்லியன் ஆசிய அமெரிக்கர்கள் மற்றும் பசிபிக் தீவுவாசிகளுக்கு சேவை செய்யும் மற்றும் பிரதிநிதித்துவப்படுத்தும் நாற்பதுக்கும் மேற்பட்ட சமூக அடிப்படையிலான அமைப்புகளின் கூட்டணி இதுவாகும்.
இதில் இன்னொரு ஆச்சயர்யமாக தலிபானின் இணை நிறுவனர் முல்லா அப்துல் கனி பரதர் இந்தப் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார். அவரை பற்றிய குறிப்பில் அவர் ஒரு அமைதியான, இரகசியமான மனிதர் என்றும், பொது அறிக்கைகள் அல்லது நேர்காணல்களை அரிதாகவே கொடுக்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதே பட்டியலில் ஆப்பிள் சிஇஓ டிம் குக், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், இளவரசர்கள் ஹாரி மற்றும் மேகன் போன்றோரும் இடம்பிடித்துள்ளனர்.
தகவல் உதவி: டைம் | தொகுப்பு: மலையரசு