'நோ கோட்’ புரட்சி - ஸ்டார்ட் அப்'கள் சுலபமாக ஆப் உருவாக்க உதவிடும் 5 முன்னணி No Code டூல்கள்!

தொழில்முனவோர்களும், நிறுவனங்களும் தங்கள் செயலி உருவாக்க செயல்முறையை வேகமாக்கி, எளிதாக நிறைவேற்ற ’நோ கோடு’ சேவைகள் உதவுகின்றன.

'நோ கோட்’ புரட்சி - ஸ்டார்ட் அப்'கள் சுலபமாக ஆப் உருவாக்க உதவிடும் 5 முன்னணி No Code டூல்கள்!

Monday November 20, 2023,

3 min Read

மிகையாக பேசப்படுகிறதோ இல்லையோ, ’நோ கோட்’ (no-code) சாதனங்கள் பிரபலமாகி இருக்கின்றன. இவற்றின் ’டிராக் அண்ட் டிராப்’ செயல்பாடே இதற்குக் காரணம்.

புரோகிராமிங் அல்லது கம்ப்யூட்டர் அறிவியலில் வல்லுனராக இல்லாமலேயே பயனாளிகள், மொபைல் செயலிகள், தரவு பட்டியல், இணையதளங்கள் போன்றவற்றை உருவாக்க இவை உதவுகின்றன.

ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் புதிதாக செயலிகளை உருவாக்கிக் கொள்ள உதவும் 5 முன்னணி நோ கோட் டூல்கள்:

செயலி

முன்னணி 5 ’நோ கோட்’ செயலி சேவைகள்

கிளைடு (Glide)

நோ கோட் செயலிகளை உருவாக்க உதவும் ஏஐ சார்ந்த மேடையாக Glide விளங்குகிறது. 400க்கும் மேற்பட்ட டெம்பிளேட்கள், பாடத்திட்டங்கள், வீடியோ பாடங்கள், வல்லுனர்கள் வழிகாட்டுதல் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது. மேலும், பயனாளிகள் தங்கள் செயலிகளை நிறுவி சோதித்துப்பார்க்கலாம். அதிக சிக்கல் இல்லாமல் மொபைல் சேவைகளை உருவாக்கிக் கொள்வதற்கான மேடை இது. இலவச மற்றும் கட்டண சேவைகள் உள்ளன. கட்டண சேவை மாதம் 25 டாலர் முதல் 249 டாலர் வரை ஆகிறது.

சாப்டர் (Softr)

பிரி மேட் பிளாக் அல்லது அம்சங்கள் கொண்ட செயலிகளை உருவாக்க விரும்பும் வர்த்தகங்களுக்கு ஏற்ற சேவை Softr. டேபில்கள், சார்ட் போன்ற செயல்பாடு தன்மை கொண்ட பிளாக்குளை அளிக்கிறது. இவற்றை புதிதாக உருவாக்கிக் கொள்ளாமலே சேவையில் இணைத்துக் கொள்ளலாம்.

மேலும், இந்த சேவை கூகுள் ஷீட்ஸ் மற்றும் ஏர்டேபிலில் இருந்து தரவுகளை எடுத்துக்கொள்ள உதவுகிறது. அதே போல, நிறுவனங்கள் செயலிகளுக்கான அணுகல் வசதியை கட்டுப்படுத்தி, எந்த சாதனத்தில் இருந்தும் எளிதாக வழங்கலாம். இலவச சேவை மற்றும் கட்டண சேவை உள்ளன. (மாதம் 49 டாலர் முதல்).

ஸ்டேக்கர் (Stacker)

செயல்பாடுகளை சீராக்க சொந்த செயலி தேவைப்படும் ஸ்டார்ட் அப்களுக்கு Stacker பயனுள்ளதாக இருக்கும். இந்த சேவை, ஷாப்பிஃபை, ஸ்டிரைப், ஹப்ஸ்பாட், ஜேப்பியர் உள்ளிட்ட சேவைகளுடன் ஒருங்கிணைத்து தானியங்கிமயத்தை எளிதாக்குகிறது. கூகுள் ஷீட்ஸ் அல்லது ஏர்டேபில் தரவுகளை இணைக்கலாம். கூட்டு முயற்சியையும் எளிதாக்குகிறது.

அனைத்து கட்டண சேவைகளுக்கும் 30 நாள் இலவச பரிசோதனை திட்டம் உள்ளது. சிறிய நிறுவனங்களுக்கு மாதம் 59 டாலர் என கட்டணம் துவங்குகிறது.

பபில் (Bubble)

கோடிங் தொடர்பான எந்த தொழில்நுட்பத் திறனும் இல்லாமலே இணைய செயலிகளை உருவாக்க வழி செய்யும் விஷுவல் புரோகிராமிங்காக bubble விளங்குகிறது. தங்கள் மேடை மூலம் பயனாளிகள், ஏர்பின்பி மற்றும் ஃபேஸ்புக் போன்ற சேவைகளை உருவாக்கலாம் என பபில் தெரிவிக்கிறது.

வடிவமைப்பின் வளைந்து கொடுக்கும் தன்மை மற்றும் பல மொழிகளில் சேவையை உருவாக்குவது இதன் தனித்தன்மை அம்சங்களில் ஒன்றாக அமைகிறது. கூகுள் அனல்டிக்ஸ் போன்றவற்றை ஒருங்கிணைப்பதற்கான வாய்ப்பு, வலுவான வாடிக்கையாளர் பரப்பை உருவாக்கி அதை தொடர்ந்து பராமரிக்க உதவுகிறது.

பிராவோ ஸ்டுடியோ (Bravo Studio)

வடிவமைப்பிற்காக பிக்மா சேவையை பயன்படுத்தும் நிறுவனங்கள் என்றால், பிராவோ ஸ்டுடியோ ஒரு சில கிளிகளில் செயலிகளை உருவாக்க உதவுகிறது. வடிவமைப்பு மற்றும் ஸ்டைல் தொடர்பாக பல அம்சங்களை அளிக்கிறது. சார்ட், வரைபடம், ஆக்‌ஷன் பட்டன், கியூஆர் கோட் உள்ளிட்டவை இதில் அடங்கும்.

தொழில்முனைவோர் மற்றும் வர்த்தகங்கள் தங்களுக்கான செயலிகளை உருவாக்கி அறிமுகம் செய்யலாம். இலவச துவக்க சேவை மற்றும் கட்டண சேவை உள்ளது. கட்டண சேவை தனிநபர்களுக்கு மாதம் ரூ.23 டாலர் மற்றும் நிறுவனங்களுக்கு 424 டாலர் என துவங்குகிறது.

No code

நோ கோட் பலன்கள்

எளிய பயன்பாடு

நோ கோட் சேவைகளை பயன்படுத்த கோடிங் அல்லது தொழில்நுட்ப திறன் தேவையில்லை. இதன் டிராக் அண்ட் டிராப் அம்சம் பயன்படுத்த எளிதானது. மேலும் புதிய செயலியை உருவாக்க மாதக்கணக்கில் ஆகலாம் எனும் நிலையில், இந்த முறை செயலி உருவாக்கத்தை வேகமாக்குகிறது.

கூட்டு முயற்சி அம்சங்கள்

பொதுவாக, செயலிகள் உருவாக்கம் ஐடி துறையால் மேற்கொள்ளப்படுகிறது. நோ கோட் சேவைகள் பல்வேறு துறைகள் இணைந்து செயல்படும் வகையில் கூட்டு முயற்சி அம்சங்களை அளிக்கிறது. இதன் மூலம் குழுக்கள் புதுமையான எண்ணங்களை எளிதாக செயல்படுத்தலாம்.

செலவு குறைவு

ஸ்டார்ட் அப்'களுக்கு பட்ஜெட் மற்றும் நிதி திட்டமிடல் சவாலாக அமையலாம். எனவே, ஐடி வல்லுனர்களை பணிக்கு அமர்த்துவது செலவு மிக்கதாக அமையலாம். ஆனால், நோ கோட் சேவை மூலம் செலவு குறைந்த முறையில் செயலிகளை உருவாக்கலாம்.

பயன்பாடு

கோடிங் உருவாக்க வேண்டாம் என்பதால், எத்தனை முறை வேண்டுமானால் மாற்றி அமைத்துக்கொள்ளலாம். இந்த வளைந்து கொடுக்கும் தன்மை சந்தை போக்கு மற்றும் இலக்கு வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற மாற்றங்களை செய்ய உதவும்.

கோடிங் எழுதாமல் செயலிகளை உருவாக்க ஸ்டார்ட் அப்களுக்கு உதவும் அடுத்த தலைமுறை தீர்வாக நோ கோட் செயலி உருவாக்க சேவைகள் அமைகின்றன. இந்த சேவைகள் மூலம் நிறுவனங்கள், தொழில்முனவோர் தங்கள் செயலிகளை உடனடியாக அறிமுகம் செய்யலாம்.

தொகுப்பு: சைபர் சிம்மன்


Edited by Induja Raghunathan