தமிழின் தலைசிறந்த ஆண் யூட்யூபர்கள்! - ஓரு பட்டியல்
களம் எதுவாக இருந்தாலும் தன் அடையாளத்தை பதிவுசெய்து தனக்கென தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கி அதையே தம் விசிட்டிங் கார்டாக மாற்ற ஒரு சிறந்த ப்ளாட்ஃபார்மாக இருப்பது, யூடியூப். இதுவரை யூடியூப் தளத்திலிருந்து நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், சமையல்கலை நிபுணர்கள், விஞ்ஞானிகள் என பல திறமைகளை மக்கள் கண்டறிந்துள்ளனர்.
பொதுவெளியில் ஒரு யூடியூப் சேனலின் வெற்றி விகிதம் அதை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை மட்டும் வைத்தே கணக்கிடப்பட்டுவருகிறது. வெற்றி என்பது எண்கள் சார்ந்து இயங்குபவை அல்ல. இதைக் கருத்தில் கொண்டு, எடுத்துக்கொண்ட கன்டண்டிற்கு தன் மனதளவில் நேர்மையாக இயங்கிவரும் சில சேனல்களையும் அதன் நடத்தும் யூடியூபர்களையும் பற்றிய ஒரு தொகுப்பு இது!
JUMP CUTS ஹரி பாஸ்கர்:
நண்பர்கள் நரேஷ் மற்றும் ஹரி பாஸ்கர் இருவரால் ஃபேஸ்புக்கில் தொடங்கப்பட்டது தான் ’ஜம்ப் கட்ஸ்’ சேனல். அதன் அதிரடி வரவேற்பால் 2016 நவம்பரில் யூடியூப் பக்கம் வந்தனர். இந்த சேனலில் வெளியாகும் காமெடி மற்றும் அரசியல் கண்டண்ட்களை ரசிகர்கள் கொண்டாட முக்கியக் காரணம், ஆல் இன் ஆல் ஹரி பாஸ்கர்.
அத்தனை பாத்திரங்களையும் தானே ஏற்று நடித்து, வெரைட்டி காண்பிப்பார். இதுவே இந்த சேனலின் ஹைலைட். மற்ற யூடியூப் சேனல்களிலிருந்து மாறுபட்டு தனித் தன்மையோடு வளர்த்தெடுக்க உதவியது. பின்னர் இதே டெக்னிக்கில் முளைத்த பல சேனல்கள் காணாமல் போயின. எதுக்கு! எனும் இந்த ஒரு வார்த்தை அனைத்து யுவன் யுவதிகள் மத்தியிலும் இன்னமுமே டிரெண்டிங்காக இருக்கிறது! இந்த டீம் விரைவில் வெள்ளித்திரை வர வாழ்த்துக்கள்.
இந்த சேனலின் மொத்த சப்ஸ்கிரைபர்ஸ் -1.6 மில்லியன். மொத்த வ்யூக்கள் - 145,488,938.
சேனல் லிங்க் இங்கே.
VILLAGE FOOD FACTORY:
கோபிநாத் மற்றும் மணிகண்டனால், தங்கள் அப்பா ஆறுமுகத்தை வைத்து, திருப்பூர் அருகே எடுக்கப்படும் சமையல் வீடியோக்கள் இளைஞர்கள் மத்தியில் ஹிட். நாம் எவ்வளவோ சமையல் நிகழ்ச்சிகள் பார்த்திருக்கிறோம் அவை அனைத்தும் சின்ன அறையிலோ, அமைக்கப்பட்ட செட்டிலோ, இசை சேர்த்து ஸ்லோ மோஷன் செய்து ஒரு தட்டிற்கு அளவாக செய்துகாட்டப்படும்.
ஆனால், காடு, கம்மாய், வயல்வெளிகள் சென்று பெரிய பாத்திரங்களில் பல உள்ளங்களுக்கு சமைக்கும் நள்ளுள்ளமாக அய்யா ஆறுமுகம் இடம்பெறுவதை மினிமம் எடிட்டிங்கில் மிக அருகே அடுப்பின் வெப்பத்தை காட்டியதுதான் இந்த சேனல் ஹிட்டடிக்க முக்கியக் காரணி.
மணிகண்டனுக்கு மீடியா பிடிக்கும் என்பதால் செய்யும் வேலையை விரும்பி ரசித்து (ருசித்து) செய்வதால் இடைவெளியின்றி தொடர்ந்து வீடியோக்கள் கொடுக்க முடிகிறது. Lemon chicken, Christmas turkey, Korean chicken, kfc chicken wings என்று அன்னிய நாட்டு உணவு எது செய்தாலும் அதில் நம்மூர் தன்மையை இயல்பாய் கலந்து பெரிய வாழை இளைகளில் சிறுவர் சிறுமியருக்கு பரிமாறும் பண்பே அன்பு!
இந்த சேனலின் மொத்த சப்ஸ்கிரைபர்ஸ் -2.9 மில்லியன்; மொத்த வ்யூக்கள் 525,820,067 views.
சேனல் லிங்க் இங்கே.
LMES :
கரண்ட் கம்பியில் உட்காரும் காக்காவிற்கு ஏன் ஷாக் அடிப்பதில்லை…? இதற்கு பதில் ஒரு எஞ்சினியரால் சொல்ல முடியும் என்றால் அவருக்கு வேலை கிடைக்கும் தானே? இன்னும் நாம் அறிந்திராத பல சுவாரசியமான அறிவியல் விஷயங்களை விளக்குகிறார்கள் lmes channel. ஒரு யோசனையும் இல்லாமல் தேர்ந்தெடுத்துவிட்டதாக தோன்றும் பொறியியல் படிப்பை சுவாரசியமான பரிசோதனைகளைக் கொண்டு எளிமையாக்கவே கடந்த ஐந்தாண்டுகளாக இந்த சேனலை நடத்தி வருகிறார் பிரேமானந்த சேதுராஜன். இவர் நாசா உட்பட அமெரிக்காவில் இருக்கும் பல பிரபல நிறுவனங்களில் எட்டு வருடம் வேலை செய்திருக்கிறார்.
பிறகு, இந்தியாவிற்கு என எதாவது செய்ய வேண்டும் எனத் தோன்றவே, நாடு திரும்பி கல்வித்துறையில் இயங்கத் தொடங்கினார். அறிவியல் ரீதியாக மக்களிடம் நிலவும் குழப்பங்களை தீர்த்து வைக்கும் உரையாடல் தளமாகவும் இந்த சேனல் இருப்பது பெரிய பங்களிப்பு தான்.
இந்த சேனலின் மொத்த சப்ஸ்கிரைபர்ஸ் - 760,586, இந்த சேனலுக்கு இருக்கும் மொத்த வ்யூக்கள் - 35,994,207
சேனல் லிங்க் இங்கே.
IRFAN’S VIEW
உலகம் முழுக்கவே ‘பக்கத்து வீட்டு பையன்’ இமேஜிற்கு அதிகம் ரசிகர்கள் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள். யூட்யூபில் இருக்கும் அப்படி ஒரு பக்கதுவீட்டு பையன் பிரபலம் தான் இர்ஃபான். இர்ஃபான்’ஸ் வ்யூ சேனல், ட்ராவல் மற்றும் ஃபுட் ப்ளாக்கிங் சேனல். மிக இயல்பான உரையாடல்களோடு, தன்னுடைய ஸ்டைல் என ஒன்றை நிறுவியிருக்கிறார்.
சக நண்பர்களோடு பேசுவதோ, அல்லது ஹோட்டலில் பணிபுரிபவர்களிடம் பேசுவதோ, ரோட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்களோடு பேசுவதோ – எதுவாக இருந்தாலும் தயக்கங்கள், முன்முடிவுகள் எதுவும் இல்லாமல் அணுகி, ஒரு எளிய சூழலை பார்வையாளர்களுக்கு வழங்குகிறார்.
ரோட்டில் நடந்து செல்பவர்கள் எல்லாம் அடையாளம் கண்டு கொண்டு செல்ஃபி எடுக்க கேட்கிறார்கள் என்றாலும், பெருமிதங்கள் இல்லாத தோற்றத்தில் இருப்பது கூட பார்வையாளர்களுக்கு இர்ஃபானை பிடித்துப் போகக் காரணமாக இருக்கலாம்.
இர்ஃபான்ஸ்’ வ்யூ சேனலுக்கு இருக்கும் மொத்த சப்ஸ்கிரைபர்கள் - 317,372 ; மொத்த வ்யூக்கள் - 52,644,274.
சேனல் லிங்க் இங்கே.
NOTHING BUT CRICKET :
உள்ளூரில் கிரிக்கெட் விளையாடும் சிறுவர்களுக்கு க்ரிக்கெட் கமெண்டரி தொனியில் பேசுபவர்கள் எல்லாரும் ஒரு க்ரிக்கெட் கோச் மாதிரியே தெரிவார்கள். அவர்கள் சொல்லும் தகவல்கள் எல்லாம் ஒரு பெரிய ஸ்பார்க்கை கிளப்பிவிடும். அடுத்த நாள் மட்டையை தூக்கிக்கொண்டு ஹெலிகாப்டர் ஷாட் ஆட கிளம்பிவிடுவார்கள். இந்த உணர்வை புரிந்து கொண்டவர் கணேஷ்.
பதினான்கு பதினாறு வயதிற்குட்பட்ட தகுதிப் போட்டிகளில், தமிழ்நாடு சார்பாக விளையாடிய கணேஷ் முன்னெடுத்துள்ள ஒரு பெரிய முயற்சியே nothing but cricket சேனல் . 232,656 subscriber களை கொண்டுள்ள இந்த channel மூலம் தன்னுடைய க்ரிக்கெட் அனுபவத்தை எளிமையாக கற்றுத்தருகிறார்.
நாம் தினமும் பார்க்கும் ஒரு விளையாட்டின் அடிப்படைகளையும், அதன் ரகசியங்களை, நுட்பங்களையும் எளிதாகக் கற்றுகொள்ளும் ஒரு வாய்ப்பாக இந்த சேனல் அமைந்துள்ளதே இதன் வெற்றிக்குக் காரணம். ஹெலிகாப்டர் ஷாட், தூஸ்ரா, கூக்லி என ஒவ்வொரு க்ரிக்கெட் ஷாட்டும், தெரு கிரிக்கெட் பிள்ளைகளுக்கும் சாத்தியப்படும். இந்த சேனலுக்கு இருக்கும் மொத்த வ்யூக்கள் - 8,693,743.
சேனல் லிங்க் இங்கே.