ஆரோக்கியத்தை மீட்க கார்ப்பரேட்டை கைவிட்ட கிருத்திகா- ஆர்கானிக் பொருட்களில் மாதம் 5 லட்சம் வர்த்தகம்!
சென்னையைச் சேர்ந்த கிருத்திகா பிரபாகரன் 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் ‘ஆர்கானிக் பாசிடிவ்’ தொடங்கி பாரம்பரிய அரிசி வகைகள், சிறுதானியங்கள், ஆர்கானிக் மளிகைப் பொருட்கள் போன்றவற்றை ஆன்லைனில் விற்பனை செய்து வருகிறார்.
காலச்சக்கரம் தொடர்ந்து சுழன்றுகொண்டேதான் இருக்கிறது. வளர்ச்சி என்கிற பெயரில் நம்மை அறியாமல் ஒரு புதிய வாழ்க்கைமுறையை நாம் உருவாக்கி பின்பற்றி வருகிறோம். இந்த அசுர வளர்ச்சியின் பின்னால் எத்தனையோ நல்ல பழக்கவழக்கங்கள் மறைந்தும் மறந்தும் போய்விட்டன.
இதன் பாதிப்புகளை மெல்ல உணர ஆரம்பித்ததும் நம் முன்னோர்கள் பின்பற்றிய வாழ்க்கை முறையை அண்ணாந்துப் பார்த்து வியந்து வருகிறோம். இப்படித்தான் வியந்துள்ளார் கிருத்திகா.
முந்தைய தலைமுறையினர் இயற்கையான உணவை சாப்பிட்டார்களே? உணவே மருந்து என்கிற கோட்பாட்டைப் பின்பற்றி நோயற்ற வாழ்க்கையை வாழ்ந்தார்களே? வெயில், மழை எதையும் பொருட்படுத்தாமல் எத்தனை தூரம் நடந்து சென்றிருக்கிறார்கள்? எத்தனை உடல் உழைப்பு? பிசிஓடி, ஹார்மோன் சமமின்மை என எந்தவித பிரச்சனையும் இல்லாமல் எத்தனை குழந்தைகள் பெற்றெடுத்தார்கள்? ஆயுட்காலமும் அதிகமாக அல்லவா இருந்தது?
கிருத்திகாவின் வயிற்றில் கரு உருவான அதேசமயம் இவரது சிந்தனையிலும் இயற்கையோட ஒன்றிய வாழ்க்கைக்கான தேடலின் கருவும் உருவாக்கியுள்ளது.
குழந்தையின் எதிர்காலம் பற்றிய சிந்தனை கடந்த காலத்தை நோக்கி திசைதிருப்பியுள்ளது.
”இன்னைக்கு நாம சந்திக்கற பல பிரச்சனைகளுக்குக் காரணம் பழைய பழக்க வழக்கங்களை மறந்ததுதான். உணவு, வாழ்க்கைமுறை இப்படி எல்லாத்தையும் மறந்துட்டோம். அதுக்கு நமக்குக் கிடைச்ச பரிசு ஆரோக்கியமற்ற வாழ்க்கை,” என்கிறார் கிருத்திகா.
மக்களின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக 2020ம் ஆண்டு ஜூன் மாதம் 17-ம் தேதி ‘ஆர்கானிக் பாசிடிவ்’ தொடங்கியுள்ளார். இதன் மூலம் பாரம்பரிய அரிசி வகைகளையும் ஆர்கானிக் மளிகைப் பொருட்களையும் பாரம்பரிய அரிசி மற்றும் தானியங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் மதிப்பு சேர்க்கப்பட்ட பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்கிறார். சென்னை கொளத்தூரில் இருந்து 10 பேர் கொண்ட குழுவாக செயல்பட்டு வருகிறார்.
கிருத்திகாவின் பின்னணி
கிருத்திகா பிரபாகரன் சென்னையைச் சேர்ந்தவர். 2012-ம் ஆண்டு ECE பொறியியல் முடித்துள்ளார். இரண்டு ஆண்டுகள் வரை ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றில் வேலை செய்துள்ளார். பிறகு எம்என்சி நிறுவனத்தில் வேலை செய்துள்ளார்.
2015-ம் ஆண்டு திருமணம் முடிந்தது. அந்த சமயத்தில் கோவையில் Bosch நிறுவனத்தில் வேலையில் இருந்தார். கணவர் சென்னையில் இருந்ததால் 2016-ம் ஆண்டு சென்னை வந்துள்ளார். அதே ஆண்டு ஹெச்சிஎல் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
“ஒரு கட்டம் வரைக்கும் எனக்கும் ஆர்கானிக் உணவு பத்தியெல்லாம் எதுவுமே தெரியாது. எல்லாரையும் போல நார்மலாவே லைஃப் போயிட்டிருந்துது. 2016 அக்டோபர் மாசம் கன்சீவ் ஆனேன். அதுக்கப்புறம்தான் எல்லாமே மாறிடுச்சு,” என்கிறார் கிருத்திகா.
அவர் மேலும் கூறும்போது,
“நம்மைச் சுத்தி இருக்கற பெரும்பாலான மக்களுக்கு உடம்புல ஏதோ ஒரு பிரச்சனை இருக்கற நிலைமையில நம்ம குழந்தையை எப்படி ஆரோக்கியமா வளர்க்கலாம்ன்னு யோசிச்சேன்,” என்கிறார்.
வாழ்க்கைமுறை மாற்றம் – ஆர்கானிக் தேடல்
கிருத்திகா கர்ப்பமாக இருந்தபோது வெள்ளை நிற சர்க்கை, மைதா போன்ற உணவு வகைகள், ரீஃபைன்ட் ஆயில், ஜங்க் ஃபுட் போன்றவற்றைத் தவிர்த்துள்ளார். வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள முயற்சி எடுத்துள்ளார்.
கிருத்திகா இயற்கையான முறையில் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். குழந்தை பிறந்ததும் மூச்சுத் திணறல் பிரச்சனை ஏற்பட்டது. குழந்தை NICU-வில் அனுமதிக்கப்பட்டது. குழந்தை நார்மலான எடையைவிட குறைவாகவே இருந்துள்ளது.
“குழந்தை பிறந்து ஆறு மாசம் ஆச்சு. இணை உணவு தொடங்க வேண்டியிருந்தது. ராகி பால், ஆர்கானிக் கடைகள்ல காய்கறி, பழங்கள் இப்படி ஒவ்வொண்ணையும் தேடித்தேடி கொடுக்க ஆரம்பிச்சேன். அப்போதான் என்னோட ஆர்கானிக் தேடல் ஆரம்பமாச்சு,” என்கிறார்.
பாரம்பரிய அரிசி வகைகள்
அரிசி உணவை குழந்தைக்கு முதன் முதலாக அறிமுகப்படுத்தியபோது கிருத்திகாவின் நண்பர் ’நவரா’ என்கிற அரிசி வகையைப் பரிந்துரைத்துள்ளார்.
”எனக்கு அரிசி வகைகளை பத்தியெல்லாம் பெரிசா தெரியாது. அவங்க சொன்ன நவரா அரிசி பாரம்பரிய கேரளா அரிசி வகையை சேர்ந்தது. மருத்துவ குணம் நிறைஞ்சது. ஆனா எங்க தேடியும் அது எனக்குக் கிடைக்கலை. ஆர்கானிக் கடையில மாப்பிள்ளை சம்பா அரிசி கிடைச்சுது. முதல்ல அதைத்தான் கொடுத்தேன். அடுத்த மாசம் செங்கல்பட்டு சிறுமணி கொடுத்தேன். இப்படி ஒவ்வொரு மாசமும் ஒவ்வொரு அரிசி வகையை குழந்தைக்குக் கொடுத்தேன்,” என்கிறார்.
அரிசி வகை புதிது என்பதால் அதை சமைப்பதில் சிரமத்தை சந்தித்துள்ளார். சில அரிசி வகைகள் எளிதில் வேகாது. அதை சமைக்கும் விதம் தெரியாமல் கஷ்டப்பட்டுள்ளார். அதுபோன்ற அரிசியை உடைத்து குருணை போல் தயாரித்து பருப்பு காய்கறி சேர்த்து சமைத்து குழந்தைக்குக் கொடுத்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக கிருத்திகாவும் அவரது கணவரும் அரிசி வகைகள் குறித்து தெரிந்துகொள்ள ஆரம்பித்துள்ளார். `அரிசி திருவிழா’ நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்கள்.
குழந்தைக்குக் கொடுத்த ஆரோக்கியமான, பாரம்பரிய அரிசி வகைகளை நாமும் சமைத்து சாப்பிடலாம் என்று கிருத்திகாவின் கணவர் பரிந்துரைத்துள்ளார்.
“குழந்தைக்காக ஆரம்பிச்ச தேடல் எங்களையும் ஆரோக்கியமான பாதையில பயணிக்க வெச்சுது. எங்ககிட்ட நல்ல மாற்றத்தை உணர முடிஞ்சுது,” என்கிறார்.
இன்று மக்களிடையே இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை சோர்வு. வெகு சீக்கிரம் சோர்ந்து விடுகிறோம். இதுகுறித்து அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்தார்.
“எங்கப்பாகூட நாங்க எல்லாரும் வண்டலூர் உயிரியல் பூங்கா போயிருந்தோம். எல்லாரும் டயர்ட் ஆயிட்டோம். நடக்கவே முடியலை. மூச்சு வாங்கிச்சு. ஆனா அப்பா மட்டும் கொஞ்சம்கூட சோர்ந்து போகவே இல்லை. அவர் சாப்பிட்ட ஆரோக்கியமான உணவுதான் அவரோட சுறுசுறுப்புக்கான சீக்ரெட்,” என்கிறார்.
கிருத்திகாவும் அவரது கணவரும் உணவுமுறையை மாற்றிய பிறகு உடல் சுறுசுறுப்பாக இருப்பதையும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்ததையும் உணர்ந்துள்ளனர். குழந்தையும் ஆரோக்கியமாகவே வளர்ந்துள்ளார்.
தொழில் முயற்சியின் ஆரம்பக்கட்டம்
2017-ம் ஆண்டு குழந்தை பிறந்தது. 2018-ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் கிருத்திகாவின் மகப்பேறு விடுப்பு முடிந்துள்ளது. வேலையில் சேரவேண்டும். அந்த காலகட்டத்தில்தான் நம்மைப் போலவே மற்றவர்களும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்கு மாற உதவலாம் என்கிற எண்ணம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே தொழில்முனைவில் ஆர்வம் இருந்த கிருத்திகா வேலையை விட்டுவிட்டு பாரம்பரிய அரிசி வகைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்களிடம் கொண்டு சேர்க்க முடிவெடுத்துள்ளார்.
பாரம்பரிய அரிசி வகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இட்லி, தோசை மாவு விற்பனை செய்வதே ஆரம்பகட்ட முடிவாக இருந்தது. கிருத்திகா மே மாதம் விரிவான பிராஜெக்ட் தயார் செய்தார். PMEGP திட்டத்தில் விண்ணப்பித்தார். 6 மாதங்கள் காத்திருந்தும் பலனில்லை. அதன் பிறகு New Entrepreneur cum Enterprise Development Scheme (NEEDS) மூலம் விண்ணப்பித்துள்ளார்.
இதில் லோன் கிடைக்க ஓராண்டு ஆகியுள்ளது. இடப்பற்றாக்குறை காரணமாக லோன் கேன்சல் ஆனது. பிறகு அம்பத்தூரில் ஒரு லீஸ் முறையில் ஒரு இடம் எடுத்து இயந்திரங்கள் அமைத்து எல்லாம் தயாராவதற்குள் 2 ஆண்டுகள் ஓடிவிட்டன. இதற்கிடையில் கொரோனா பரவத் தொடங்கியதால் அனைத்து திட்டங்களுக்கும் சடன் பிரேக்!
தயாரிப்பு வகைகள்
ஆரம்பத்தில் பாரம்பரிய அரிசி வகைகளில் இட்லி, தோசை மாவு தயாரித்து விற்பனை செய்ய திட்டமிட்டிருந்த கிருத்திகா அந்த முயற்சி தடைபட்டதும் அரிசியாகவே விற்பனை செய்ய முடிவெடுத்தார்.
அரிசி, அரிசி மாவு, கம்பு மாவு, ராகி மாவு உள்ளிட்ட உலர் மாவு வகைகள், சிறு தானியங்கள், பருப்பு வகைகள், உலர் பழங்கள், மூலிகைப் பொடி வகைகள், சத்து மாவு என நீண்டுகொண்டே போகிறது `ஆர்கானிக் பாசிடிவ்’ பொருட்களின் வகைகள்.
விழிப்புணர்வு
அரிசி பற்றிய விழிப்புணர்வு இல்லாதது ஒருபுறம் இருக்க இவற்றை எப்படிப் பயன்படுத்துவது என்பது மக்களுக்குத் தெரியவில்லை. இது தெரிந்தால்தானே மக்கள் வாங்குவார்கள். என்ன செய்வது?
”இந்தப் பிரச்சனைக்கான தீர்வை யோசிச்சேன். சோஷியல் மீடியால பாரம்பரிய அரிசி வகைகளை புரோமோட் செய்ய ஆரம்பிச்சேன். நிறைய பேர் ஆர்கானிக் கடைகள்ல போய் பாரம்பரிய அரிசி வகைகளை வாங்கினாலும் அதை சமைச்சு பார்த்து சரியா வரலைன்னு விட்டுடுவாங்க. சிகப்பரிசியை மாவாக்கி யூஸ் பண்ணுங்க, வெள்ளை அரிசியை சாப்பாட்டுக்கு யூஸ் பண்ணுங்க, இந்த மாதிரி டிப்ஸ் கொடுக்க ஆரம்பிச்சேன்,” என்கிறார்.
விற்பனை, முதலீடு மற்றும் வருவாய்
முதல் மாதமே 1.5 லட்ச ரூபாய் விற்பனை. தற்போது தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஆர்கானிக் மளிகைப் பொருட்களை ஷிப் செய்து வருகிறார். வெளிநாடுகளுக்கும் அனுப்புகிறார்.
இந்த ஓராண்டு தொழில் முயற்சியில் மாத விற்பனை அளவு 5 லட்ச ரூபாய் அளவிற்கு அதிகரித்திருப்பதாக கிருத்திகா தெரிவிக்கிறார். இட்லி, தோசை மாவு வகைகளாக விற்பனை செய்வதற்கு 20 லட்ச ரூபாய் வரை முதலீடு செய்துள்ளார். 2-3 மாதங்களில் இந்த மாவு வகைகளின் விற்பனை தொடங்க உள்ளது. தற்சமயம் வருவாய் ஏதும் ஈட்டப்படாத நிலையில் விற்பனை அளவு 10 லட்ச ரூபாயை எட்டும்போது வருவாய் கிடைக்கத் தொடங்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.
சமூக வலைதள பயன்பாடு மற்றும் ஆர்டர்கள்
கிருத்திகா ஃபேஸ்புக் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார். வெப்சைட் மூலமாகவும் வாட்ஸ் அப் மூலமாகவும் ஆர்டர்கள் கிடைக்கின்றன.
சென்னையில் டெலிவர் செய்வதற்கென பிரத்யேக குழு அமைத்துள்ளார். வெளியூர்களுக்கு கூரியர் அல்லது பார்சல் சர்வீஸ் மூலம் அனுப்பி வைக்கிறார்.
’ஆர்கானிக் பாசிடிவ்’ தயாரிப்புகள் டெல்லி, மும்பை, பெங்களூர், நொய்டா ஆகிய நகரங்களுக்கு அதிகளவில் அனுப்பப்படுகின்றன. இதுதவிர அம்ரிஸ்டர், பஞ்சாப் போன்ற இடங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. ஃபின்லாந்து, லண்டன், அமெரிக்கா, யூகே போன்ற நாடுகளுக்கும் அனுப்பி வருகிறார்.
இவருக்கு சொந்தமான யூட்யூப் சானல் ஒன்றும் உள்ளது. அதில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் ரெசிபிக்களும் பதிவிடுகிறார்.
கொள்முதல்
நேரடியாக விவசாயிகளிடமிருந்து விளைபொருட்களை வாங்குகிறார் கிருத்திகா. ஆர்கானிக் தயாரிப்புகளின் தரத்தை உறுதிசெய்த பின்னரே வாங்குகிறார். அதேபோல் சத்துமாவு உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகளில் சேர்க்கப்படும் அனைத்து மூலப்பொருட்களும் இயற்கையான பொருட்களாக இருப்பதை உறுதிசெய்கிறார்.
வடகிழக்கு மாநிலங்களில் இருந்து மிளகு, லகாடாங் மஞ்சள் போன்றவற்றை வாங்குகிறார். கர்நாடகா, மத்தியப்பிரதேசம் போன்ற பகுதிகளில் இருந்தும் வாங்குகிறார். அரிசி வகைகளைத் தமிழ்நாட்டில் வாங்குகிறார்.
வருங்காலத் திட்டங்கள்
2-3 மாதங்களில் பாரம்பரிய அரிசி வகைகள் கொண்டு தயாரிக்கப்படும் இட்லி, தோசை மாவு வகைகள் விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளார்.
ஆர்கானிக் பொருட்கள் என்றாலே விலையுயர்ந்தது என்கிற எண்ணம் மக்கள் மனதில் இருக்கிறது. இதை மாற்றி குறைந்த விலையில் ஆர்கானிக் மளிகைப் பொருட்களை வழங்க திட்டமிட்டிருக்கிறார்.
ஆர்கானிக் பொருட்கள் எங்கிருந்து வாங்கப்படுகின்றன உள்ளிட்ட அனைத்து தகவல்களிலும் வெளிப்படைத்தன்மை இருக்கவேண்டும் என்பதே கிருத்திகாவின் விருப்பம்.
’ஆர்கானிக் பாசிடிவ்’ பெயரில் துபாய்க்கு ஏற்றுமதி செய்வதற்கான ஆயத்தப்பணிகள் நடந்து வருகின்றன. சோதனை முயற்சியாக 10 தயாரிப்புகள் மட்டும் இங்குள்ள ஸ்டோர் ஒன்றிற்கு அனுப்பப்பட உள்ளது. இங்கு விரைவில் விற்பனைக்குக் கிடைக்கும் என்கிறார் கிருத்திகா.