திருநங்கைகள் வாழ்வாதாரம் மேம்பட உதவும் திருநங்கை பிரியா பாபு கடந்து வந்த பாதை!
மதுரையைச் சேர்ந்த 50 வயது திருநங்கை ப்ரியா பாபு ரிசோர்ஸ் செண்டர், ட்ரான்ஸ் கிச்சன் என பல்வேறு முயற்சிகள் மூலம் திருநங்கைகளின் மேம்பாட்டில் பங்களித்து வருகிறார்.
1990-களில் தன்னுடைய பாலின அடையாளத்துடன் கடுமையாகப் போராடிக்கொண்டிருந்தார் பிரியா பாபு. அந்த பதின்ம வயதில் தமிழகத்தின் திருச்சியிலிருந்து மும்பைக்கு சென்றுவிட்டார்.
மும்பை சாலைகளில் தன்னைப் போன்றே பலரை சந்தித்தார். பாலியல் வன்கொடுமை, சமூகத்தடை என ஏராளமான பிரச்சனைகளை எதிர்கொள்ளவேண்டியிருந்தது. இவற்றை அவர் எதிர்கொள்ள உதவியது வாசிப்புப் பழக்கம்.
ஆம். புத்தகங்கள் மட்டுமே அவருக்கு நிம்மதியையும் ஆறுதலையும் அளித்துள்ளன. நேரம் கிடைக்கும்போதெல்லாம் தாராவியில் ஏதோ ஒரு மூலையில் உட்கார்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருப்பார்.
”நான் வீட்டில் இருந்த சமயத்திலேயே நிறைய புத்தகங்கள் படிப்பேன். என்னுடைய 18 வயதில் மும்பைக்கு சென்றுவிட்டேன். அத்தியாவசிய செலவுகளை சமாளிக்கக்கூட கையில் பணம் இல்லை. சாலைகளில் பிச்சை எடுத்தேன், பாலியல் தொழில் செய்தேன், பாரில் நடனமாடினேன். இப்படித்தான் என் நாட்கள் நகர்ந்தன,” என்கிறார் பிரியா.
1999-ம் ஆண்டு சு.சமுத்திரம் எழுதிய 'வாடாமல்லி’ என்கிற தமிழ் புத்தகத்தைப் படித்தார்.
“இந்தப் புத்தகத்தில் வரும் திருநங்கை கதாப்பாத்திரம் ஏராளமான பிரச்சனைகளை சந்திப்பதாகவும் இறுதியாக ஒரு ஆர்வலராக மாறுவதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கும். அவரைப் பற்றிப் படித்ததும் எனக்கும் உத்வேகம் பிறந்தது. நானும் ஆர்வலர் ஆகவேண்டும் என்று நினைத்தேன். என் வாழ்க்கையை மாற்றிய புத்தகம் அது,” என்கிறார் பிரியா.
சமுத்திரத்தின் புத்தகத்தைப் படித்து உத்வேகம் பெற்ற பிரியா, அவரை நேரில் சந்திக்க விரும்பினார். சமுத்திரம் பிரியாவின் புத்தக வாசிப்பை ஊக்குவித்து மேலும் விரிவுபடுத்தினார். எழுதும் பழக்கத்தை வளர்த்தெடுக்கவும் ஊக்குவித்தார். இதன் பலனாக பிரியா விரைவிலேயே உள்ளூர் தமிழ் பத்திரிக்கையில் எழுதத் தொடங்கினார்.
“நம் வாழ்க்கையின் முக்கியத் தேவையே ஒன்றுதான். நம்மை ஊக்குவித்து நம்மால் சாதிக்க முடியும் ஒரு விஷயத்தை செய்ய வைக்கும் நபர் நமக்கு முக்கியம்,” என்கிறார் தத்துவவாதி ரால்ஃப் வால்டோ எமர்சன். பிரியாவைப் பொருத்தவரை அப்படிப்பட்ட நபர்தான் சமுத்திரம்.
சமீபத்தில் Community Action Collab என்கிற என்ஜிஓ-வின் ரீஜினல் புரோக்ராம் மேனேஜராக மதுரையில் வெற்றிகரமாக 'ட்ரான்ஸ் கிச்சன்' நடத்தி வருகிறார் பிரியா. இங்கு சுமார் 10 திருநங்கைகள் வேலை செய்து வருமானம் ஈட்டுகின்றனர். மேலும், இந்த கிச்சன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு நிவாரணப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது.
“நமக்கு உதவிய இந்த சமூகத்திற்கு முடிந்தவரை நல்லது செய்யவேண்டும்,” என்கிறார் பிரியா.
திருநங்கைகள் நலனில் அக்கறை காட்டும் ஆர்வலர்
பிரியா 2001ம் ஆண்டு தமிழகத்திற்கு திரும்பிய பிறகு ஒவ்வொரு மாவட்டமாக சென்றார். அங்கு திருநங்கைகள் நலனுக்காக செயல்படும் என்ஜிஓ-க்களுடன் தன்னார்வலராக இணைந்து செயல்பட்டார்.
2004ம் ஆண்டு ரஜ்னி என்கிற வழக்கறிஞரை சந்தித்தார். அவர் பிரியாவுடன் இணைந்து திருநங்கைகளுக்கு வாக்குரிமை வழங்கவேண்டும் என்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அடுத்தடுத்த ஆண்டுகளில் பிரியா பல்வேறு கட்டுரைகளையும் புத்தகங்களையும் எழுதினார். திருநங்கை சமூகத்தினர் சந்திக்கும் பிரச்சனைகளைப் படம்பிடித்துக் காட்டும் வகையில் நாடகங்கள் நடத்த திருநங்கை தியேட்டர் குரூப் ஒன்றையும் அமைத்தார்.
2017ம் ஆண்டு பிரியா இந்தியாவின் முதல் Transgender Resource Centre (TRC) மையத்தை மதுரையில் அமைத்தார். இங்கு நிதி திரட்டப்பட்டு திருநங்கை சமூகத்திற்கு ஆதரவளிக்கும் மையமாக இது செயல்பட்டது. இந்த மையத்தில் ஆங்கிலத்திலும் தமிழிலும் ஏராளமான புத்தகங்கள் வைக்கப்பட்டன. அத்துடன் திருநங்கைகளின் உரிமை தொடர்பாக செய்தித்தாளில் வெளியான தகவல்கள் திரட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்தன.
ஆனால், இந்த மையம் கொரோனா பெருந்தொற்று சமயத்தில்தான் புத்துயிர் பெற்றதாக பிரியா தெரிவிக்கிறார்.
“கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பெரும்பாலான திருநங்கைகள் பிச்சை எடுத்தும் பாலியல் தொழில் செய்தும் சம்பாதித்து வந்த நிலையில் ஊரடங்கு காரணமாக இவர்களுக்கு பணமே கிடைக்காமல் போனது. இவர்களுக்கு அவசரகால உதவி தேவைப்பட்டது,” என பிரியா விவரித்தார்.
புலம்பெயர் தொழிலாளர்கள், தினக்கூலிகள், தெருவோர வியாபாரிகள், ஹெச்ஐவி பாதிக்கப்பட்ட பெண்கள், தனியாகக் குழந்தைகளை வளர்க்கும் அம்மாக்கள், பாலியல் தொழிலாளிகள் என இந்த மையத்திற்கு வரும் ஒவ்வொருவருக்கும் உதவி வழங்கப்பட்டதாக பிரியா தெரிவிக்கிறார்.
மக்களை ஒன்றிணைக்கும் உணவு
2021ம் ஆண்டு பிரியா ’ஸ்வஸ்தி’ என்கிற நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வந்தார். இந்நிறுவனம் நலிந்த மக்களின் மேம்பாட்டிற்காக பணியாற்றுகிறது. பிரியா மதுரையில் ட்ரான்ஸ் கிச்சன் தொடங்குவது தொடர்பாக இந்நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றினார்.
இந்த முயற்சிக்கு ஸ்வஸ்தி நிதியுதவி வழங்கியது. மேலும் Arghyam, Virutti, Sri Lakshmi Pengal Munnetra Sangam போன்ற மற்ற நிறுவனங்களும் நிதியுதவி வழங்கின.
“மற்றவர்களுடன் இணைப்பை ஏற்படுத்த உணவு உதவுகிறது. ஹோட்டல் தொடங்குவதன் மூலம் திருநங்கைகளை பணியமர்த்தலாம். அதுமட்டுமின்றி எங்களிடம் பேசுவதற்கு தயக்கம் காட்டும் மக்களுடன் இணைப்பை ஏற்படுத்திக்கொள்ளவும் இது உதவும் என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம்,” என்கிறார் பிரியா.
இந்த ஹோட்டலில் குறைந்த விலையில் உணவு விற்பனை செய்யப்படுகிறது. பல்வேறு நிவாரணப் பணிகளில் இந்த கிச்சன் ஈடுபட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை பொது மருத்துவமனையிலும் மதுரை பொது மருத்துவமனையிலும் (MDH) மட்டுமே திருநங்கைகளுக்காக பிரத்யேகமாக வார்டு உள்ளன. மதுரை பொது மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு இந்த கிச்சன் உணவு வழங்குகிறது என்கிறார் பிரியா.
திருநங்கையான ஜெய்சன் மதுரை பொது மருத்துவமனையில் தன்னார்வலராக இணைந்திருக்கிறார். இவர் நோயாளிகளுக்கும் வார்டில் இருக்கும் ஸ்டாஃப்களுக்கும் இடையே பாலமாக செயல்படுகிறார். மருத்துவமனை ஊழியர்கள் மூலமாகவோ, TRC அல்லது ட்ரான்ஸ் கிச்சன் மூலமாகவோ நோயாளிகளுக்குத் தேவையான வசதிகள் கிடைப்பதை இவர் உறுதிசெய்கிறார்.
பல காலமாக மன அழுத்தத்தில் இருந்த ஜெய்சன் குடும்பத்தை விட்டு பிரிந்து வந்தார். 26 வயதில் ஆணாக மாறினார். கடும் போராட்டத்தை சந்தித்த இவருக்கு உறுதுணையாகவும் ஆதரவாகவும் இருந்தது TRC. இவர் ஒரு கிரானா ஸ்டோர் மற்றும் ஃபேன்சி ஸ்டோர் தொடங்கி வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க TRC உதவியுள்ளது. இவருக்கு தற்போது ஒரு பார்ட்னரும் கிடைத்துவிட்டார். இந்த ஜோடி மதுரையில் வசிக்கின்றனர். ஸ்டோரில் வேலை செய்தபடியே திருநங்கைகள் சமூகத்திற்காகத் தன்னார்வலப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரியாவின் முயற்சி ஜெய்சன் போன்ற ஏராளமானோரிடம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சமீபத்தில் பிரியா திருநங்கைகள் தொடர்பான ’Ariagandi’ என்கிற குறும்படத்தை இயக்கியிருக்கிறார். இதன் ட்ரெயிலர் சமீபத்தில் வெளியான நிலையில் இந்தக் குறும்படம் 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாக உள்ளது.
”இந்த பூமியில் பிறந்துவிட்டால், என்றாவது ஒருநாள் இங்கிருந்து போயாக வேண்டும். இந்த இடைப்பட்ட காலத்தில் நாம் செய்யும் செயல் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு சேர்க்கும். நிச்சயம் நம்மால் மற்றவர்களுக்கு உதவமுடியும் என்கிற கருத்தை அடுத்தடுத்த தலைமுறையினருக்காக விட்டு செல்ல விரும்புகிறேன்,” என்கிறார் பிரியா.
ஆங்கில கட்டுரையாளர்: அஞ்சு நாராயணன் | தமிழில்: ஸ்ரீவித்யா
சமூக தடைகளைத் தாண்டி பியூட்டி சலூன் நடத்தும் தொழில்முனைவராகிய திருநங்கை தீபா!