பேருந்து, ரயில், மெட்ரோ... இனி சென்னை முழுக்க எதில் பயணித்தாலும் ‘ஒரே டிக்கெட்’
சென்னையில் பேருந்து, ரயில், மெட்ரோ ரயில் என எதில் பயணித்தாலும் ஒரே டிக்கெட் முறையை கொண்டு வருவது தொடர்பாக சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் முடிவு செய்துள்ளது.
சென்னையில் பேருந்து, ரயில், மெட்ரோ ரயில் என எதில் பயணித்தாலும் ஒரே டிக்கெட் முறையை கொண்டு வருவது தொடர்பாக சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் முடிவு செய்துள்ளது.
நேற்று சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமத்தின் முதல் குழுமக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி, போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், தலைமைச் செயலாளர் இறையன்பு, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், மாநகர போக்குவரத்து கழகம், சென்னை மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிடோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,
“சென்னை நகரப் போக்குவரத்து நெரிசல் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான் பெருகிவரும் மக்கள் தொகைக்கும் நகர விரிவாக்கத்திற்கும் ஏற்ப நாம் போக்குவரத்து வசதிகளை திட்டமிட்டுப் பெருக்க வேண்டியுள்ளது. அதற்காக நாம் புதிய தொழில்நுட்பங்களை, அதாவது, newtechnologies எந்த அளவிற்கு பயன்படுத்த முடியுமோ அந்த அளவிற்கு முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும். உலகத் தரம் வாய்ந்த போக்குவரத்து முறை நமது தலைநகரில் அமைய வேண்டும். பொதுப் போக்குவரத்து எந்த அளவிற்கு சிறப்பாக கட்டமைக்கப்படுகிறதோ அந்த அளவிற்கு சாலைகளில் தனியார் வாகனங்களின் எண்ணிக்கையும், போக்குவரத்து நெரிசலும் குறையும் சுற்றுச்சூழல் மாசுபடுவதும் அதே அளவுக்குக் குறையும்,” எனத் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் பல்வேறு வகையான போக்குவரத்து ஒருங்கிணைந்த செயல்படும் வகையிலான ஒரே பயணச் சீட்டு முறை அமல்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்றது. சென்னை முழுவதும் பொது போக்குவரத்து முறைகளில் பயணம் செய்ய ’ஒரே டிக்கெட்’ முறையை அறிமுகம் செய்யும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி,
சென்னையில் பேருந்து, ரயில், மெட்ரோ என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் முறையை கொண்டு வர சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதில், புறப்படும் இடம் மற்றும் சேரும் இடத்தை பதிவு செய்து, எத்தனை போக்குவரத்து முறைகளில் பயணிப்பது குறித்து தேர்வு செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் பயணத்தின் மொத்த தொகையை செலுத்தி டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொகுப்பு - கனிமொழி
‘ஒரே இந்தியா; ஒரே தங்கம் விலை’ - இந்தியாவில் முதலில் அமல்படுத்திய கேரளா!