ஒரு மரத்தின் ஒரு வயதுக்கு விலை ரூ.74,500: உச்ச நீதிமன்றக் குழு சொல்வது என்ன?
மரத்தின் மதிப்பீடு குறித்து வெளியான அறிக்கை!
மேற்கு வங்க மாநிலத்தில் சாலை விரிவாக்கப் பணி மற்றும் புதிய பாலங்கள் கட்டுவதற்காக 356 மரங்களை வெட்ட அம்மாநில அரசு தீர்மானித்தது. ஆனால் இந்த விவகாரம் நீதிமன்றத்தில் வழக்கனது. இதையடுத்து இந்த வழக்குத் தொடர்பான விசாரணையின்போது மரத்தின் மதிப்பீடு குறித்து நிர்ணயம் செய்ய உச்ச நீதிமன்றம், ஐந்து நிபுணர்களைக் கொண்ட ஒரு குழுவை நியமித்தது.
அதன்படி, இந்தியாவில் ஒரு மரத்தின் ஒரு வயதுக்கு விலை ரூ.74,500 ஆக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு நிர்ணயித்துள்ளது. அந்த குழுவில், புலி சுற்றுச்சூழல் மையத்தின் நிர்வாக இயக்குநர் நிஷிகாந்த் முகர்ஜி, கிராமங்களுக்கான அறிவியல் மையத்தின் செயலாளர் மற்றும் நிர்வாக இயக்குநர் சோஹம் பாண்ட்யா, அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் இயக்குநர் சுனிதா நரேன், மேற்கு வங்க அரசு ROB பிரிவு உதவி தலைமை பொறியாளர் பிகாஷ் குமார் மாஜி, வன அலுவலர் நிரஞ்சிதா மித்ரா ஆகிய 5 நிபுணர்கள் இடம்பிடித்திருந்தனர்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, இந்தக் குழுவினர் இந்தியாவில் முதன்முறையாக மரங்களின் மதிப்பீடு குறித்த வழிகாட்டுதல்களை உள்ளடக்கிய அறிக்கையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான அமர்வு முன் சமர்ப்பித்துள்ளது.
அந்த அறிக்கையின்படி,
இந்தியாவில் ஒரு மரத்தின் விலை ஒரு வருடத்திற்கு ரூ.75,500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மரத்தின் ஆக்ஸிஜனின் விலை மட்டும் ரூ.45,000 ஆகவும், உயிர் உரங்களின் விலை ரூ.20,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நுண்ணூட்டச் சத்துக்கள் மற்றும் உரம் ஆகியவற்றின் செலவுகளைச் சேர்த்தால் உயிருள்ள மரங்கள் பெரும்பாலும் அவை வெட்டப்பட்ட பெரும்பாலான திட்டங்களின் நன்மைகளை விட அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் ஐந்து ரயில் ஓவர் பாலங்கள் அமைப்பதற்காக 356 மரங்களை வெட்டுவது குறித்து கருத்து தெரிவித்த இக்குழு, 356 மரங்களில் சில பாரம்பரிய மரங்கள் உள்ளன.
பாரம்பரிய மரங்கள் ரூ.220 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அரசாங்கம், நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு மரங்களை வெட்டுவதற்குப் பதிலாக, போக்குவரத்து மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்பை எளிதாக்க ஏற்கெனவே இருக்கும் நீர்வழிகள் மற்றும் ரயில் பாதைகளைப் பயன்படுத்துவது போன்ற மாற்று வழிகளை ஆராய வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளது.
மேலும் நிபுணர்கள் கூறுகையில்,
“மரங்கள் அகற்றப்பட வேண்டும் என்றால், முதல் முயற்சியாக நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவற்றை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றனர். ஒரு மரத்திற்கு பதிலாக ஐந்து மரக்கன்றுகளை நடவு செய்வது போதுமானதல்ல. ஏனெனில் 100 ஆண்டுகள் பழமையான ஒரு மரத்தை ஒரு சில புதிய மரக்கன்றுகளுடன் ஒப்பிட முடியாது.”
சிறிய கிரவுன் அளவுள்ள ஒரு மரத்திற்கு, 10 மரக்கன்றுகள் நடப்பட வேண்டும் என்று அந்தக் குழு பரிந்துரைத்துள்ளது. நடுத்தர கிரவுன் அளவு கொண்ட ஒரு மரத்திற்கு 25 மரக்கன்றுகள் மற்றும் பெரிய கிரவுன் அளவுள்ள ஒரு மரத்திற்கு 50 மரக்கன்றுகள். (கிரவுன் என்பது மரத்தின் ஒரு பகுதியாகும், அதில் இருந்து கிளைகள் தண்டுக்கு மேலே வளரும்.)
ஒரு பாரம்பரிய மரம் சமூகத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் சேவை செய்கிறது. அதன் மதிப்பீட்டை ஆக்ஸிஜன், மைக்ரோ சத்துக்கள், உரம் மற்றும் உயிர் உரங்கள் உள்ளிட்ட பல்வேறு எண்ணிக்கையில் அடையலாம். ஒரு பாரம்பரிய மரம் என்பது ஒரு பெரிய மரம், இது முதிர்ச்சியடைய பல தசாப்தங்கள் அல்லது நூற்றாண்டுகள் ஆகும்.
”100 ஆண்டுகளுக்கும் மேலான ஆயுட்காலம் கொண்ட ஒரு பாரம்பரிய மரத்தின் மதிப்பு ரூ.1 கோடிக்கு மேல் இருக்கக்கூடும்," என்றும் அக்குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இருப்பினும், நிபுணர்கள் குழு தாக்கல் செய்த அறிக்கையை ஏற்காத உச்சநீதிமன்றம், குழுவின் சில பரிந்துரைகளை நன்றாகக் கையாள வேண்டும். குழுவின் இந்த பரிந்துரை ஒவ்வொரு அரசாங்கத்தையும் தடுமாட வைக்கும் என்று தெரிவித்துள்ளது.
மேலும், வழக்கு குறித்து மத்திய அரசு, மேற்கு வங்க அரசு மற்றும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்திடமிருந்து விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் கோரியுள்ளது. ஆனாலும், மரங்களை வெட்டி சாலைகள் அமைப்பதற்கு பதிலாக நடைமுறையில் உள்ள நீர்வழிகள், ரயில் பாதைகளை மேம்படுத்த வேண்டும் என்று குழுவின் பரிந்துரையை நீதிபதிகள் வரவேற்றுள்ளனர்.