ட்ரென்டி ஜூட் பேக்குகள்: மாத்தியோசித்து மாதம் ரூ.1.5லட்சம் ஈட்டும் ஐஸ்வர்யா!
சூழலுக்கு உகந்தது என்பினும் சூப்பராக இல்லை என்ற காரணத்தினால், கல்யாணங்களின் ரிட்டன் கிப்டுகளுக்கு என ஒதுக்கப்பட்ட ஜூட் பேக்குகளுக்கு, ட்ரெண்டி லுக் கொடுத்து 'வாவ்' சொல்லும் வகையில் மாத்தியோசித்து சணல் பையில் சக்ஸஸ் கண்டுள்ளார் ஐஸ்வர்யா.
ஈகோ ப்ரெண்ட்லி + நம்மூர் தயாரிப்பாக இருந்தாலும் ஜூட் பேக்ஸ் என்றாலே கல்யாணங்களில் ரிட்டன்கிப்ட், குழந்தைகளின் லன்ச் பேக் - இவ்வாறே ஜூட் பேக்ஸ் பற்றிய பலரது எண்ணோட்டமாக இருக்கும். இனிமேல், அப்படி எண்ண வேண்டாமென ஒரே பாணியிலேயே தயாரிக்கப்பட்டு வந்த சணல் பைகளின், லுக்கை மாற்றி, ஃபேஷன் உலகத்தார் வியக்கும் வகையிலான ஜூட் பேக்ஸை தயாரித்து வருகிறார் ஐஸ்வர்யா பிரசாந்த்.
'ஈகோ ப்ரெண்ட்லி + ட்ரெண்டி' எனும் பார்மூலாவில் அவர் தயாரிக்கும் ஒவ்வொரு ஜூட் பேக்ஸூம் அத்தனை அழகு. சணல் பைகளின் ட்ரெண்டி வெர்ஷன் மூலம் மக்களை சூழலுக்கு உகந்தவற்றை உபயோகிக்க மாற்றிவரும் அவர், மாத்தியோசித்தில் சக்ஸஸ்புல்லான பிசினஸ் பாதையும் அமைந்துள்ளது. ஆம்,
அழகிய ஜூட் பேக்ஸ் விற்பனையின் மூலம் மாதம் ரூ.1,00,000 முதல் ரூ.1,50,000வரை வருவாய் ஈட்டிவருகிறார்.
சொந்த ஊர் ஈரோடு என்றாலும், அப்பாவுடைய வேலை டிரான்ஸ்ஃபர் காரணமாக 2 அல்லது 3 வருஷத்துக்கு ஒருமுறை வேற வேற ஊர்களில் குடியேறுவோம். காலேஜ் சேரும் சமயத்தில் சென்னைக்கு டிரான்ஸ்பராகியதால், பி.டெக் அங்கு முடித்தேன். படித்துமுடித்துவிட்டு கோயம்புத்துாரில் பாஷ் நிறுவனத்தில் 2 ஆண்டுகள் பணிபுரிந்தேன். அப்புறம் கல்யாணமாகவும், சேலத்துக்கு மாற வேண்டிய சூழலில், வேலையை ரிசைன் பண்ணிட்டேன்.
பாஷ் கம்பெனியில் ஸ்ட்ரெஸ்ஃபுல்லான வேலை என்பதால், ஒரு வருடம் ப்ரேக் எடுத்துக்கிட்டு, அதுக்கு அப்புறம் கேரியர் பத்தி யோசிக்கலாம்னு நினைச்சேன். ஒரு வருஷமும் ஓடியது. அதன்பிறகு, என்ன செய்யலாம்னு யோசிக்க தொடங்கினேன்.
எனக்கு சின்ன குழந்தையிலிருந்தே ஈகோ ப்ரெண்ட்லி புரோடெக்ட்ஸ் மீது ஆர்வம் அதிகம். சோ, இயற்கைக்கு ப்ரெண்ட்லியான பொருளை தயாரிக்கலாம்னு முடிவெடுத்தேன். சணல் உற்பத்தியில் இந்தியா முதன்மை இடத்தில் உள்ளது. உற்பத்தி அதிகமிருந்தாலும், பயன்பாடு விகிதம்னு பாத்தா ரொம்ப குறைவு தான்.
நம் நாட்டு தயாரிப்பு அதிகளவில் வெளிநாடுகளுக்கு தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 'கோ லோக்கல்' என உள்ளூர் உற்பத்திக்கு ஆதரவு கொடுக்கணும் பேசினாலும் ஜூட் பேக்ஸ் யாரும் அவ்ளோ பயன்படுத்துவதில்லை.
ஜூட் பேக்ஸ்னாலே அதிகமா ரிட்டர்ன் கிஃப்டுக்கு மட்டும்தான் கொடுப்பாங்க. ஒரு பார்டிக்கோ, நார்மலாகவோ பயன்படுத்த லெதர் பேக்குகளையே வாங்குகின்றனர். ஏன்னா, ஜூட் பேக்கின் லுக் அவ்ளோ அட்ராக்டீவ்வாக இருக்காது. அப்போதான், ஜூட் பேக்ஸ்ல ஏன் ஆர்ட் வொர்க் செய்து அழகாக்கக்கூடாதுனு தோணுச்சு. அதன் லுக்கை மாற்றினால், மக்கள் விரும்புவார்கள் என்று நினைத்து ஜூட் பேக்கில் ஹேன்ட் பெயின்டிங் பண்ண ஆரம்பிச்சேன். மதுபாணி ஆர்ட், குழந்தைகளுக்கான கார்டூன் வரைப்படங்களை ஜூட் பேக்கில் வரைந்து ஃபேஸ்புக்கில் போஸ்ட் செய்தேன். எதிர்பார்த்தமாதிரியே, மக்களுக்கு அந்த லுக் பிடித்திருந்தது. நிறைய ஆர்டர்ஸ் வர ஆரம்பிச்சது.
2017ம் ஆண்டில் 2 லட்சம் முதலீட்டில் 'The Chymera Company' எனும் பெயரில் நிறுவனம் தொடங்கினேன். இதை பிசினஸ் என்பதைத் தாண்டி, பேஷன் பிளஸ் மக்களை ஈகோ ப்ரெண்ட்லி புரோடெக்ட்சை பயன்படுத்த வைக்கணும்னு என்பதே என் நோக்கமாக இருந்தது.
என்கிட்ட பொருள்கள் வாங்கலைனாலும் பரவாயில்லை, ஈகோ ப்ரெண்ட்லியான பொருள்களை, நம் நாட்டு தயாரிப்புகளை பயன்படுத்தச் சொல்லுவேன். பிசினஸ் ஸ்டார்ட் பண்ண ஒரு வருஷத்திலே, நண்பர்களும், குடும்ப உறுப்பினர்களும் நிறைய பேருக்கு ஷேர் செய்ததில் பிசினஸ் பிக்அப் ஆகிருச்சு.
ஒரே ஆர்டரில் 25 முதல் 100 எண்ணிக்கையிலான பேக்குகளை வாங்குவர். அந்தமாதிரி மாதத்திற்கு 40 முதல் 50 ஆர்டர்கள் வரத்துவங்கியது. மாதம் ரூ.1,00,000 முதல் 1,50,000ரூபாய் வரை வருமானமும் கிடைத்தது. ஆர்டர்கள் நிறைய கிடைக்கத் துவங்கியதால், டெய்லர், ஆர்டிஸ்ட் என 5 ஆட்களை பணிக்கு அமர்த்தினோம். பிசினஸ் துவங்கிய ஒரு ஆண்டுக்குள்ளாகவே பல்க் ஆர்டர் கிடைக்க ஆரம்பித்துவிட்டது. முதன் முதலில் 2,500 கலம்காரி ஜுட் பேக் ஆர்டர் கிடைத்தது.
ஒரு ஹேன்ட் பெயின்டட் பேக் தயாரிக்க ஒரு வாரமாகும். முதலில் படத்தை வரைந்து ஒரு லேயர் பெயின்ட் பண்ணி நைட் முழுக்க காயவச்சிடனும். இந்தமாதிரி 4 கோட்டீங் கலரிங் கொடுத்து, அவுட் லைன் செய்வேன். ஒவ்வொரு முறை கலரிங் பண்ண அப்புறமும் காயவிடனும். 3 வருஷத்துக்கு முன்னாடி பெயின்ட் பண்ண பேக்லாம் இன்னும் அவ்ளோ ப்ரைட்டா அப்படியே தான் இருக்கு. ஹேன்ட் பெயின்டிங் பேக்குகளை மக்கள் விரும்புவதற்கு காரணமே அவர்களுக்கு பிடித்த ஒரு விஷயத்தை பேக்கில் வரையச் சொல்லி வாங்கிக்கொள்வதால், ஸ்பெஷல் உணர்வுடன் பயன்படுத்துவதாக சொல்வர்.
ஹேன்ட் பெயின்டிங் பேக்குகளை பொறுத்துவரை மக்கள் அவர்களுக்கு பிடித்த டிசைனை கஸ்டமைஸ் செய்து கொள்வர். சிலர் ரொம்ப கஷ்டமான டிசைன்லாம் கேட்பாங்க. ஆனா, அதை மட்டும் சரியா கொடுத்துவிட்டால், விசுவாசமான கஸ்டமராகிவிடுவர்.
அப்படித் தான் ஒருமுறை ஒருத்தர் அவங்க சின்னபையனுக்காக மினியன்ஸ் வரைந்த பேக் ஆர்டர் செய்துவாங்கினாங்க. அப்போ அவங்க இரண்டு பேருக்கும் இடையில் ஏதோ சண்டை போல, அந்த பேக்கை பார்த்ததும், எனக்காகவாமா பண்ணீங்கனு அழுது கட்டிபிடிச்சான்னு சொன்னாங்க. இந்த மாதிரி தான் ஹேன்ட் பெயின்டட் பேக்ஸ் எமோஷனல் பீலை உண்டாக்குகிறது, என்றார்.
கையால் பெயின்டிங் செய்யப்பட்ட ஜூட் பேக்ஸுக்கு கிடைத்த ரீச்சில், ஜுட் பேக்ஸிலே பல வெரைட்டிகளை கொண்டு வந்தோம். ஸ்லிங் பேக், டோட் பேக், பவுச், குழந்தைகளுக்கான கார்டூன் லன்ச் பேக் எனக் குறிப்பிட்ட வகைகளை மட்டும் தான் தயாரித்திட்டு இருந்தோம்.
ஜுட் மெட்டீரியலுடன், சாயம் ஏற்றப்படாத கேன்வாஸ் மெட்டீரியல் சேர்த்து ஒரு மாடல் தயாரித்தோம். ஜூட் பேக்கில் பூ போன்ற டிசைன்களை எம்பிராய்டரி செய்தோம். ஒரு பிரீயட்டில் எம்பிராய்டரி ஜூட் பேக்ஸ் நன்கு சேல் ஆகியது. ஐூட் + காட்டன் கலந்து ஜூகோ மெட்டீரியல், கலம்காரி, இக்கத் போன்ற மெட்டீரியல்களுடன் ஜூட்பேக்ஸ் ரெடி பண்ணேன். மெட்டீரியல் தேடியே நிறைய டிராவல் பண்ணியிருக்கோம்.
சேலம், கரூர், பெங்களூர், சென்னைனு பல ஊர்களில் இருந்து மெட்டீரியல் வாங்குகிறோம். என் கணவர் அலுவலக வேலை சம்பந்தமாக எங்காவது டூருக்கு சென்றாலும், அங்கு கிடைக்கும் புதுரக துணிகளை வாங்கிக் கொண்டு வருவார். நான்மட்டும் ஆரம்ப நாட்களில் தொழிலை கவனித்துவந்த போது, ஆர்டர்களை பேக்கிங் செய்வது, கொரியர் செய்வதுனு முழு சப்போர்ட்டாக இருந்தார்.
கோவிட் சூழலில் பிசினஸ் அவ்ளோ நடக்கல. இந்த சமயத்தில் எங்களை அப்கிரேட் செய்யும் பணிகளில் ஈடுப்பட்டுக் கொண்டிருக்கிறோம். முதலில் வாட்சப்பில் மட்டும் தான் ஆர்டர் எடுத்திட்டு இருந்தோம். இப்போது எங்கள் நிறுவனத்திற்கான வெப்சைட் உருவாக்கினோம். ஜூட் மெட்ரீயலுடன், நம் நாட்டு துணி வகைகளான கலம்காரி, இக்கத் போன்றவற்றை ஜூட்டுடன் இணைத்து பேக்குகளை தயாரித்தோம். அந்த டிசைன்கள் நிறைய மக்களுக்கு ஜூட் பேக்ஸின் மேலிருந்த எண்ணத்தை மாற்றியது.
சோ, இந்த லாக்டவுனை, வகை வகையான துணிகளுடன் ஜூட் பேக்ஸ் தயாரிக்கும் சோதனை முயற்சிக்கான நேரமாக எடுத்துக் கொண்டோம். ஜகார்ட்னு ஒரு மெட்டீரியல் இருக்கு. அதை பயன்படுத்தி பேக்குகளை வடிவமைத்துக் கொண்டிருக்கிறோம். 2 வாரத்தில் அந்த பேக்கை லான்ச் செய்துவிடுவோம்.
ஒவ்வொரு பேக் டிசைனிங் முடித்த பிறகும் எங்களுடைய ரெகுலர் கஸ்டமரிடம் கருத்து கேட்போம். அவர்களது, கருத்துக்கு ஏற்றவாறு அடுத்தமுறை தயாரிப்பில் கரெக்ஷன் செய்து கொள்வோம். எங்களை அப்கிரேட் செய்து கொள்வதற்கான நேரமாக தான் லாக்டவுன் நாட்களைப் பயன்படுத்தி வருகிறோம்.
இப்போதுவரை, பெண்களுக்கான ஃபேஷன் பேக்குகள் தான் தயாரித்து கொண்டிருக்கிறோம். ஆண்களுக்கு ஏற்ற வாலட், மெசென்ஜர் பேக்ஸ் போன்றவற்றை ஜூட்டில் அறிமுகப்படுத்த வேண்டும்.
”எல்லாவிதமான மக்களுக்கும் அவர்களது அனைத்து பயன்பாட்டுக்குமான பேக்குகளையும் நம்நாட்டு ஈகோ ப்ரெண்ட்லி மெட்டீரியல்களைக் கொண்டு தயாரிக்க வேண்டும். லெதர் பேக்ஸ் போன்றவற்றை இறக்குமதி செய்யாமல், நம்முடைய சொந்தத் தயாரிப்பிற்கான டிரண்ட்டை உருவாக்கி பேஷன் வேர்ல்டில் அதற்கான இடத்தை உருவாக்க வேண்டும் என்பதே என் நீண்டநாள் இலக்கு," என லட்சியத்தை கூறிமுடித்தார் ஐஸ்வர்யா.
இணையதள முகவரி: