கைகளால் எழுதப்படும் கடிதங்களை ஊக்குவிக்கும் பெண் எடுத்துள்ள முயற்சி!
நீங்கள் கடைசியாக எப்போது கைகளால் கடிதம் எழுதினீர்கள் என்று உங்களுக்கு நினைவிருக்கிறதா? உங்களுக்கு வரும் கடிதத்தை எதிர்பார்த்து தினமும் காலையில் தபால்காரருக்காக காத்திருந்த அனுபவம் உள்ளதா?
நீங்கள் கடைசியாக எப்போது கடிதம் எழுதினீர்கள் என்று உங்களுக்கு நினைவிருக்கிறதா? இங்கு நாம் இ-மெயில் பற்றிப் பேசவில்லை, கைகளால் எழுதப்படும் கடிதங்களைப் பற்றி பேசுகிறோம். உங்களுக்கு வரும் கடிதத்தை எதிர்பார்த்து தினமும் காலையில் தபால்காரருக்காக காத்திருந்த அனுபவம் உள்ளதா?
நாம் இன்று வாட்ஸ் அப் பயன்படுத்துவதால் நாம் அனுப்பும் தகவலுக்கு உடனடியாக பதிலைப் பெற்றுப் பழகிவிட்டோம். கைகளால் கடிதம் எழுதுவது பழைய பழக்கமாக இருப்பினும் அவை எப்போதும் அதன் பொலிவை இழப்பதில்லை.
பரோமிதா பர்தோலாய் கைகளால் எழுதப்படும் கடிதங்களை ஆதரிப்பவர். இவர் உலகம் முழுவதும் இருக்கும் மக்களுக்கு கைகளால் கடிதம் எழுதி அனுப்புவதற்காக ‘Letter from a Stranger, India’ என்கிற முயற்சியைத் தொடங்கியுள்ளார். ஃபேஸ்புக்கில் இவர் உருவாக்கியுள்ள குழு இதுவரை 100-க்கும் மேற்பட்ட கடிதங்களை அனுப்பியுள்ளது. இந்த சமூகத்தில் கடிதம் எழுதுபவர்கள் மற்றும் கடிதம் கோருபவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை படிவம் ஒன்று இடம்பெறும். தகவல்கள் சேகரிக்கப்பட்டு கடிதங்கள் விநியோகிக்கப்படும். அதன் பிறகு கடிதங்களுக்கு பதில் அனுப்பும் படலம் தொடங்கப்படும்.
இந்த முயற்சி முழுமையாக தன்னார்வலர்களைக் கொண்டு இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் கடிதங்கள் எழுத சராசரியாக 30 தன்னார்வலர்கள் சைன்–அப் செய்கின்றனர்.
தி லாஜிக்கல் இண்டியன் உடனான உரையாடலில் பரோமிதா கூறும்போது,
“எங்கள் தரப்பில் ஒரே ஒரு கடிதம் மட்டுமே வழங்கப்படும். மற்றவை பரஸ்பர விருப்பத்துடன் பரிமாறிக்கொள்ளப்படும். கடிதம் எழுதுபவரும் பெற்றுக்கொள்பவரும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்கவேண்டும்,” என்றார்.
இந்த முயற்சியில் பங்கேற்க ஒரு சில விதிமுறைகள் பின்பற்றப்படவேண்டியது அவசியம். கடிதம் எழுதுபவர் மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து நடந்து கொள்ளவேண்டும். எந்தவித மதிப்பீடும் இருக்கக்கூடாது. கடிதம் எழுதுபவர் தனது சொந்த வாழ்க்கை அனுபவத்தை எழுதலாம். முதல் கடிதத்திற்குப் பிறகு இந்த சானலில் இணைந்திருப்பதும் நிறுத்திக்கொள்வதும் கடிதத்தை எழுதுபவர் அல்லது பெற்றுக்கொள்பவரின் தனிப்பட்ட விருப்பத்தைப் பொறுத்ததாகும்.
அசாமில் பிறந்து வளர்ந்த பரோமிதா 12 வயது முதல் கடிதங்கள் எழுதி வருகிறார்.
”வெளியிடங்களுக்குச் சென்று சக வயதுடைய குழந்தைகளை நாம் சந்தித்த காலங்களில் அவர்களுடன் நம் வீட்டு முகவரியை பரிமாறிக் கொண்டிருப்போம். கடிதங்கள் எழுதுவோம். இந்த நினைவுகள் என் மனதின் ஏதோ ஒரு மூலையில் எப்போதும் பசுமையாக இருந்து வருகிறது. ஒரு கடிதம் எழுதும்போது அதிக வெளிப்படைத்தன்மையுடன் இருக்கமுடியும். இதில் நான் என்னைப் பற்றி அதிகம் தெரிந்துகொண்டேன். கடிதம் எழுதுவது நம் கவலைகளை தீர்க்கும் ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும்,” என்று பரோமிதா ’நார்த்ஈஸ்ட் டுடே’ உடனான உரையாடலில் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் எந்தப் பகுதியில் இருப்பவர்களும் ஃபேஸ்புக் பக்கத்தில் கோரிக்கை வைப்பதன் மூலம் கடிதங்களைப் பெறலாம்.
இந்த சானல் பாதுகாப்பானதாகவும் அனைவரையும் உள்ளடக்கியதாகவும் இருக்கவேண்டும் என்பதே பரோமிதாவின் விருப்பம். குறிப்பிட்ட கடிதங்களைத் தேர்வு செய்து அதை எழுதியவர்களின் சம்மதத்துடன் அவற்றைத் தொகுத்து புத்தகமாக வெளியிட திட்டமிட்டுள்ளார்.
கட்டுரை: THINK CHANGE INDIA