வாழ்க்கையை மாற்றிய நியூஸ் பேப்பர்; மாதம் 3 லட்சம் சம்பாதிக்கும் லலிதா!
மாதம் 3-3.5 லட்சம் வரை வருமானத்தை ஈட்டுகிறார் லலிதா!
மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் பிறந்தவர் லலிதா. இயற்பியல் பட்டதாரியான இவருக்கு 20 வயதில் திருமணம் முடிக்கப்பட்டது. தற்போது 35 வயதான அவர், தொழில்முனைவோராக வேண்டும் என்று முனைப்புடன் இருந்தார். இதன் ஒரு முயற்சியாக 'கராச்சி ஆத்வான்’ என்ற உணவுக்கடையை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இது முழுக்க முழுக்க வீட்டுச் சாப்பாட்டை போலவே இருக்கும் உணவகம்.
“கராச்சி ஆத்வன்” என்ற பெயருக்கு மராத்தியில் ‘வீட்டை நினைவில் கொள்வது’ என்று பொருள்.
பாரம்பரிய, எளிமையான முறையில், வீட்டில் சமைத்த, சுவையான உணவுகளைக் கொடுப்பது மட்டுமல்லாமல், குறைந்த விலையில் விற்று வருகிறோம், என்கிறார் கராச்சி ஆத்வானின் நிறுவனர் லலிதா.
”நான் பொருளாதார ரீதியில் சுதந்திரமாக செயல்பட விரும்பினேன். வாழ்வாதாரத்தை நடத்த டியூஷன் எடுத்தேன். பிறகு சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முழுநேர பணியில் சேர்ந்தேன். பின்னர் அதிலிருந்து விலகிவிட்டேன்,” என லலிதா தனது கடந்த காலத்தை நினைவுகூர்கிறார்.
தான் ஒரு முதலாளியாக வேண்டும் என்ற எண்ணம் தான் அவரை சொந்தத் தொழில் ஒன்றை தொடங்குவது குறித்து சிந்திக்கத் தூண்டியது. லலிதா எந்தவித ஐடியாவும் இல்லாமல் இருந்தபோது, சிறப்பாக சமைப்பதாக பலரும் அவரை புகழ்ந்துள்ளனர். இதையே ஐடியாவாக கொண்டு, தானேவில் 2016ம் ஆண்டு ஒரு சிறிய டிபன் சென்டரை தொடங்கினார். ஒருவருடத்துக்கும் மேலாக அதை நடத்தியுள்ளார்.
அவரை ஏமாற்றமடையச் செய்தது என்னவென்றால், அவர் வீட்டிலிருந்து தனது தொழிலை நடத்தியதால், சமுதாயத்தால் மற்ற உழைக்கும் பெண்களுக்கு வழங்கப்பட்ட மரியாதை அவருக்கு வழங்கப்படவில்லை.
வீட்டிலிருந்து வேலை செய்யும் பெண்கள் வெறும் ஹவுஸ் வொயிஃபாக மட்டுமே கருதப்படுகிறார்கள் என எண்ணிய அவர், வேலை செய்யவேண்டும் ஆனால் வீட்டில் அல்ல, வீட்டுக்கு வெளியில் என அவர் முடிவு செய்தபோது, அவருக்கு முன்னதாக மிகப்பெரிய சவால் ஒன்று காத்திருந்தது அது தான் ஜீரோ மூலதனம்
லலிதா ஒருநாள் செய்தித்தாளில் பிரிட்டானியாவில் ஒரு போட்டிக்கான விளம்பரத்தைக் கண்டார், அதில் வெற்றிபெற்றால் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
2019ம் ஆண்டு நடந்த அந்த போட்டியில் கலந்துகொண்டு பரிசை வெல்ல வேண்டும் என்ற லலிதா நினைத்தார். அதில் கலந்துகொண்டு வெற்றிபெற்றார். இதன்மூலம் வரி விலக்கு போக, 7 லட்சம் அவரது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. அந்த பணத்தை தனது தொழிலுக்கு மூலதனமாக பயன்படுத்தி முன்னேறத் தொடங்கினார் லலிதா. டிபன் கடை நடத்தி வந்தபோது, உணவுப் பாதுகாப்பு லைசன்சை வைத்திருந்தார்.
அவருக்கு இப்போது, கடைக்குச் சரியான அமைப்பை உருவாக்கவேண்டும் என்ற தேவை மட்டுமே இருந்தது. அதற்கு 3 மாதங்கள் தேவைப்பட்டது. நான் அந்த 6 லட்சத்தில் 1 லட்சம் அல்லது அதற்கும் குறைவான காசை சேமித்து வைக்க வேண்டும் என்று முடிவெடுத்திருந்தார் லலிதா. அவர் நினைத்தது போலவே, அவர் சேமித்த காசு கொரோனா ஊரடங்கு காலத்தில் அவருக்கு பெரிதும் உதவியாக இருந்தது.
ஆரம்பத்தில் தானே-வில் அவரது பட்ஜெட்டுக்கு தகுந்த கடையை கண்டுபிடிப்பதில் அவர் மிகவும் சிரமப்பட்டார். வேலை, படிப்பு, இன்ன பிற காரணங்களால் வீட்டை விட்டு தனியாக தங்கியிருக்கும் பேச்சுலர்ஸ்களுக்கு தரமான வீட்டு சாப்பாட்டை வழங்கும் தன்னுடைய லட்சியத்துக்கு தகுந்த இடத்தை தேடிக்கொண்டிருந்தார். தரமான வீட்டு சாப்பாட்டை குறைந்த விலையில் கொடுக்க வேண்டும் என்பது தான் என் எண்ணம் என்கிறார் லலிதா.
ஒருவழியாக 2019ம் ஆண்டு ஜூலை மாதம் 9ம் தேதி கடையை திறந்தார். அன்று ஒரே நாளில் அவருக்கு 1,200ரூபாய் வருமானம் கிடைத்தது. அன்றிலிருந்து அவரது வருவாய் அதிகரிக்கத்தொடங்கியது. கொரோனா ஊரடங்கு காலத்தில் கூட அவருக்கு நிலையான வருவாய் கிடைத்தது.
மாதம் 3-3.5 லட்சம் வரை வருமானத்தை ஈட்டுகிறார் லலிதா. கடந்த 1 வருடத்தில் மட்டும் 25-30 லட்சம் வரை வருமானம் கிடைத்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் அவர் கடையை பூட்டியிருந்தாலும், உணவை சமைத்து டெலிவரி செய்யும் முறையைக் கையாண்டார். அதனால், அந்த ஊரடங்கு காலத்திலும் அவருக்கான வளர்ச்சி என்பது குறையவில்லை. சூழலுக்கு தகுந்தாற்போல மாற்றிக்கொள்ளும் பண்பு தான் நிலைக்க வைக்கும் என்பதற்கு லலிதா ஒரு உதாரணம்.
கராச்சி அத்வான் ஒரு உணவகம் மட்டுமல்ல; அது லலிதாவின் கனவு. அவர் ஒரு வணிக தலைவியாக இருக்க வேண்டும் என்று நினைத்தார். அது கைக்கூடியது.
வாழ்த்துகள் லலிதா!