சென்னை நிறுவனம் GoBumpr 100% பங்குகளை TVS Automobiles இடம் விற்றது ஏன்?
நிறுவனர் கார்த்தியுடன் பிரத்யேக நேர்காணல்
ஓலா, ஜோமேட்டோ போல் இந்த ஸ்டார்ட் செயலியும் ஒரு அக்ரிகேட்டர்தான். இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் செல்பவர்களுக்கு திடீரென வாகனம் பழுதானால் அன்றைய திட்டம் முழுவதும் வீண்தான். பெரிய பிரேக்டவுன் ஆகவேண்டாம், ஒரு பஞ்சர் ஆனாலே போதும் அன்றைய ப்ளானை காலி செய்துவிடும். மெக்கானிக் ஷாப்பை தேடிப்பிடித்து வண்டியை சரி செய்வதற்குள் பொழுது முடிந்துவிடும்.
அதனால் நகரில் உள்ள மெக்கானிக் வொர்க்ஷாப்களை தொழில்நுட்பம் மூலம் இணைத்தது 'கோபம்பர்' ’GoBumpr' குழு. ஐஐஎம்-ல் படித்த கார்த்திக், நந்தகுமார் மற்றும் சுந்தர் ஆகியோர் இணைந்து இந்த நிறுவனத்தை 2015ம் ஆண்டு தொடங்கினார்கள். தற்போது சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் பூனே ஆகிய இடங்களில் 1,000க்கும் மேற்பட்ட வொர்க்ஷாப்கள் 'கோ பம்பரில்' இணைந்திருக்கின்றன.
இதுதவிர GoBumpr@home என்னும் புதிய திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் வீட்டுக்கு வந்து வாகனத்தை எடுத்துக்கொண்டு சர்வீஸ் செய்துகொடுக்கிறார்கள் இவர்கள்.
ஆறு ஆண்டுகளாக சீரான வளர்ச்சியை அடைந்த இந்த நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை டிவிஎஸ் ஆட்டோமொபைல் சொல்யூஷன்ஸ் நிறுவனம் வாங்கி இருக்கிறது. புதிதாக கி மொபிலிட்டி (Ki Mobility Solutions) என்னும் பிரிவை டிவிஎஸ் ஆட்டோமொபைல் உருவாக்கி இருக்கிறது. மேலும் கி மொபிலிட்டி நிறுவனம் 85 கோடி ரூபாய் நிதியையும் திரட்டி இருக்கிறது.
பிரதிதை (Pratithi) இன்வெஸ்ட்மெண்ட் ட்ரஸ்ட் (இன்ஃபோசிஸ் நிறுவனர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் மற்றும் சீ லிங்க் கேபிடல் பார்ட்னர்ஸ் ஆகியோர் இந்த முதலீட்டை செய்திருக்கிறார்கள்.
இதில் மைடிவிஎஸ் மற்றும் கோபம்பர் ஆகிய இரு பிராண்ட்கள் செயல்படும். மைடிவிஎஸ் ஆப்லைன் மூலம் செயல்படும், கோபம்பர் ஆன்லைன் மூலம் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கோபம்பர் நிறுவனத்தில் சென்னை ஏஞ்சல்ஸ், keiretsu உள்ளிட்ட சில அமைப்புகள் முதலீடு செய்திருக்கின்றன. இதுவரை 17 கோடி ரூபாய் திரட்டப்பட்டிருக்கிறது. இறுதியாக நடந்த நிதி திரட்டலில் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 77 கோடி ரூபாய் என சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், கோபம்பர் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான கார்த்திக் உடன் உரையாடினோம். வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருந்த நிறுவனத்தை 100% விற்பதற்கான சூழல் என்ன? அடுத்தக்கட்ட திட்டம் உள்ளிட்ட சில விஷயங்களை உரையாடினோம்.
நீங்களே நிறுவனத்தை நடத்தும் பட்சத்தில் இன்னும் வளர்ச்சியை அடைந்திருக்கலாமே?
நாங்கள் டிஜிட்டலில் மட்டுமே செயல்படும் நிறுவனம். அதே சமயம் டிவிஎஸ் ஆப்லைன் மூலமும் செயல்பட்டுவருகிறது. இந்த இரு நிறுவனங்களும் இணையும்போதும் மேலும் வளர்ச்சியை அடைய முடியும். இதுவரை நான்கு நகரங்களில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். டிவிஎஸ் நிறுவனத்துக்கு சந்தையில் ஏற்கெனவே செயல்பாடுகள் இருப்பதால் உடனடியாக மேலும் பல நகரங்களில் விரிவாக்கம் செய்ய முடியும். தவிர எங்களிடம் 1,000க்கும் மேற்பட்ட வொர்க்ஷாப்கள் உள்ளன. இதன் மூலம் சந்தை விலையை விட குறைந்த விலையில் உதிரிபாகங்கள் டிவிஎஸ் மூலம் கொடுக்க முடியும். இதனால் அனைத்து தரப்புக்கு சாதகம் ஏற்படும்.
இதுவரை 5 லட்சம் சர்வீஸ்கள் எங்கள் மூலமாக நடந்திருக்கின்றன. தொழில்நுட்பப் பலத்துடன் நெட்வொர்க்கும் இணையும்போது வளர்ச்சி வேகமாக இருக்கும். சந்தையில் இருக்கும் மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது அதிக சாதமான சூழல் எங்களுக்குக் கிடைக்கும். தற்போது செயலியில் மட்டும் செயல்படும் நிறுவனங்கள் உள்ளன. இதுபோது ஆப்லைன் நெட்வொர்க் கிடைக்கும் போது பெரிய வளர்ச்சியை அடைய முடியும்.
பல கட்டமான நிதி திரட்டி இருக்கிறீர்கள்? முதலீட்டாளர்களுக்கு எத்தனை மடங்கு லாபம் கிடைத்தது? உங்களுக்கு என்ன கிடைத்தது?
எங்களுக்கு என்ன கிடைத்தது முதலீட்டாளர்களுக்கு என்ன கிடைத்தது என்பதை பொதுவெளியில் பகிர்வது நாகரீகமாக இருக்காது. ஆனால் எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்த ஒவ்வொரு முதலீட்டாளரும் லாபத்துடனே வெளியேறி இருக்கிறார் என்பதை மட்டும் கூறமுடியும். அதேபோல எங்களுக்கு ரொக்கம் + பங்குகள் அடிப்படையில் எங்களது பங்குகளை டிவிஎஸ் வாங்கிகொண்டது.
நிறுவனர்களின் திட்டம் என்ன?
நாங்கள் நிறுவனத்தில்தான் இருக்கிறோம். அடுத்தகட்ட வளர்ச்சிக்கான பணிகளை செய்ய வேண்டி இருக்கிறது. ஆப்லைன் மற்றும் ஆன்லைன் இரண்டும் சேர்ந்து செயல்படும் சேவை மையங்கள் இல்லை என்பதால் சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும். அதற்கான நடவடிக்கையில் இருக்கிறோம் என கார்த்திக் கூறினார்.
வேலையைவிட்டு விட்டு தொழில் தொடங்குவது வெற்றி என்றால், அந்தத் தொழிலில் இருந்து வெளியேறுவதும் வெற்றிதான் என சில நாட்களுக்கு முன்பு தைரோகேர் வேலுமணி கூறினார்.
கோபம்பர் குழுவுக்கு வாழ்த்துகள்.