24 மணி நேர ஹெல்ப்லைன் சேவையை அறிமுகம் செய்தது Uber
பயணத்தின் போது, பயணிகள் உபெர் பாதுகாப்பு குழு பிரதிநிதிகளை தொடர்பு கொண்டு உடனடி நிகழ்வுகள் குறித்து பேசலாம்.
இணைய கால்டாக்சி சேவை நிறுவனமான உபெர், பயணிகள் பாதுகாப்பிற்கான 24 மணி நேர ஹெல்ப்லைன் சேவையை துவக்கியுள்ளது. ஏற்கனவே உபெர் செயலியில் உள்ள, அவசர காலத்தில் காவல்துறையை தொடர்பு கொள்ள உதவும், எஸ்.ஓ.எஸ் (SOS) பட்டனுக்கு துணையாக இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய பாதுகாப்பு வசதி, அவசர நிலை அல்லாத பிரச்சனைகள் தொடர்பாக பயணிகள் உபெர் பாதுகாப்பு குழுவை தொடர்பு கொள்ள வழி செய்யும் என உபெர் நிறுவன செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. டிரைவருடனான பிரச்சனை, சக பயணிகள் தொல்லை, வாகன பிரேக் டவுன் தொடர்பாக பயணிகள் இதன் மூலம் புகார் தெரிவிக்கலாம்.
ஒரு பட்டனை அழுத்துவதன் மூலம் பயணிகள், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உபெர் பதில் குழுவை தொடர்பு கொள்ளலாம். இவற்றுக்கு பயிற்சி பெற்ற பிரதிநிதிகள் அடங்கிய, உபெர் நிகழ்வுகள் பதில் அளிக்கும் குழு பதில் அளிக்கும். இவ்வாறு பெறப்படும் புகார்கள் சீரான முறையில் தீர்த்து வைக்கப்படும் என்றும் உபெர் தெரிவித்துள்ளது.
24 மணி நேர ஹெல்ப்லைன், காவல்துறை உதவியை நாடும் 100 சேவைக்கு மாற்று இல்லை என்றும், எனினும் பயணிகள் மற்றும் டிரைவர்கள் உடனடி பிரச்சனைகள் குறித்த தீர்வை நாட உதவும் வழி என்றும் உபெர் தெரிவித்துள்ளது.
”பயணிகள் அளிக்கும் கருத்துகள் மற்றும் அவர்கள் தொடர்பு கொள்ள விரும்பும் முறை தொடர்பான கருத்துகள் அடிப்படையில் பாதுகாப்பு தரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்தி வருகிறோம். இதன் அடிப்படையில், 24 மணிநேர ஹெல்ப்லைன் சேவையை அறிமுகம் செய்துள்ளோம். பயணங்களின் போது உதவி தேவை எனில், பயணிகள் எந்த நேரமும் இந்த சேவையை அணுகலாம்.”
இது தொடர்பாக உபெர் இந்தியா மற்றும் தெற்காசிய பிராந்திய செயல்பாடுகளுக்கான தலைவர் பவன் வைஷ் கூறியுள்ளார். உபெர் உதவி ஹெல்ப்லைன் எண், உபெர் செயலியில், பாதுகாப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பு கவச ஐகானை கிளிக் செய்வதன் மூலம் இதை அணுகலாம். பாதுகாப்பு ஐக்கானை கிளிக் செய்துவிட்டு, ஸ்வைப் செய்வதன் மூலம் உபெர் பிரதிநிதியுடன் பேசலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உபெர் நிறுவனம் பயணிகள் பாதுகாப்பிற்காக தொடர்ந்து மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக இந்த வசதி அமைந்துள்ளது என உபெர் மேலும் தெரிவிக்கிறது.
தமிழில்: சைபர்சிம்மன்