'வாடகை கட்ட முடியல...' - பெங்களூரு அலுவலகத்தை காலி செய்த Byju's!
கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் பைஜூஸ் நிறுவனம் தற்போது வாடகை கட்ட வழியில்லாமல் பெங்களூரு அலுவலகத்தை காலி செய்துள்ளது ஸ்டார்ட்அப் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கடும் நிதி நெருக்கடியில் சிக்கித்தவித்து வரும் பைஜூஸ் நிறுவனம் தற்போது வாடகை கட்ட வழியில்லாமல் பெங்களூரு அலுவலகத்தை காலி செய்துள்ளது ஸ்டார்ட்அப் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கொரோனா காலத்தில் கொடிக்கட்டி பறந்த எஜுடெக் நிறுவனமான பைஜூஸ், தற்போது கடன் மற்றும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் ஐகானாக விளங்கிய பைஜூஸ், நாளுக்கு நாள் அதிக அளவிலான பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் திணறி வருகிறது, தற்போது அலுவலகங்களை மூடும் நிலைக்கு வந்துள்ளது.
பைஜூஸ் அதன் செலவுகளைக் குறைக்கும் முயற்சியின் ஒருபகுதியாக அலுவலகங்களை காலி செய்து வருகிறது. பெங்களூரில் உள்ள பிரெஸ்டீஜ் டெக் பார்க்கில் உள்ள 4 லட்சம் சதுர அடி அலுவலக இடத்தை நிறுவனம் சமீபத்தில் காலி செய்துள்ளது.
இந்த அலுவலக இடத்தின் குத்தகை இந்த ஆண்டு தொடக்கத்தில் ரத்து செய்யப்பட்டது. வைப்புத்தொகையைப் பயன்படுத்தி நிலுவையில் உள்ள வாடகை செலுத்தப்பட்டுள்ளது. மேலும், சில அலுவலகங்கள் தொடர்பாக அந்தந்த உரிமையாளர்களுடன் தகராறு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாத வாடகை ரூ.4 கோடி:
பைஜூஸின் தாய் நிறுவனமான திங்க் அண்ட் லேர்ன் பிரைவேட் லிமிடெட், மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவில் உள்ள அலுவலகத்தை பிரஸ்டீஜ் குழுமத்திடம் இருந்து குத்தகைக்கு எடுத்தது. இந்த அலுவலக இடத்துக்கு மாதந்தோறும் ரூ.4 கோடி வாடகை செலுத்த வேண்டும்.
தற்போது, அந்நிறுவனத்தின் நிதி நிலை கடுமையாக சரிவடைந்துள்ளதால், சில அலுவலகங்களின் வாடகையை உரிய நேரத்தில் செலுத்த முடியாமல் பைஜூஸ் திணறி வருகிறது. தி எகனாமிக் டைம்ஸின் அறிக்கையின்படி,
வாடகை ஒப்பந்தம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் முடிவடைந்ததாகவும், அதே சமயம் சொத்தின் மீதான டெபாசிட் தொகை வாடகை செலுத்துவதில் ஏற்பட்ட தவறுகளுக்கு ஈடாக சரி செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெங்களூரில் உள்ள மற்றுமொரு அலுவலக இடமும் பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளது. கல்யாணி டெக் பூங்காவில் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது இடத்தை கல்யாணி டெவலப்பர்ஸிடமிருந்து பைஜூஸ் நிறுவனம் குத்தகைக்கு எடுத்துள்ளது. இந்த கட்டிடத்திற்கான வாடகையை கடந்த 10 மாதங்களாக பைஜூஸ் செலுத்தவில்லை எனக்கூறப்படுகிறது. இதன் மூலம் கல்யாணி டெவலப்பர்ஸ் பைஜூவின் டெபாசிட்டில் இருந்து 7 மாத வாடகையை எடுத்துக்கொண்டதோடு, சட்டப்படி நோட்டீஸும் அனுப்பியுள்ளது.
ஒப்பந்தத்தை கைவிட்ட மெஸ்ஸி:
பைஜூஸ் நிறுவனம், கால்பந்து பிரபலம் லியோனல் மெஸ்ஸியுடனான தனது ஒப்பந்தத்தையும் கைவிட்டுள்ளது, நவம்பர் 2022ம் ஆண்டு பைஜூஸின் உலகளாவிய பிராண்ட் தூதராக மெஸ்ஸி நியமிக்கப்பட்டார். இதற்காக மூன்று ஆண்டுகளுக்கு $5 மில்லியன் முதல் $7 மில்லியன் வரை சம்பளம் வழங்க மெஸ்ஸியுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

தற்போது ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ள பைஜூஸ் நிறுவனம், நடப்பு ஆண்டின் தொடக்கத்திலேயே மெஸ்ஸிக்கு இழப்பீடு வழங்கியுள்ளது. நிதி நெருக்கடி மற்றும் செலவினங்களை குறைப்பதற்காக மெஸ்ஸி உடனான ஒப்பந்தம் முடிவுக்கு வந்திருந்தாலும், மீண்டும் இதனை புதுப்பிக்குமா அல்லது முற்றிலும் நிறுத்தப்படுமா என்பது குறித்து நிறுவனம் தெளிவாக முடிவெடுக்க முடியாத நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
கொஞ்சம் நிம்மதி:
பைஜூஸ் நிதியுதவி மூலகாக சற்றே நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது. சமீபத்தில், நிறுவனம் உரிமை வெளியீட்டை அறிமுகப்படுத்தியது. இந்த சலுகை இம்மாத இறுதியில் முடிவடைய உள்ள நிலையில், பைஜூஸ் பல்வேறு முதலீட்டாளர்களிடமிருந்து 300 மில்லியன் டாலர்கள் வரை நிதிக்கான உறுதிப்பாட்டை பெற்றுள்ளது.

இந்த சுற்று நிதியுதவியானது பிப்ரவரி இறுதிக்குள் $220 மில்லியன் - $250 மில்லியன் மதிப்பீட்டில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, பைஜூஸ் நிறுவனம் தனது நிறுவனத்தின் மதிப்பீட்டை 99 சதவீதம் குறைத்து 220-250 மில்லியன் டாலர்களாகக் குறைத்துள்ளது. இந்த மதிப்பு ஒரு காலத்தில் 22 பில்லியன் டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.